ADVERTISEMENT

பாடகி பவதாரிணி மறைவு; கலங்கி நிற்கும் திரையுலகினர்!

12:43 PM Jan 26, 2024 | prabukumar@nak…

பிரபல பாடகியும் இசைஞானி இளையராஜாவின் மகளுமான பவதாரிணி கடந்த சில மாதங்களாகப் புற்றுநோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக அவர் தொடர் சிகிச்சை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், இலங்கையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுவந்த அவர், சிகிச்சை பலனின்றி ஜனவரி 25 ஆம் தேதி மாலை உயிரிழந்துள்ளார். கடந்த 1984 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான மை டியர் குட்டிச்சாத்தான் என்ற திரைப்படம் மூலம் பாடகியாக அறிமுகமானவர் பவதாரிணி.

ADVERTISEMENT

அதன் பின்னர் கடந்த 1995 ஆம் ஆண்டு பிரபுதேவா நடித்த ராசய்யா படத்தின் மூலம் தமிழில் பாடல்கள் பாடத் துவங்கினார். அந்தப் படத்தில் மஸ்தானா மஸ்தானா என்ற பாடலைப் பாடி அசத்தியது மட்டுமல்லாமல் முதல் பாடலிலேயே தனக்கென பல ரசிகர்களை உருவாக்கினார். இவ்வாறு, தமிழ் சினிமாவில் பல சிறப்பான பாடல்களைத் தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்களின் இசையிலும் மற்ற இசையமைப்பாளர்களின் இசையிலும் அழகாகப் பாடியிருக்கிறார். கேட்பவர்களை எல்லாம மயக்கும் குரலுக்குச் சொந்தக்காரரான இவருக்கு, ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பல ஆண்டுகளாகப் பின்னணி பாடகியாக மட்டுமே வலம் வந்த பவதாரிணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இசையமைக்கவும் தொடங்கினார். இவ்வாறு மொத்தம் 10 திரைப்படங்களுக்கு மேல் இசையமைத்து தன்னை ஒரு இசையமைப்பாளாராகவும் நிரூபித்துக் காட்டியவர்.

ADVERTISEMENT

இதனையடுத்து, கடந்த 2005 ஆம் ஆண்டு சென்னையைச் சேர்ந்த ஆர். சபரிராஜ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர் பிரபல பத்திரிகையாளர் ராமச்சந்திரனின் மகன் ஆவார். கணவர், சபரிராஜ் சென்னையில் பிரபல விளம்பர நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். மேலும், ஹோட்டல் பிசினசிலும் ஈடுபட்டுள்ளார். ஆனால், இந்தத் தம்பதியருக்கு பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லை. ஆனாலும் இருவரும் மகிழ்ச்சியாகவே இருந்து வந்தனர். பவதாரிணி, பாரதி என்ற திரைப்படத்தில் பாடிய மயில் போல பொண்ணு ஒன்னு பாடல் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானது. அதுமட்டுமல்லாமல் இந்தப் பாடலுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

கடந்த 2002 ஆம் ஆண்டு ஆங்கிலப்படம் ஒன்றிற்கு இசை அமைத்து இசையமைப்பாளராக அவதாரம் எடுத்தார் பவதாரிணி. பின்னர், 2003 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான அவுனா படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்தியில் ஷில்பா ஷெட்டி நடித்த பிர்மிலேஜ் படத்திற்கு இசை அமைத்துள்ளார். இப்படியே பல்வேறு படங்களுக்கு இசையமைத்து வந்த பவதாரிணி, கடைசியாக 2019 ஆம் ஆண்டு வெளியான மாயநதி படத்திற்குப் பிறகு 3 படங்களுக்கு இசை அமைக்கவும் ஒப்புக்கொண்டுள்ளார். ஆனால் அதற்குள் இந்தக் குயில் பாட்டுக்கு சொந்தக்காரரை காலம் எடுத்துக்கொண்டது. இசைஞானி இளையராஜாவின் செல்ல மகளான இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்கோலாறு ஏற்பட்டது.

இது தொடர்பாக மருத்துமனைக்கு சென்றபோது அவருக்கு புற்றுநோய் வந்திருப்பதாகக் கூறி மருத்துவர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தார், அவரை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டுமென்று தீவிர முயற்சி எடுத்துள்ளனர். அதன்படி, இந்த நோய்க்கு இலங்கையில் சிறந்த மருத்துவம் அளிப்பதாகத் தெரிந்துள்ளது. இதனையடுத்து, பவதாரிணிக்கு ஆயுர்வேத சிகிச்சை மேற்கொள்வதற்காக அவரது குடும்பத்தினர் இலங்கை கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி கடந்த 26 ஆம் தேதி மாலை 5.20 மணியளவில் உயிரிழந்துள்ளார். இந்தச் செய்தியைக் கேட்டு அவரது குடும்பத்தார் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

இந்தச் செய்தி தமிழ் திரையுலகத்தினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே, இசைஞானி இலங்கையில் இருந்த காரணத்தால் இந்தத் தகவல் வெளியான உடனே, மகள் சிகிச்சைப் பெற்று வந்த மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இதனையடுத்து, அவரின் குடும்பாத்தார் அனைவரும் இலங்கை சென்றுள்ளனர். அங்கிருந்து 26 ஆம் தேதி மாலைக்குள் சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு உடலை எடுத்து வருவார்கள் எனச் சொல்லப்படுகிறது. அதன் பிறகு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வண்ணம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களில் இளையராஜாவின் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாகக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள். பிரபல பாடகி பவதாரிணி மறைந்த செய்தி திரைத்துறையினரை மட்டுமல்லாது தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

- அருள் வைரா

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT