ADVERTISEMENT

இன்று பி.டி.ஆர் செய்வதை அன்றே செய்த கலைஞர்! - தமிழக பட்ஜெட் சுவாரசியங்கள்!

07:07 PM Aug 12, 2021 | prithivirajana

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழக அரசின் பட்ஜெட் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் விவாதங்களைக் கிளப்பியுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடர் செப்டம்பர் 21 வரை நடைபெறப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கடந்த மே 7-ம், தேதி, தமிழத்தின் முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், தனது தலைமையில் தாக்கல் செய்யப்போகும் 'முதல்' தமிழக பட்ஜெட் தயாராகிவிட்டது. இது தமிழகத்தின் 'முதல்' டிஜிட்டல் பட்ஜெட் எனும் பெருமையைப் பெற்றுள்ளது. அதேபோல, தமிழ்நாட்டின் 'முதல்' வேளாண் பட்ஜெட்டும், இதே கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இப்படிப் பல 'முதல்'களை கொண்ட இந்த பட்ஜெட், எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு, தமிழக பொருளாதார நிலை குறித்து 'வெள்ளை அறிக்கை' வெளியிட்ட நிதியமைச்சர், 'வரி இல்லாமல் வருமானம் இல்லை' எனக் கூறியிருந்தார். இதனால், விலைவாசி ஏறப் போகிறது எனச் சிலர் பரபரக்கின்றனர். வேறு சிலரோ, 'நகைக் கடன்', 'கல்விக் கடன்', 'பெண்கள் உரிமைத் தொகை' உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என அடித்துச் சொல்கின்றனர்.

'பட்ஜெட்', 'நிதிநிலை அறிக்கை' ஆகிய வார்த்தைகளைக் கேட்கும்போதே நம்மில் சிலருக்கு 'கொட்டாவி' வந்துவிடும். பட்ஜெட்டால் நமக்கு என்ன ஆகப் போகிறது எனச் சிலர் விட்டத்தைப் பார்த்துப் விட்டேத்தியாகப் பேசத் தொடங்கிடுவர். 'மேத்ஸ்' அலர்ஜிதான் 'பட்ஜெட்' வரை பாய்வதாகச் சிலர் குமுறுவதையும் பார்க்க முடியும். இன்னும் சிலரோ, பட்ஜெட்டின் ஆதி அந்தத்தை ஆராய்ந்து, காது மடலுக்கு மேலே பேனாவை சொருகிவைத்து, பந்தா காட்டுவர். உண்மை என்னவென்றால், கொட்டாவி விடும் அளவுக்கு பட்ஜெட் போரும் அல்ல. பந்தா காட்டும் அளவுக்கு பிக் பேங் மர்மமும் அல்ல. ஆனால், இதுதான் நமது அன்றாட வாழ்வை தீர்மானிக்கிறது. இப்படி நமது அன்றாட வாழ்வை தீர்மானித்துக் கொண்டிருக்கும் பட்ஜெட்டைப் பற்றி எளிமையாகப் பார்க்கலாம்.

உண்மையில் பட்ஜெட் எனும் சொல், அரசு குறிப்பேட்டில் கிடையாது. 'ஆண்டு நிதிநிலை அறிக்கை' எனும் சொல்லே அரசு பயன்படுத்தும் சொல். வெகுமக்கள் மொழியாக ஊருக்குள் நடமாடி வருகிறது 'பட்ஜெட்'. பட்ஜெட் என்பது பிரெஞ்சு சொல்லான 'பவ்கெட்' என்பதன் திரிபு. பவ்கெட் என்றால், 'தோலால் ஆன பர்ஸ்' எனப் பொருள். ஆரம்பத்தில், தோலால் ஆன பெட்டியில் வைத்தே பட்ஜெட் ஆவணங்கள் கொண்டு செல்லப்பட்டன. இப்போதுதான் இது டிஜிட்டல் பரிணாமம் பெற்றுள்ளது. ஒரு குடும்பம், எப்படி வரவு செலவுகளைப் பார்த்து, தன்னை சரிவிலிருந்து மீட்டுக் கொள்ளுமோ அதைப் போலவே அரசும் செய்கிறது. அதை 'ஆண்டு நிதிநிலை அறிக்கை' அல்லது பட்ஜெட் என்பர்.

