ADVERTISEMENT

அதானி, அம்பானிகளிடம் இந்தியாவின் சொத்துகளை தருவதைவிடவா இது தேசத் துரோகம்..? - பியூஷ் மனுஷ் கேள்வி!

05:05 PM Feb 18, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சில நாட்களுக்கு முன்பு 'டூல்கிட்' வெளியிட்டதால், இளம்பெண் திஷா ரவி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சமூக ஆர்வலர் பியூஷ் மனுஷ் தெரிவித்துள்ள கருத்துகள் வருமாறு, "சிலருக்கு பெண்கள் எதைச் செய்தாலும் பிடிக்காது. அவர்கள் கேள்வி கேட்டால்கூட பெரும்கோபம் வரும். அந்த வகையில் அரசியல்வாதிகள் சிலருக்குத் தற்போது பெண்கள் மீது கோபம்வருகிறது. நாங்கள் போராட்டத்தின் போது கூட பெண்களை முதலில் அனுப்புவோம். ஏனென்றால் அப்போதுதான் காவலர்கள் அவர்களிடம் மரியாதையாகப் பேசுவார்கள், அவமரியாதை செய்ய மாட்டார்கள் என்று. ஆனால், தற்போது டூல் கிட் வெளியிட்டார்கள் என்று ஒரு பெண்ணை முறையற்ற வகையில், கைதுசெய்து பெங்களூரில் இருந்து டெல்லி அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

அவர் அதில் என்ன சொல்லியிருந்தார், விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராடி வருகிறார்கள். 200 விவசாயிகள் இதுவரை இறந்துள்ளார்கள். அவர்களின் போராட்டத்திற்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இதில் என்ன தவறு இருக்கிறது. இதற்காக ஒரு பெண்ணை முறையற்ற வகையில் கைதுசெய்ய வேண்டுமா? நாட்டுக்கு எதிரானது என்றால் முதலில் ஆட்சியாளர்களுக்கு என்னவெல்லாம் நாட்டுக்கு எதிரானது என்று தெரியவேண்டும்.

நாட்டுக்கு எதிரானது எது என்றால், அதானி அம்பானிகளிடம் நாட்டுச் சொத்துகளைத் தருகிறீர்களே, அதுதான் மக்கள் விரோத காரியம். மக்கள் நன்மைக்கு எதிரானது. டூல் கிட் வெளியிடுவது ஒன்றும் மக்களுக்கு எதிரான காரியம் இல்லை. பெட்ரோல் விலையை 100 ரூபாய் ஆக்கி வைத்துள்ளீர்களே இதுதான் மக்கள் விரோதம். இதைத்தான் நாங்கள் மக்களுக்கு எதிரானது என்று கூறுகிறோம். சட்டமன்ற உறுப்பினர்களைப் பணம் கொடுத்து வாங்குவது, ஆட்சியை அபகரிப்பது, இந்து மக்களுக்கு ஆபத்து என்று கூச்சலிடுவது, இந்த வேலைகள் எல்லாம்தான் மக்கள் விரோதம். ஆனால், இதை எல்லாம் தொடர்ச்சியாக செய்துவிட்டு நாங்கள் மக்கள் ஆட்சி செய்கிறோம் என்று ஆட்சியாளர்கள் கதை விடுகிறார்கள். முந்தைய காங்கிரஸ் அரசு தவறுகள் செய்துள்ளது. மன்மோகன் சிங் அரசில் போபால் விஷ வாய்வு வெளியேறியதற்கு நாங்கள் எல்லாம் 200 கிலோ மீட்டர் நடந்துசென்று டெல்லிசென்று நீதி கேட்டோம். எங்களைச் சந்திக்க மன்மோகன் சிங் மறுத்துவிட்டார். அவர் பேசவில்லை என்பதற்காக அவருக்கு எதிராக ஒரு புகைப்படத்தைப் போட்டு அதில் பேசத் தெரியாதவர் என்று எழுதினேன். அதைப் போல் சிதம்பரம், சத்தீஷ்கரில் ஆடிய ஆட்டம் கொஞ்ச நஞ்சமில்லை. 3 லட்சம் பேர் அகதிகளாக மாறிப் போனார்கள்.

இவர்கள் எல்லாம் சென்று மத்தியில் பாஜக ஆட்சி வந்தது. நாட்டில் உள்ள அனைவரும் அகதி ஆனார்கள். இவர்கள் ஆட்சியில் சிக்கல் என்று பார்த்தால் அனைத்துமே அப்படித்தான் உள்ளது. எதற்கெடுத்தாலும் தேசியப் பாதுகாப்புச் சட்டம், தேசவிரோதச் செயல்பாடு என்று சொல்லி மக்களின் பக்கம் நிற்பவர்கள் அனைவரையும் தொடர்ச்சியாகக் கைது செய்து வருகிறார்கள். இதுதான் மக்கள் நல அரசா? இந்த மாதிரியான சட்டங்கள், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்கள் மீது பாய்வதில்லை, திருடர்கள் மீது பாய்வதில்லை, லஞ்சம் வாங்குபவர்கள் மீது போடப்படுவது இல்லை. ஆனால், அப்பாவி மக்கள் மீது தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. அவர்கள் அரசின் அச்சுறுத்தலுக்கு ஆட்படுத்தப்படுகிறார்கள். குறைந்தபட்சம் கருப்பு பணம் வைத்திருப்பவர்கள் மீதாவது இத்தகைய கொடுமையான சட்டம் பயன்படுத்தப்படுகிறதா என்றால் இல்லை. எதிர்த்துக் கேள்விகேட்க முடியாமல் இருக்கிறவர்கள் மீது மட்டும் இத்தகைய சட்டம் பயன்படுத்தப்படும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT