ADVERTISEMENT

"முகிலன் கேட்ட கேள்விகளை விவாதம் செய்தீர்களா... குற்றச்சாட்டை மட்டும் எப்படி விவாதம் ஆக்குகிறீர்கள்"

04:15 PM Jul 09, 2019 | suthakar@nakkh…


காணமல் போயிருந்த சமூக செயற்பாட்டாளர் முகிலன் தற்போது காவல்துறையினரால் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் காணாமல் போன நாளில் இருந்தே முகிலன் எங்கே என்று தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த திருமுருகன் காந்தியிடம், முகிலன் விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். இதோ அவரின் பதில்கள்...

கடந்த 140 நாட்களுக்கு மேலாக காணாமல் போயிருந்த முகிலன் தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார், அவருக்காக நீங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்துள்ளீர்கள். இதை எப்படி பாக்குறீங்க?

முகிலன் திரும்ப வந்தது மகிழ்ச்சி. எப்போதும் மனசை அழுத்திக்கிட்டு இருந்த வலி தற்போது மறைந்த நிலையில், அவர் வருகை மனதுக்கு சந்தோஷத்தை தருகிறது. ஆனா, அவரை அந்த நிலையில் பார்க்க ரொம்ப கஷ்டமா இருகிறது. மக்களுக்காக போராடுகின்றவர்களுக்கு மட்டும் ஏன் இந்த மாதிரி நடக்குது. 140 நாட்கள் அவரை மீட்க முடியாமல் போனதற்கு யார் காரணம். எந்த கேள்வி எழுப்பியதற்காக அவர் காணாமல் போனாரோ அந்த கேள்விகள் எல்லாம் தற்போதும் அப்படியே தான் இருக்கிறது. 140 நாட்களாக அதற்கான பதிலை யாரும் கூறவில்லை. வருத்தம் ஒருபுறம் இருந்தாலும், அவர் திரும்பி வந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

அவர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். இந்த புகார் சித்தரிக்கப்பட்ட ஒன்று என முகிலனின் மனைவி தெரிவித்துள்ளார். இதை நீங்கள் எப்படி பாக்குறீங்க?

இந்த சமூகம் சார்ந்த பிரச்சனைகளை அவர் எழுப்பிய நிலையில், அதுகுறித்து இந்த அரசாங்கம் எந்த பதிலும் கூறாமல், பிரச்சனையை திசை திருப்புகிறது. ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 பேரை யார் கொன்றது, அவங்க சாவுக்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வது என்று மக்கள் நலன் சார்ந்த கேள்விகளை யாராவது எழுப்பினால், அவர்களை திசை திருப்ப பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். பாலியல் குற்றச்சாட்டுகளை நாம் பேசி தீர்வு காண முடியாது. சம்பந்தபட்டவர்கள் மட்டுமே அதற்கு தீர்வு காணமுடியும். இப்படி எல்லாம் குற்றச்சாட்டு வைத்து முகிலனை கைது செய்யமுடியும் என்றால், பொள்ளாட்சி விவகாரத்தில் இந்த அரசாங்கம் என்ன செய்தது என்று நாம்தான் பார்த்தோமே. அரசாங்கத்தோட சுறுசுறுப்பு எப்படி இருந்துதுன்னு நாடே பார்த்ததே. மக்கள் எல்லாம் போராட்டம் நடத்தித்தானே குற்றவாளிகளை கைது செய்தார்கள். துடியலூர் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது என்ன நடவடிக்கை எடுத்தாங்க. ஆளுநர் மீதான குற்றச்சாட்டுக்கு இதுவரைக்கும் நமக்கு என்ன பதில் கிடைத்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT


சமூகத்துக்கு ஆதரவாக போராடுபவர்களின் மீது தொடர்ந்து பாலியல் ரீதியான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பாலியல் ரீதியான குற்றச்சாட்டுக்கு சம்பந்தபட்ட நபர்கள் தான், பேசி விவாதிக்க வேண்டும். குற்ற வழக்காக வேண்டுமானால் அதனை பதிவு செய்யுங்கள். எங்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில், இருக்கு. இந்த வழக்கை பத்தி விசாரிக்கிறீங்களா? விவாதம் செய்கின்றீர்களா? முகிலனை கண்டுபிடித்து கொடுங்கள் என்று கேட்டதற்காக என்மீது ஒரு வழக்கு போட்டு இருக்காங்க. இது விவாதம் ஆனதா, இல்லை. காவிரி உரிமையை பத்தி பேசியதற்காக வழக்கு போட்டு இருக்காங்க, இது விவாதம் ஆச்சா? இல்லை. என்மீது 48 வழக்குகள் போட்டுள்ளார்கள். இதுகுறித்து எந்த விவாதமும் எழவில்லை. இப்படி நீங்க போடும் அனைத்து வழக்குகளையும் விவாதம் ஆக்குங்க. முகிலன் மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது, அதற்கு அவர் பதில் சொல்ல வேண்டாமா, அவர் தரப்பை கேட்காமலே அவரை குற்றவாளியாக ஆக்கிவிடுவீர்களா? அவர் மேல்தான் தவறு உள்ளது என்று சமூக வலைதளங்களிலேயே பேசி முடித்துவிடுவீர்களா என்ன? அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு அவர் பதில் சொல்வதற்கு ஏதேனும் வாய்ப்பு இருக்கா. வாய்ப்பே இல்லை என்கிற போது நீங்களே விவாதித்து நீங்களே எப்படி முடிவு செய்வீர்கள். வழக்கு போடுங்கள், அதை நீதிமன்றத்தில் அவர் சந்திப்பார். ஆனால் மக்கள் பிரச்சனையில் அவர் கேட்ட கேள்விக்கு அரசு பதில் சொல்லியாக வேண்டும்.

முகிலனை கைது செய்து அழைத்துக்கொண்டு போதும்போது என்னை கடத்தி சென்றார்கள், மனதளவில் கொடுமைப்படுத்தினார்கள் என்று கூறியுள்ளார். இதை எப்படி பாக்குறீங்க?

ரொம்ப அதிர்ச்சியா இருக்கு. பாதிக்கப்பட்ட நபர் சொல்கிறார் தான் கடத்தப்பட்டதாக. இதுகுறித்து ஏதேனும் வழக்கு பதிவு செய்யப்பட்டதா என்றால், இல்லை. இது எவ்வளவு அதிர்ச்சியான ஒரு சம்பவம். நான்கு மாதமாக அவரை நீங்களே கண்டுபிடிக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கு எந்த பதிலும் கூறாமல், பாலியல் குற்றச்சாட்டு வழக்கைத்தான் நான் எடுப்பேன் என்றால், இந்த அரசாங்கத்தின் மீது சந்தேகம் வருமா வராதா?


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT