Mahinda, Basil Rajapakse banned from leaving the country!

இலங்கையில் அமைதியை நிலைநாட்ட சிறப்புக் குழு ஒன்றை நியமிக்கப்பட்டிருப்பதாக இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, அந்த குழுவுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment

இலங்கையின் அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே, மக்களின் கிளர்ச்சியை அடுத்து, தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். இலங்கையில் இருந்து வெளியேறி மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்ற கோத்தபய ராஜபக்சே, அங்கிருந்து தனது பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பினார்.

Advertisment

இதைத் தொடர்ந்து, ரணில் விக்ரமசிங்கே இடைக்கால அதிபராகப் பதவியேற்றுக் கொண்டார். அதைத் தொடர்ந்து, நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ரணில் விக்ரம்சிங்கே மக்கள் எதிர்பார்க்கும் அரசியல் மாற்றத்திற்கான வழியை ஏற்படுத்திக் கொடுக்க 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

போராடும் உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும், ஆனால், வன்முறையை அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்தார். நாட்டில் அமைதியை நிலைநாட்ட பாதுகாப்பு பதவிநிலை தலைமை அதிகாரி காவல்துறைத் தலைவர் முப்படைத் தளபதிகளை உள்ளடக்கிய சிறப்புக் குழுவை நியமித்திருப்பதாகவும், வன்முறையாளர்களுக்கு எதிராக அரசியல் தலையீடு இன்றி நடவடிக்கை எடுக்க முழு அதிகாரமும் அக்குழுவுக்கு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கிடையே, அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லம், பிரதமர் அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து ஏற்கனவே போராட்டக்காரர்கள் வெளியேறிய நிலையில், இந்த மாளிகையில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிடும் பணிகள் தொடங்கியுள்ளன.

இந்த சூழலில், மஹிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையை விட்டு வெளியேற வரும் ஜூலை 28- ஆம் தேதி வரை தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இருவரும் நாட்டை விட்டு தப்ப வாய்ப்புள்ளதாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.