தமிழகத்தில் பட்ஜெட் தயாராகும் முறையே சுவாரசியமானது. அனைத்துத் துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபடும் முதல்வர், பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார். அதனடிப்படையில், ஒவ்வொரு துறை சார்ந்த அமைச்சர்களும் தங்களது துறைக்கான நிதித் தேவைகள் மற்றும் திட்டங்கள் குறித்து நிதி அமைச்சருக்குத் தகவல் தருவர். அதை அடிப்படையாக வைத்து, முதலில் பட்ஜெட் வரைவை நிதித்துறை அமைச்சகம் தயாரிக்கும். இந்த வரைவை, முதலமைச்சர் உள்ளிட்ட அனைத்துத் துறைக்கும் அனுப்பி கருத்து கேட்கப்படும். பட்ஜெட் வரைவு மீதான கருத்துகளை, அனைத்துத் துறை அமைச்சர்களும் நிதி அமைச்சருக்குத் தெரிவிப்பர். அதற்கேற்ப, மாற்றங்கள் செய்து முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படும். இதுவே இறுதியான பட்ஜெட்.

பட்ஜெட் இறுதி வடிவம் பெற்றதும், அதை எழுதும் பணி தொடங்கும். பட்ஜெட்டை பெரும்பாலும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளே எழுதுவர். தமிழில் பட்ஜெட் தயாரான பிறகு, அது ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்படும். முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தன் கைப்பட பட்ஜெட்டுகளை எழுதுவதையே பெரிதும் விரும்புவார். அதேபோல், கலைஞரும் ஒரு முறை தான் கைப்பட எழுதிய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சில நாட்களுக்கு முன்பு ட்வீட் செய்த நிதித்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல்ராஜன், இது ஐ.ஏ.எஸ் அதிகாரி எழுதிய பட்ஜெட் அல்ல அரசியல்வாதி எழுதும் பட்ஜெட் எனக் குறிப்பிட்டது நினைவிருக்கலாம். மேலும், அவர் "இது பிடிஆரின் பட்ஜெட் அல்ல முதல்வரின் பட்ஜெட்" எனவும் கூறியிருப்பார். எனவே பிடிஆரும், ப.சிதம்பரம் மற்றும் கலைஞரைப் போல, தானே இந்த பட்ஜெட்டை தயாரித்திருக்கிறார்.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக, ஆகஸ்ட் 14-ம் தேதி 'வேளாண் பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட உள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளதோடு, எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதன்மூலம், விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்தி விவசாயச் சிக்கல்களுக்கு உரிய தீர்வும் எட்டப்படும் எனக் கூறப்படுகிறது. கர்நாடகா, ஆந்திராவுக்குப் பிறகு விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை அறிமுகப்படுத்தும் மூன்றாவது மாநிலமாக தமிழகம் உள்ளது. அதேபோல, தமிழகத்தில் சோதனை முயற்சியாக 'டிஜிட்டல் பட்ஜெட்' தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்காக, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கையடக்கக் கணினியும் மேசைக் கணினி வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் பட்ஜெட், கடந்த பிப்ரவரி மாதம், மத்திய அரசால் முதல் முறையாக தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து, உத்திரப்பிரதேச அரசும் காகிதமற்ற டிஜிட்டல் பட்ஜெட்டை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் RBI ஆளுநர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட ஐந்து அறிஞர்களை ஒன்றிணைத்து, முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவை கடந்த ஜூன் மாதம் அமைத்தது தமிழக அரசு. 'பட்ஜெட்' தயாரிப்பில், இந்தக் குழுவின் ஆலோசனை இருப்பதாகக் கூறப்படும் நிலையில், பட்ஜெட் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதேநேரம், கஜானா காலியாகி, கடன் சுமை கூடியிருக்கும் போது, எப்படித் தேர்தல் நேர வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றப் போகிறது என எதிர்க்கட்சிகள் கண்கொத்தி பாம்பாகக் காத்திருக்கிறது. இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவோ, புயலைக் கிளப்ப முடிவு செய்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டு, அதையொட்டி, எஸ்.பி.வேலுமணி வீட்டில் நடந்த ரெய்டு இவையெல்லாம் மாஜிக்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது திமுகவின் அரசியல் காழ்ப்புணர்ச்சி எனச் சொல்லும் அதிமுக தலைமை, சட்டமன்றத்தில் நல்ல முறையில் பர்ஃபார்ம் செய்தால் மக்களிடம் அனுதாபம் தேடிவிடலாம் என நினைக்கிறது.

வேலைவாய்ப்பின்மை, காவேரி நதிநீர்ப் பிரச்சனை, விலைவாசி உயர்வு, கரோனாவால் நொடிந்து போன பொருளாதாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளால் வெந்து தணியும் தமிழகத்துக்கு விடியலைத் தருமா இந்த பட்ஜெட்? பொறுத்திருந்து பார்ப்போம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT