ADVERTISEMENT

தேஜஸ் ரயில் தமிழ்நாட்டிற்குத்தான் புதிது... இந்தியாவிற்கு அல்ல...

01:20 PM Mar 01, 2019 | tarivazhagan

தேஜஸ் அதிவேக விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி, இன்று கன்னியாகுமரியில் இருந்து காணொளி காட்சி மூலம் தொடங்கிவைக்கிறார். சென்னை-மதுரை இடையேயான 495 கி.மீ தூரத்தை இந்த ரயில் வெறும் 6 மணிநேரம் 30 நிமிடங்களில் இணைக்கிறது. 2018-ம் நிதியாண்டின் பட்ஜெட்டில் இந்த ரயில் சேவையைக்குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

தேஜஸ் ரயிலின் சிறப்பு அம்சங்கள்:


தேஜஸ் ரயில் மொத்தம் 15 பெட்டிகள் கொண்டிருக்கிறது.

ஒரு உயர் வகுப்பு பெட்டியும், 2 டீசல் ஜெனரேட்டர் பெட்டிகளும் அதில் அடங்கும்.

உயர்வகுப்பு பெட்டியில் இருபுறமும் எதிரெதிரே இரு இருக்கைகளோடு மொத்தம் நான்கு இருக்கைகள் ஒரு புறமும், அதேபோல் மற்றொரு புறமும் இருக்கிறது.
மற்ற பெட்டிகளில் பேருந்தில் அமைந்திருப்பதுபோல் வரிசையாக இருபுறமும் இரு இருக்கைகள் கொண்டிருக்கிறது.


உயர் வகுப்பு பெட்டிகளில் எதிரெதிரே இருக்கும் இரு இருக்கைகளுக்கும் இடையில் அமைக்கப்பட்டிருக்கும் மேசையில் சிறிய வீடியோ திரைகள் இருக்கிறது. அது அந்த மேசையினுள் பதிந்து இருக்கும் வகையிலும், நமக்கு தேவை எனும்போது ஒரு பட்டன் மூலம் வெளியே வரவைத்து பயன்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.

மற்ற பெட்டிகளில் ஒவ்வொரு இருக்கைகளின் பின்புறமும் சிறிய வீடியோ திரைகள் இருக்கிறது.

இந்த வீடியோ திரைகளில் ரயிலிலே கொடுக்கப்பட்டிருக்கும் வை-பை கொண்டு பயன்படுத்திக்கொள்ளலாம். அல்லது பயணிகள் தங்களின் பென்ட்ரைவ் கொண்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஒவ்வொரு பெட்டியின் நுழைவு வாயிலிலும் தானியங்கி டீ, காபி இயந்திரங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு இருக்கைக்கும் தனித்தனியே எல்.ஈ.டி. விளக்குகள்.

பெட்டியின் உட்புறமும் வெளிப்புறமும் தானியங்கி கதவுகள்.

பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியில் உள்புறம் மடக்கி அமைக்கப்பட்டுள்ள வெளியே தெரியாத சிற்றுண்டி மேசைகள் அமைக்கப்பட்டிருக்கிறது.

பயணிகள் இருக்கைகளின் கைப்பிடியின் பக்கவாட்டில் செல்போன் சார்ஜர் வசதி.

உயர் வகுப்பு பெட்டியில் 56 பேரும், இருக்கை வசதி கொண்ட பெட்டிகளில் தலா 78 பேரும் பயணிக்கலாம்.

இத்தனை சிறப்பு அம்சங்களும்கொண்ட இந்த ரயில் பெட்டியை தயாரித்தது சென்னையில் உள்ள ஐ.சி.எஃப். இரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை என்பது தனி சிறப்பு.

இன்று தொடங்கும் தேஜஸ் சொகுசு ரயில் சேவை நாளை முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. சென்னை-மதுரை இடையே பயனிக்கும் தேஜஸ் சொகுசு ரயில் திருச்சி, கொடைக்கானல் ரோடு ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். இந்த ரயில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை - திருச்சிக்கு ஏசி வசதிகொண்ட அமரும் வசதி கொண்ட பெட்டிகளில் (சேர் கார்) ரூ.690,முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்குரூ.1,485 கட்டணமாக நிர்ணயிக் கப்பட்டுள்ளது.

சென்னை - மதுரைக்கு சேர் கார் பெட்டிகளில் ரூ.895, முதல் வகுப்பு சொகுசு பெட்டிக்கு ரூ.1,940 எனவும், இதுதவிர, உணவுடன் சேர்த்து டிக்கெட் முன்பதிவு செய்தால், கட்டணம் மேலும் ரூ.100 முதல் ரூ.200 வரை அதிகரிக்கும்.

சென்னையிலிருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயிலின் எண் 22671 மற்றும் மதுரையில் இருந்து சென்னை வரும் தேஜஸ் ரயிலின் எண் 22672. வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும் தேஜஸ் ரயில் வாரந்தோறும் வியாழன் அன்று மட்டும் இயங்காது.

சென்னை எழும்பூரில் காலை 6 மணிக்கு புறப்படும் தேஜஸ் ரயில், திருச்சிக்கு 10.23 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து 10.25 மணிக்கு புறப்படும் ரயில் கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்தை காலை 11.38 மணிக்கு சென்றடைகிறது. அங்கிருந்து 11.40 மணிக்கு புறப்பட்டு மதுரையை மதியம் 12.30 மணிக்கு சென்றடைகிறது.


மதுரையில் இருந்து சென்னையை நோக்கி வரும் தேஜஸ் ரயில் எண் 22672, மதுரையில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு கொடைக்கானல் ரோடு ரயில் நிலையத்திற்கு 3.28 மணிக்கு வருகிறது. அங்கிருந்து 3.30 மணிக்கு புறப்படும் ரயில், மாலை 4.50 மணிக்கு திருச்சியை வந்தடைகிறது. அங்கிருந்து 4.52 மணிக்கு புறப்படும் ரயில் இரவு 9.30 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடைகிறது.


தேஜஸ் விரைவு ரயில் இந்தியாவிற்கு புதிதல்ல. தேஜஸ் ரயில் 2017-ம் ஆண்டு மே மாதம் முதலே பயன்பாட்டில் இருந்துவருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் இல்லை. மும்பை சி.எஸ்.டி முதல் கோவா கர்மாலி வரை அந்த தேஜஸ் ரயில் இயக்கப்படுகிறது. இங்கு இயக்கப்படும் ரயில் பெட்டிகளை பஞ்சாப் மாநிலத்தில் ஜலந்தர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆர்.சி.எஃப். எனும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டது. இந்த தேஜஸ் ரயில் வாரத்திற்கு ஐந்து நாட்கள் இயங்கிவருகிறது. இது 22119 மற்றும் 22120 எனும் ரயில் எண்ணில் இயங்கிவருகிறது. மும்பை சி.எஸ்.டி முதல் கோவா கர்மலி இடையேயான தூரம் மொத்தம் 551.7 கி.மீ. இந்த தூரத்தை மணிக்கு 56 கி.மீ எனும் அளவில் 8 மணி 30 நிமுடங்களில் இணைக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT