ADVERTISEMENT

கஜா விட்டுச்சென்ற சுவடுகள்....இன்றளவும் மாறவில்லை!! கண்டுகொள்ளுமா தமிழக அரசு?? 

11:33 AM Nov 16, 2019 | Anonymous (not verified)

டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலின் கோர தாண்டவம் நிகழ்ந்து ஓராண்டு ஆகிவிட்டது. ஆனாலும் புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதுதான் தற்போதைய நிலவரமாக இருக்கிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் துவங்கிய கஜா புயல் 16 ம் தேதி அதிகாலை வேதாரண்யம் கடற்பகுதியில் கரையை கடந்து நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை நாசப்படுத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயலில் அதிகம் பாதிப்புக்குள்ளான வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன, குடியிருந்த வீடுகளும் இடிந்து நாசமாகின. கால்நடைகளும் இறந்து தண்ணீரில் மிதந்தன, மீனவர்களின் படகுகளும், வலைகளும் புயல் காற்றில் சிதைந்து மண்ணோடு மண்ணாகி புதைந்தன. காற்றின் வேகத்தில் கடல் சேர் கிராமங்களில் புகுந்து வீடுகளையும், விவசாய நிலங்களையும் பாழாக்கின. நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் முழுவதும் பதறாகிபோகின, உப்புத்தயாராகும் உப்பளங்கள் முழுவதும் நிர்மூலமாகின, கோடியக்காடு உருத்தெரியாமல் சிதைந்துபோனது, அதில் வாழ்ந்த விலங்கள் பலியாகி கடற்கரை மணலில் புதைந்துகிடந்தன. தகவல் தொடர்பு, மின்கம்பங்கள் முரிந்து நாசமாகியது.

பாதிப்புக்கு உள்ளாகி வீதிகளில் நின்ற மக்களுக்கு தொண்டு நிறுவனங்களும், சமுக ஆர்வலர்களும் ஓடிவந்து உதவிகள் செய்தனர். மிகவும் தாமதமாக முதற்கட்ட நிவாரணத்தை அரசு வழங்கியது. ஆனாலும் முழுமையாக சென்றடையவில்லை என்கிற குமுறல் ஓராண்டாகியும் அந்தப்பகுதியில் தற்போதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சிதைந்த வீடுகளைக்கூட சரி செய்யமுடியாத நிலையிலும், முறிந்த மரங்களைக்கூட அப்புறப்படுத்த முடியாத நிலையிலும் தான் அந்த மக்கள் இருக்கின்றனர்.

இது குறித்து பாதிப்புக்குள்ளான கோடியக்கரை மக்களோ," எங்களின் வாழ்வாதாரமே உப்பளத் தொழில்தான், புயலால் மொத்த தொழிலும் பாதிப்பாகிவிட்டது. நான்கில் ஒரு பங்கு உப்பளங்கள் கூட தற்போது மிஞ்சவில்லை. ஒரு ஆள் செய்ய வேண்டிய வேலையை தற்போது பத்து ஆட்கள் செய்து கிடைக்கிற கூலியை வைத்துக்கொண்டு ஜீவனம் செய்கிறோம். அரசு காங்கிரீட் வீடுகள் கட்டித் தருகிறோம், என்று கூறினார்கள் பேச்சளவில் இருக்கிறதே தவிர இன்று வரை எங்களை திரும்பி கூட பார்க்கவில்லை. ஒரு மூட்டை உப்பை அள்ளி தைத்து அடுக்குவதற்கு 4 ரூபாய் தான், இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்."என்று வேதனையோடு கூறுகிறார்கள் அந்த மக்கள்.


புயலில் கடுமையாக பாதிப்புக்குள்ளான கத்தரிப்புலம் விவசாயி கண்ணனோ," கோடிக்கணக்கான தென்னைமரங்கள், உயிர்வாழ் மரங்களும் முறிந்துபோனது, அதற்கு எடுக்கப்பட்ட முதற்கட்ட கணக்கெடுப்பிலேயே பாதிப்பேருக்கு மேல் நிவாரணம் கொடுக்கப்படவில்லை. ஒரு தென்னங்கன்றை பயிரிட்டு மரமாக்க முப்பது வருஷம் ஆகிவிடும். சாய்ந்த, முறிந்த மரங்களைக் கூட இன்னும் அப்புறப்படுத்த முடியாத நிலமையில்தான் பாதிப்பேருக்கு மேல் இருக்கிறோம். அமைச்சர்களும், அதிகாரிகளும் புயல் அடித்த பிறகு, வந்தவர்கள் அதை செய்கிறோம், இதை செய்கிறோம், என்றார்களே தவிர ஒன்றையும் திரும்பிக்கூட பார்க்கவில்லை." என்கிறார் கவலையாக.

புயல் கரையை கடந்த புஷ்பவனம் மீனவர் கிராமமோ சகதியில் சிக்கி சின்னாபின்னமாகி நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை. அங்குள்ள மீனவர் மனோகரனோ," புயல் கரையை கடந்து ஓராண்டாகிவிட்டது, புயல் கொண்டுவந்து ஒதுக்கிய கடல் சேர், வீடுகளிலும் தெருக்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து மொத்த கிராமத்தையும் புரட்டிப்போட்டது, ஆனால் அந்த சேரை கூட அப்புறப்படுத்த அரசு ஆர்வம் காட்டவில்லை. எங்களுடைய வாழ்வாதாரம் மீன்பிடிதான். சுனாமியில் கூட இப்படி நொடித்துப்போகவில்லை, இந்த புயல் எங்களை முழுமையாக புரட்டிப் போட்டுவிட்டது. அரசும் எங்களை கைவிட்டு விட்டது, இனி வரும் காலங்களிலாவது அரசு எங்களின் வாழ்வாதரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்," என்றார் வேதனையோடு.


இது குறித்து நாகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம், "கஜா புயல் தாக்கி ஒராண்டுகள் நிறைவடையப்போகிறது. வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் ஒரு லட்சம் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேதாரண்யத்தில் அறிவித்தார். ஆனால், இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வீடு கூட இன்னும் கட்டித்தரப்படவில்லையே" என்று கேட்டதற்கு பதிலளித்தவர்.

"பட்டா இருப்பவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதில் சிக்கல் எதுவும் இல்லை. ஆட்சேபத்திற்குரிய அரசு நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கி அதன் பின் வீடு கட்டித் தரும் நிலையே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் மூலம் ஒவ்வொரு வீடும் 10 லட்ச ரூபாய் செலவில் அரசு சார்பில் அடுக்குமாடி வீடுகளாக கட்டித் தரப்படும். வேதாரண்யம், தலைஞாயிறு பேரூராட்சிக்கு 6000 வீடுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது." என்று கூறி முடித்தார்.

கஜா புயலின் கோர தாண்டவத்தை கண்டு கலங்காத மனித மனமே இல்லை என்று சொல்லலாம். ஆனால் ஆளும் அரசோ அந்த நேரத்தில் மட்டும் கண்டுகொண்டதோடு, கைவிட்டுவிட்டது. கேட்பாரற்று கிடக்கும் அந்த மக்கள் இன்னும் அரசை மட்டுமே நம்பி காத்திருக்கிறார்கள்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT