ADVERTISEMENT

தமிழகத்திலுள்ள முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு ?

10:45 AM Apr 04, 2019 | Anonymous (not verified)

பிரதமர் பதவியை மோடி தக்கவைத்துக் கொள்வாரா? என்கிற கேள்வி இந்த தேர்தலில் பரபரப்பாக எதிரொலிப்பதால் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட சிறுபான்மையின மக்களின் வாக்குகள் மிக முக்கியமாக கவனிக்கப்படுகிறது. அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவாகியுள்ளதால், அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்த சிறுபான்மையினரின் வாக்குகள் எந்தப் பக்கம் தாவும் என்கிற கேள்வியும் எதிரொலிக்கிறது. "தமிழகத்திலுள்ள முஸ்லிம்களின் வாக்குகள் யாருக்கு' என முஸ்லிம் தலைவர்களிடம் கேள்வி எழுப்பினோம்.

பேராசிரியர் ஜவாஹிருல்லா (தலைவர், மனிதநேய மக்கள் கட்சி) :
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை வரும் வழக்கமான தேர்தலாக தற்போதைய தேர்தலை முஸ்லிம் மக்கள் பார்க்கவில்லை. மதச்சார்பற்ற ஜனநாயகத்தின்படி இந்தியா பயணிக்க வேண்டுமா? அல்லது சர்வாதிகார அரசாக தொடர வேண்டுமா என்பதை தீர்மானிக்கக் கூடிய தேர்தலாக இது இருக்கப்போகிறது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என சொல்கிறது பா.ஜ.க.! காங்கிரஸ் கட்சியை குறிப்பிடுவதாக இதனை கருதக்கூடாது. காங்கிரசால் உருவாக்கப்பட்ட மதச்சார்பற்ற அரசியலமைப்புச் சட்டத்தை சிதைப்போம் என்பதுதான் அதன் உள்ளார்ந்த அர்த்தம். அதனை நிரூபிக்க மோடி அரசு செய்திருக்கும் அரச பயங்கரவாதம் பல உண்டு.

ADVERTISEMENT



தங்களுக்கு எதிரான அடக்குமுறைகளை சிறுபான்மையினர் கவனித்தபடிதான் இருக்கிறார்கள். முஸ்லிம் சமூகத்தின் உரிமையியல் பிரச்சனையான முத்தலாக் விசயத்தில் தலையிட்டு முஸ்லிம் ஆண்களை சிறைக்குள் தள்ளவேண்டுமென்கிற மோடியின் அராஜகத்தை முஸ்லிம்கள் மறக்கவில்லை. அதனால், மோடியை வீழ்த்தும் வலிமை மிகுந்த கூட்டணியை ஆதரிப்பதே முஸ்லிம் மக்களின் கடமையாக இருக்கிறது. அந்த வகையில் தி.மு.க. உருவாக்கியிருக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்குத்தான் முஸ்லிம்களின் 90 சதவீத வாக்குகள் பதிவாகும்.

இக்கூட்டணியிலுள்ள தோழமை கட்சிகள் அனைத்தும் சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக போராடுபவை. இன்றைக்கு முஸ்லிம்களுக்கு தேர்தலில் வாய்ப்பளிக்கப்படும் பிரதிநிதித்துவம் முக்கியமா? அடிப்படை உரிமைகளை தற்காப்பது முக்கியமா? என்கிற கேள்விகள் முன்னிறுத்தப்படுகின்றன. பிரதிநிதித்துவத்தைவிட, மதச்சார்பின்மையை பாதுகாத்து தேசத்தைக் காப்பாற்றுவதே முக்கியம் என்பதில் முஸ்லிம்கள் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறார்கள். அதேசமயம், சிறுபான்மை மக்களை திசை திருப்ப பா.ஜ.க.வின் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள மூன்றாவது அணிக்குப் போடுகிற ஒவ்வொரு ஓட்டும் பா.ஜ.க.வுக்கு போடுகிற ஓட்டுதான்; அது மோடியை மீண்டும் பதவியில் அமர்த்துவதற்கே உதவும் என்பதையெல்லாம் உணர்ந்தேயிருக்கிறார்கள் முஸ்லிம்கள். அதனால், மோடியை வீழ்த்தும் வலிமை கொண்ட தி.மு.க. கூட்டணிக்குத்தான் முஸ்லிம்களின் வாக்குகள் பதிவாகும்.

