ADVERTISEMENT

விடியாத ஈழத்தமிழர் வாழ்வு! இந்தியாவை அச்சுறுத்தும் ராஜபக்சே வெற்றி!

08:01 PM Aug 15, 2020 | rajavel

ADVERTISEMENT

இலங்கையின் ஆட்சி அதிகாரத்தை மீண்டும் அசுர பலத்துடன் கைப்பற்றியிருக்கும் போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்சேவால் ஈழத்தமிழர்களுக்கு மட்டுமின்றி இந்தியாவுக்கும் ஆபத்து என்கிறார்கள் அரசியல் பார்வை யாளர்கள். தேசத்தின் சர்வதேச பாதுகாப்பை வலிமைப் படுத்த அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும். அதற்கு மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை எனக்குத் தாருங்கள்’என்பதை தனது தேர்தல் யுக்தியாக பயன்படுத்தி, 150 இடங்களுக்க குறி வைத்திருந்தார் ராஜபக்சே.

ADVERTISEMENT


அதன்படி, சிங்கள நாடாளுமன்றத்தில் மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் 196 இடங்களில் 128 இடங்களும், மொத்த வாக்குகள் சதவீதத்தில் தேர்ந்தெடுக்கப்படும் 29 இடங்களில் 17 இடங்களும் என மொத்தம் 145 எம்.பி.க்களை ராஜபக்சே சகோதரர்களுக்கு கொடுத்திருக்கிறது சிங்கள பேரினவாதம். மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கு இன்னும் 5 எம்.பி.க்கள் தேவை என்கிற நிலையில், ராஜபக்சேக்களின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனா கட்சியின் ஆதரவுடன் வடக்கு மாகாணங்களில் தனித்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் யாழ்ப்பாணத்திலும், விடுதலை புலிகளின் முன்னாள் உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாசன் என்கிற பிள்ளையான் மட்டக்களப்பிலும் ஜெயித்திருக்கிறார்கள். அதேபோல மகிந்தாவின் ஆதரவுடன் தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளும் இடங்களை கைப்பற்றியிருப்பதால் மூன்றில் இரண்டு பங்கு இடங்கள் ராஜபக்சேக்களுக்கு கிடைத்துள்ளது.

ராஜபக்சேக்களை எதிர்த்த சஜீத் பிரேமதாசாவின் ஐக்கிய மக்கள் சக்திக்கு 54 எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர். ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சிக்கு விகிதாச்சார பிரதிநிதித் துவத்தில் 1 இடம் கிடைத்துள்ளது. சஜீத் தனிக்கட்சி தொடங்கியதால் ரணிலுக்கு ஏற்பட்ட கடுமையான வீழ்ச்சி, இலங்கை யின் பழமையான அரசியல் இயக்கமான ஐக்கிய தேசிய கட்சி முற்றிலும் கலைக்கப்பட்டுவிடும் என்கிற சூழலை உருவாக்கி வருகின்றன. 1977 முதல் தோல்வியே காணாமல் நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து வரும் ரணில், முதல் முறையாக தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்.


ராஜபக்சேக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வகையில் ரணில்-மைத்திரி பால சிறிசேன கூட்டணிக்கு 2015 தேர்தலில் வெற்றியை தந்திருந்தனர் சிங்கள கடும்போக்காளர்கள். ஆனால், தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளுக்கு மாறாக ரணில்-மைத்ரியின் கூட்டணி அரசு விலகிச் சென்றதும், கூட்டணிக்குள் இருவருக்குமான பகைமை அதிகரித்தலும், அதிகாரச் சண்டையால் தேசிய பாதுகாப்பு விசயத்திலும் நிர்வாக அமைப்பிலும் ஏற்பட்ட முடக்கம், அதிகரித்த ஊழல்கள் ஆகியவையே இந்த தேர்தலில் ரணிலுக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் கிடைத்த பலத்த சரிவுக்கு காரணம் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

அதேபோல ஈழத்தமிழர் வாழும் பகுதிகளிலும் தமிழர்களின் கட்சிகளுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஈழத்தமிழினத் தலைவர்களின் ஒற்றுமையின்மையும், தமிழர் கட்சிகள் தனித்தனிக் குழுவாக தனித்து களமிறங் கியதும், போர் நிறுத்தும் முடிவுக்கு பிறகான 2009 காலக்கட்டத்திலிருந்து வடகிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட சிங்கள குடியேற்றமும் தமிழர்களின் வெற்றி யை தேர்தலுக்கு தேர்தல் தடுத்து வருகிறது.

சிங்கள ஆட்சிக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இரா.சம்மந்தனின் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு இந்த தேர்தலில் 10 இடங்களே கிடைத்துள் ளன. அதுவும் கூட்டணியிலுள்ள இலங்கை தமிழரசு கட்சிக்கு மட்டுமே கிடைத்திருக்கிறது. முந்தைய தேர்தலை ஒப்பிடும்போது 6 இடங்கள் குறைவு. கூட்டமைப்பை உடைத்து தமிழ் மக்கள் தேசிய கட்சியை உருவாக்கிய விக் னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தலைவர்கள் பலரும் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குப் பிறகான தேர்தல்களில் தமிழ்க் கட்சிகளின் தொடர்ச்சியான சரிவு தமிழர்களை அச்சம் கொள்ள வைத்திருக்கிறது. தமிழ்க்கட்சிகளின் வீழ்ச்சியும், போர்க்குற்றவாளி களின் பலமான வெற்றியும் இனி வரும் காலங்களில் ஈழத் தமிழர்களின் அரசியல் உரிமைகளை சிங்கள நாடாளுமன்றத்தில் எதிரொலிக்கச் செய்வதில் கடும் பின்னடைவை ஏற்படுத்தும் என அச்சம் தெரிவிக்கின்றனர் நல்லிணக்கத்தை முன்னெடுக்கும் சர்வதேச அமைப்புகள்.

இலங்கை அரசியலை சர்வதேச அரங்கத்தில் எதிரொலிக்கச் செய்து வரும் முனைவர் விஜய் அசோகனிடம் விவாதித்தபோது, "ராஜபக்சேக்கள் தொடர்ச்சியாக வெற்றி பெறுவதுதான் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியாதற்கான அடிப்படை காரணிகள். இலங்கையிலுள்ள பெரும்பான்மையினராக உள்ள சிங்களவர்களால் தமிழர்களின் வலியை உணர முடியாது. தமிழர்களின் அரசியல் உரிமைகள் என்கிற வார்த்தைகளே அவர்களுக்கு கசப்பானது.

தமிழின அழிப்புக்குப் பிறகும்கூட இன அழிப்பிற்கு காரணமானவர்களுக்கு எதிரான அரசியலை தமிழ்த்தலைவர்கள் வலிமையாக செய்யவில்லை என்பது துரதிர்ஷ்டம். ராஜபக்சேக்களோ, ரணிலோ, சஜீத்தோ, மைத்திரியோ ஆட்சி அதிகாரத்திற்கு வருவதால் எந்த தீர்வும் உரிமைகளும் தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.


இணக்க அரசியல்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்கு தீர்வு என சொல்லியபடியே, இந்தியா, அமெரிக்கா மற்றும் அனைத்து மேற்குலக நாடுகளும் சிங்கள தரப்போடு கைக்கோர்த்துக்கொண்டு நம்மை ஏமாற்றியே வந்துள்ளன. ஆனால், மகிந்தா இப்போதுதான் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது போலவும் அதனால் நமக்கு பாதிப்பு என்பதுபோலவும் பொய்யான அரசியலுக்குள் தமிழர்களை சிக்க வைக்கிறார்கள். இதனையெல்லாம் புரிந்து தமிழீழ அரசியல் தலைவர்கள் குறைந்தபட்சம் தேர்தல் அரசியலை கடந்து தமிழ்த்தேசிய அரசியல் பாதையில் நிற்க வேண்டும் என்றுதான் எல்லா தேர்தல்களும் உணர்த்துகின்றன.

இதற்கு முன்பு, தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஒற்றைத் தரப்பாக அனைத்து தமிழ்ப்பகுதிகளிலும் நின்று வெற்றிபெற்ற தமிழர்கள், இந்த முறை தமிழ்த்தேசியத்தை அங்கீகரிக்காத அல்லது விரும்பாத தமிழ்த் தலைவர்கள் பலர் மகிந்தாவுடன் நேரடியாக கைகோர்த்துக் கொண்டு தேர்தல்களத்தை சந்தித்துள்ளனர், இத்தகைய அணுகுமுறை தமிழர்களுக்கு சாபக்கேடுதான். தமிழர்களின் தாயக கோட்பாடை அங்கீகரிக்காத இதுவரை யாழ்ப்பாணத்தில் மட்டும் வெற்றிபெற்றுக் கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்தா கட்சியினர் வன்னி பெருநிலப்பரப்பில் வெற்றி பெறக்கூடிய சூழலும், ஒன்றிரண்டு தமிழர்கள் வெற்றிபெற்றுக் கொண்டிருந்த அம்பாறையில் இந்த முறை தமிழ்ப் பிரதிநிதிகளே இல்லாத அவலமான சூழலும் ஜீரணிக்க முடியாதவைகளாக இருக்கின்றன. அதாவது தமிழ்த்தேசியத்தை உயர்த்திப் பிடிக்கும் தலைவர்களை இழந்து வருகிறோம். இவை எல்லாமே எதிரிகளை பலப்படுத்துவதாகவும் தமிழர்களை பலவீனப்படுத்துவதுமாகவே இருக்கிறது.

தேர்தல் அரசியலை கடந்து, இன அழிப்புக்கான நீதிகோரும் அரசியலை வலிமையாக தமிழர்கள் எடுக்க வேண்டுமென்பதைத்தான் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன. இனிவரும் காலங்களில் தமிழக தாயக பிரதேசம் முழுவதும் சிங்களவர்கள் வெற்றிபெறும் சூழல் உருவாகும். அதனால் இனிமேலாவது, இலங்கைக்கு அப்பால் வெளி உலகிலிருந்து வரும் அரசியலை புறக்கணித்து தங்களுக்கான நேர்மையான அரசியலை தமிழ்த்தலைவர்கள் ஒற்றைக் குரலாக எழுப்ப வேண்டும்.

சிங்கள ஆட்சியாளர்களுடன் இணைந்தால்தான் தீர்வு கிடைக்கும் எனவும், இந்தியாவின் 13-வது சட்டத்திருத்தத்தை ஆதரித்தால்தான் உரிமைகள் கிடைக்கும் எனவும் சொல்கிற தமிழர்களை புறந்தள்ளி, மகிந்தாவை மையப்படுத்தி மட்டுமே அரசியலை அணுகாமல், தமிழர்களுக்கு எதிராக இருக்கும் சிங்கள அரசின் ராணுவமயமாக்கப்பட்ட அரசியல் கட்டமைப்பை உடைத்தால் மட்டுமே நமக்கான தீர்வு சாத்தியம். அதற்கான அரசியலை எடுப்பதுதான் காலத்தின் கட்டாயம்'' என்கிறார் மிக அழுத்தமாக.

நம்மிடம் பேசிய தமிழ்ப்பேரரசு கட்சியின் பொதுச்செயலாளர் வ.கௌதமன், ""ராஜபக்சேவின் பெரும்பான்மை வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி உடனடியாக வாழ்த்துக்களை தெரிவிக்கிறார். ஆனால், ராஜபக்சேக்களின் இந்த வெற்றி தமிழர்களுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்குத்தான் பேராபத்தை ஏற்படுத்தப் போகிறது. அம்மாந்தோட்டத்தில் தனது ராணுவத்தளத்தை சீனா அமைத்துள்ள சூழலில், கச்சத்தீவு வரை அதன் கரங்கள் நீண்டுள்ளன. அங்கிருந்தபடியே இந்தியாவை வேவு பார்த்துவிட்டு சென்றுள்ளது சீன ராணுவம். மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை ருசித்துள்ள ராஜபக்சேக்கள், எப்போதுமே சீனாவுக்கு செல்லப்பிள்ளைதான். இந்திய-சீன எல்லைப் பதட்டம் சமீபகாலமாக அதிகரித்து வரும்நிலையில், ராஜபக்சேக்களின் அசுர வெற்றி சீனாவுக்குத்தான் வலிமை சேர்க்கும். இந்தியாவுக்கு எதிரான பல காரணிகளை இனி அதிகமாக உருவாக்கப்போகிறார்கள் ராஜபக்சேக்கள். எதிர்வரும் ஆபத்துக்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறார் இந்திய பிரதமர் மோடி'' என்கிறார்.

மூன்றில் இரண்டு பங்கு வெற்றியை பெற்றுள்ள மகிந்தா, இலங்கை அதிபரும் தனது சகோதரருமான கோத்தபாயவின் அதிகாரத்தை கட்டற்ற அளவில் மாற்றியமைக்கும் சட்டத்திருத்தத்தை நாடாளு மன்றத்தில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளார். தற்போது தனது அமைச்சரவையில் யார் யாருக்கு வாய்ப்புத்தருவதென்கிற பட்டியலை இறுதி செய்துள்ளார் மகிந்த ராஜபக்சே.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT