/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Untitled-1_213.jpg)
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி 159 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றி அபார வெற்றிபெற்றது. இதில் திமுக 133 சட்டமன்றத் தொகுதிகளைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்து, நேற்று (05/05/2021) மாலை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஆட்சிமன்றக் குழு தலைவராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாக, நாளை (07/05/2021) காலை 09.00 மணியளவில் ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறும் பதவியேற்பு விழாவில், தமிழகத்தின் முதலமைச்சராக முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பதவியேற்கிறார். இந்நிலையில் திமுக அமைச்சரவை பட்டியலைத் தமிழக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளது.
அதன்படி, மத்திய மதுரை சட்டமன்ற உறுப்பினர் பழனிவேல் தியாகராஜன் நிதியமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிக்கட்சி சார்பில் தமிழகத்தின் முதல்வராக இருந்த பி.டி. ராஜனின் பேரனான இவர் முதன்முறையாகக் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மத்திய மதுரை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கடந்த முறை தேர்தலிலும், அதன்பின்னதான சட்டமன்ற உறுப்பினர் பதவிக்காலத்திலும் மக்கள் மத்தியிலும், கட்சியிலும் நற்பெயரைச் சம்பாதித்திருந்த இவருக்கு, இந்த முறையும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. இத்தேர்தலிலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற அவர், தற்போது தமிழகத்தின் நிதியமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
1966 ஆம் ஆண்டு பிறந்த பழனிவேல் தியாகராஜன் வேதிப் பொறியியலில் தன் பட்டப்படிப்பைத் திருச்சி என்.ஐ.டி-யிலும் அதன்பின்னதான முதுநிலைப் பட்டப்படிப்பை அமெரிக்காவிலும் முடித்தார். பின்னர், நியூயார்க்மாநில பல்கலைக்கழகத்தில் பொறியியல் உளவியலில் முனைவர் பட்டமும், எம்ஐடி ஸ்லோன் ஸ்கூல் ஆப் மேனேஜ்மென்ட்டில் நிதி நிர்வாகத்தில் முதுநிலைப் பட்டமும் பெற்றார்.
படிப்பை முடித்த பிறகு, 1990 -ல் செயல்பாடுகள் மற்றும் அமைப்பு மேம்பாடு தொடர்பான தொழிலில் ஈடுபட்ட அவர், 2001 -ல், அமெரிக்காவின் மிகப்பெரிய வங்கித்துறை நிறுவனங்களில் ஒன்றான லேமன் பிரதர்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் மற்றும் கூட்டுச் சேவை மேலாளராக பணிபுரிந்தார். சில ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து விலகிய அவர், 2008 ஆம் ஆண்டு ஆஃப்ஷோர் கேபிடல் மார்க்கெட்ஸ் நிறுவனத்தின் தலைவராக ஆனார். பின்னர் சிங்கப்பூரில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியில் பணிக்குச் சேர்ந்து, அந்த வங்கியின் நிர்வாக இயக்குநராகவும் உயர்ந்தார். 2014 ஆம் ஆண்டு தனது பணியிலிருந்து விலகி, அரசியலில் ஈடுபடத் துவங்கிய இவர், நிதித்துறை மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறையில் சுமார் 20 ஆண்டுகள் சர்வதேச அளவிலான அனுபவத்தைக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)