தெஹலான் பாகவி (தேசிய துணைத்தலைவர், எஸ்.டி.பி.ஐ):
மீண்டும் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி அமையக்கூடாது என்பதே முஸ்லிம் மக்களின் தெளிவான அரசியல். பா.ஜ.க.வை வீழ்த்தும் சக்தி தி.மு.க.வுக்குத்தான் இருக்கிறது என்பதை முஸ்லிம்கள் நம்பவில்லை. ஏற்கனவே பா.ஜ.க. கூட்டணியில் தி.மு.க. இருந்தது என்பதும், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தேவைப்பட்டால் பா.ஜ.க.வை ஆதரிக்க தி.மு.க. தயங்காது என்பதும் முஸ்லிம்களின் கருத்தாக இருக்கிறது. அதாவது, தி.மு.க.வுக்கு பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சி அல்ல என்பதை பிரச்சாரக் களத்தில் நாங்கள் முன்வைக்கிறோம். அதனால், பா.ஜ.க.வை எதிர்க்க தி.மு.க.தான் தீர்வு என்பது முஸ்லிம்களிடம் இல்லை. பா.ஜ.க.வுடன் எப்போதும் கூட்டணி இல்லை என தி.மு.க.வைவிட பா.ஜ.க.வை கடுமையாக விமர்சித்து பா.ஜ.க.வுக்கு எதிரான அரசியலை கட்டமைத்திருப்பவர் டி.டி.வி.தினகரன். அதேபோல தினகரன் வளர்ந்துவிடக்கூடாது என அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம் மூலமாக நெருக்கடியை கொடுக்கிறது பா.ஜ.க. தலைமை. பா.ஜ.க.வை தினகரன் எதிர்ப்பது என்பதைவிட தினகரனை பா.ஜ.க. எதிர்க்கிறது என்பதுதான் முக்கியமானதாக இருக்கிறது. அந்த வகையில், பா.ஜ.க. எதிர்க்கும் தினகரனை வலிமைப்படுத்துவதுதான் சரியான அரசியலாக இருக்குமென்பதில் முஸ்லிம்கள் உறுதியாக இருப்பதால் முஸ்லிம்களின் முழுமையான ஆதரவு தினகரனின் அணிக்கே கிடைக்கும்.

ADVERTISEMENT



புதுமடம் ஜாஃபர் அலி ( முஸ்லிம் சமூக அரசியல் ஆய்வாளர், எழுத்தாளர்):
தமிழகத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 80 லட்சம். சில தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தியாகவும் பல தொகுதிகளில் பரவலாகவும் முஸ்லிம்களின் வாக்குகள் இருக்கின்றன. முஸ்லிம்களின் வாக்கு வங்கிக்கு நீண்ட காலமாகவே முக்கியத்துவம் அளித்து வந்தன தமிழக அரசியல் கட்சிகள். ஆனால், அண்மைக்காலமாக திராவிட கட்சிகள் அதிலிருந்து விலகிவிட்டன.



மதச்சார்பற்ற அணியாக காட்டிக்கொள்ள மட்டுமே முஸ்லிம் கட்சிகளை பயன்படுத்திக்கொள்கின்றனர். அரசியல் கட்சிகளாகவும், அரசியல்சார்பற்ற அமைப்புகளாகவும் இச்சமூகம் சிதறியிருப்பதே இதற்குக் காரணம். மதச்சார்பற்ற கொள்கையைத் தூக்கிப் பிடிக்கும் தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகள் முஸ்லிம் வாக்குகளை தங்கள் பக்கம் கொண்டுவர எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருப்பதால் முஸ்லிம் வாக்குகள் தாமாகவே தங்கள் பக்கம் வந்துவிடும் என மனக்கணக்குப் போடுகின்றன. இது தவறு. இந்தமுறை முஸ்லிம் வாக்குகள் ஓரிடத்தில் குவியாமல் சிதறுவதற்கே வாய்ப்பு அதிகம். அந்த வகையில், பா.ஜ.க.வை தீவிரமாக எதிர்க்கும் தினகரனுக்கு முஸ்லிம் இளைஞர்களின் பெரும்பான்மை வாக்குகள் கிடைக்குமென்பதே கள நிலவரம். சுமார் 80 லட்சம் மக்கள் தொகை கொண்ட முஸ்லிம் சமூகம் அரசியலில் ஆளுமை செலுத்தும் சக்தியை இழந்து வருவது பெரும்சோகம்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT