ADVERTISEMENT

'விமானத்தில் ஒலித்த தமிழ்க்குரல்'.... -கேப்டன் பிரியா விக்னேஷின் சிறப்புப் பேட்டி! 

01:41 PM Jul 24, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னையிலிருந்து மதுரை செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணிகளுக்கான அறிவிப்பு தமிழில் அறிவிக்கப்படுவது போல ஒரு வீடியோ இணையத்தில் சில தினங்களுக்கு முன்னால் வைரலானது. தமிழில் அறிவித்த அந்தக் குரல் யாருடையது??? இனி தமிழ்நாட்டுக்குள் பயணிக்கும் விமானங்களில் தமிழில் தான் அறிவிப்புகள் அறிவிக்கப்படுமா என்பது போன்ற கேள்விகள் இணையத்தை முழுவதுமாக ஆக்ரமித்தன. தொடர் தேடுதலுக்குப் பின் அது தமிழ்நாட்டைச் சேர்ந்த கேப்டன் பிரியா விக்னேஷ் அவர்களுடைய குரல் என்பது தெரியவந்தது. அவருக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் தெரிவித்துவிட்டு அவருடன் நக்கீரன் குழுவினர் நடத்திய கலந்துரையாடலைப் பார்க்கலாம்.

தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது? பின் கதை ஏதேனும் உள்ளதா?

விமானியாக பயிற்சி எடுக்கும் போது 'விமானத்தில் அறிவிப்பு கொடுப்பது எப்படி' என்று ஒரு வகுப்பு எங்களுக்கு நடந்தது. நாங்கள் எல்லோரும் ஆங்கிலத்தில் அறிவிப்பு செய்து காட்டினோம். அப்போது பயிற்சியாளர் ஜெரால்ட் உங்கள் தாய்மொழியில் இதைச் செய்யலாம் என்று என்றாவது யோசித்து இருக்கிறீர்களா? ஒரு 5 நிமிடம் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் தாய்மொழியில் செய்து காட்டுங்கள் என்றார். முதன்முதலில் அப்போது தான் தமிழில் சொல்லிப்பார்த்தேன். பின் விமானியாக பணிக்கு சேர்ந்து பயணிக்க ஆரம்பித்தேன். அப்போது எல்லாம் ஆங்கிலத்தில் தான் அறிவிப்புகள் கூறினேன். ஒரு நாள் மராத்தியைத் தாய்மொழியாகக் கொண்ட 'அபிஜித் தோவல்' என்ற கேப்டனுடன் பயணித்தேன். அவர் என்னிடம் சில முக்கியமான தமிழ் வார்த்தைகள் கேட்டு ஆங்கிலத்தில் அறிவிக்கும் போது அதையும் சேர்த்துக் கூறுவார். வேறு மொழியைச் சேர்ந்தவரே இதைப் பண்ணும் போது நாம் ஏன் முழுவதும் தமிழில் சொல்ல முயற்சி செய்யக்கூடாது என்று முடிவெடுத்தேன். அப்படித் தொடங்கியது தான் தமிழ் அறிவிப்புகள்.

இந்த வைரலான வீடியோவில் உள்ளது தான் உங்களுடைய முதல் தமிழ் அறிவிப்பா?

முதல் முறையாக தூத்துக்குடியில் தரை இறங்கும்போது அறிவித்தேன். அதே போல் சென்னையிலும் இது போல அறிவித்து இருக்கிறேன். நல்ல வரவேற்பு இருந்ததாக எங்களுடைய பணிப்பெண்கள் சொன்னார்கள். அதனால் அப்படியே அதைத் தொடர்கிறேன்.

முழு அறிவிப்பையும் தமிழில் கொடுக்க வேண்டும் என்பதற்காக ஏதாவது முன்பயிற்சி எடுத்தீர்களா?

டெக்னிக்கல் வார்த்தைகளை முதலில் தமிழ்ப்படுத்தி பார்த்தேன். பயணிக்கும் போது எந்தெந்த இடங்கள் வழியில் வருகின்றன என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொண்டேன். அதை வைத்துச் சுருக்கமாக எனக்குள் தமிழில் சொல்லிப் பார்த்துக்கொண்டேன்.

சமுகவலைத்தளங்களில் மிகப்பெரிய வரவேற்பு இருந்தது? அதைக் கவனித்தீர்களா???

நிறைய பேர் பாராட்டியிருந்தார்கள். அதில் ஒருத்தர் "நீங்கள் அடுத்து எப்போது போகிறீர்கள் என்று சொல்லுங்கள். உங்கள் தமிழ் அறிவிப்பைக் கேட்பதற்காக நானும் பயணம் செய்கிறேன்" என்று சொல்லியிருந்தார். அதைப் பார்க்கும் போதே உணர்வுப்பூர்வமாக இருந்தது. தொடர்ந்து இதை நீங்கள் செய்யவேண்டும் என்று நிறைய தமிழ் உணர்வாளர்கள் அன்புக்கட்டளை விடுத்துள்ளனர்.

உங்களது இண்டிகா நிறுவனம் இது குறித்து என்ன சொன்னார்கள்?

அவர்கள் ரொம்ப சந்தோசப்பட்டார்கள். நேர்காணல் கொடுப்பதற்கு எல்லாம் உடனே அனுமதி கொடுத்தனர். எங்களுடைய உயர் கேப்டன் இதைத் தொடர்ந்து செய்யச் சொல்லியிருக்கிறார்.

விமானியாக வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது?

சிறு வயதில் காக்கா, குருவி, விமானம் என பறப்பவை எல்லாவற்றையும் வியந்து பார்ப்பேன். விமானம் குறித்த என் சந்தேகத்தை அம்மாவிடம் கேட்ட பொழுது அவர் விளக்கம் கொடுத்தார். நானும் அந்த விமானத்தை ஓட்டுபவர் ஆக வேண்டும் என்று சொன்னேனாம். அப்போது எனக்கு மூன்று வயது. சிறுவயது இருக்கும் போதே வீட்டில் உள்ள வீணான பொருட்களை வைத்து விமானம் எல்லாம் செய்து பார்ப்பேன் அதைப்பற்றிய ஒரு எண்ணம் உள்மனதுக்குள் தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது.

தமிழ் மீதான ஆர்வம் எப்படி வந்தது?

என் அம்மா ஒரு தமிழ் ஆசிரியை. சிறுவயதில் இருந்தே எல்லாப் போட்டிகளிலும் என்னை பங்கெடுக்க வைப்பார். கல்லூரிகளில் எதாவது தமிழ் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்க வேண்டுமானால் என்னை தான் அழைப்பார்கள்.

விமானம் சார்ந்த படிப்புகளுக்கு நிறைய செலவும், காலமும் ஆகும் என்பார்கள். உங்களுடைய குடும்பப் பின்னணி என்ன? அந்தப் படிப்பைத் தேர்ந்தெடுப்பதில் ஏதாவது சவால்கள் இருந்ததா?

நிறைய சவால்கள் இருந்தது. என் அப்பா திருவனந்தபுரத்தில் சாலையோரம் கடை போட்டு துணி வியாபாரம் செய்பவர். அம்மா பள்ளி ஆசிரியை. சாதாரண நடுத்தரக் குடும்பப் பின்னணி தான். இன்று வரை வாடகை வீட்டில் தான் வசிக்கிறோம். என்னுடைய அம்மாவின் பணிக்கால சேமிப்புப் பணம் மற்றும் ஊரில் இருந்த நிலத்தை அடமானம் வைத்தோம். என்னுடைய அத்தை அவருடைய வீட்டை அடமானம் வைத்து எனக்கு உதவி செய்தார். முதற்கட்ட பயிற்சிகள் வெற்றிகரமாக முடிந்தது. இரண்டாம் கட்டத்திற்கு ஒரு 20லட்சம் வரை தேவைப்பட்டது. அப்பாவின் நடைபாதை கடைக்கு எதிரே ஹோட்டல் நடத்திய முருகன் என்பவர் ஒரு 15லட்சம் கொடுத்து உதவினார். நான் கேட்காமலேயே எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னுடைய அத்தையும், அப்பாவின் நண்பர் முருகன் மாமாவும் கொடுத்து உதவினார்கள். அவர்களுக்கு நான் என்றும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். இந்த வீடியோ பார்த்து அவர்களும் ரொம்ப சந்தோசம் ஆகிட்டாங்க.

ஆகாயத்தில் அன்னைத் தமிழ் உங்கள் குரலில் ஓங்கி ஒலிக்கட்டும் பிரியா விக்னேஷ்!!!!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT