ADVERTISEMENT

"எதையெல்லாமோ காட்டி மிரட்டினான்''... பொள்ளாச்சி போல் குமரியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்... பின்னணியில் ஆளுங்கட்சியினர்!

05:14 PM Apr 30, 2020 | Anonymous (not verified)

ADVERTISEMENT



தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி கானல் நீராகிவரும் நிலையில், அதற்கு சற்றும் சளைக்காத ஒரு கொடூரம், தற்போது அரங்கேறி இருக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காமக் கதாநாயகனாக வலம்வந்து, சென்னை வரை இளம்பெண்கள், குடும்பப் பெண்கள் என வலையில் வீழ்த்தி சீரழித்தவன் நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்த சுஜி என்கிற காசி, வயது 27. இவனிடம் சிக்கிச் சின்னாபின்னமான சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் கொடுத்த புகார்தான், இன்று சுஜியை சிக்க வைத்திருக்கிறது. அவன்மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கும் கோட்டார் போலீசார், விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT




சுஜியின் பின்னணியை அறிய, கணேசபுரத்தில் உள்ள அவனது ஏரியாவாசிகளிடம் விசாரித்தோம். ஆட்டிறைச்சிக் கடையை மிகச்சிறியதாகத் தொடங்கிய சுஜியின் தந்தை தங்க பாண்டியன், நாளடைவில் சுகுணா சிக்கனின் குமரி மாவட்ட டீலராகி, ஆடம்பர வாழ்க்கைக்கு சொந்தக்காரர் ஆனார். இரண்டு மகன்கள், ஒரு மகள் என வசதியாக வளர்த்த நிலையில்தான், சுஜியின் காம வெறி தலைக்கேறியது.

வடசேரி மாடரேட்டர் ஞானதாசன் பாலிடெக்னிக்கில் படிக்கும்போதே, உடன் படிக்கும் மாணவிகளிடம் நெருங்கிப் பழகி, வீட்டுக்கே அழைத்துச் செல்வான். அப்போதே முளைத்து விளைந்தவன் சுஜி. அவனது அம்மாவின் விருப்பப்படி எப்போதும் ராயல் லுக்கோடுதான் இருப்பான். தெருவில் யாரோடும் பேச்சு வைத்துக்கொள்ள மாட்டான்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தவரின் மகளும், பள்ளி மாணவியுமான ஒருவரை, ஆசைவார்த்தைக் காட்டி அடிக்கடி வலையில் விழவைத்து கடைசியில் கைகழுவிவிட்டான் இந்த சுஜி. இதையறிந்து அந்த உயர் அதிகாரி ட்ரான்ஸ்ஃபர் வாங்கி கிளம்பிவிட்டார்’என்றனர்.

இந்த நிலையில்தான் பெண் டாக்டரின் புகார், சுஜியின் சுயரூபத்தை வெளிப்படுத்த, காமக்கொடூரன் சுஜியால் பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும், புகார் கொடுக்கலாம் என்று குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்ரீநாத் அறிவித்திருக்கிறார்.


இந்நிலையில், 26ந் தேதி நேசமணி நகரைச் சேர்ந்த 24 வயது இளம்பெண், சுஜி மீது ஆன்லைனில் புகார் கொடுத்தார். அவரிடம் நாம் பேச முயன்ற போது மறுத்துவிட்டார். ஒருவழியாக, “எதையெல்லாமோ காட்டி பணம்கேட்டு என்னை மிரட்டினான்'' என்று மட்டும் சொல்லிவிட்டு, முடித்துக்கொண்டார்.


இந்த விவகாரம் குறித்து வாய்திறக்கக் கூடாதென்று போலீசாருக்கு உயரதிகாரிகள் கடிவாளம் போட்டிருக்கிறார்கள். இருந்தபோதிலும் தீவிரமாக விவரங்களை திரட்டினோம். வடிவீஸ்வரத்தை சேர்ந்த கல்லூரி மாணவியுடன் நெருங்கிப் பழகிய சுஜி, வீடியோ எடுத்து அதை காட்டி மிரட்டி பணம் கேட்டிருக்கிறான். அவனுக்குக் கொடுப்பதற்காக வீட்டிலிருந்த நகையை எடுத்தபோது, அந்த மாணவியின் பெற்றோர் பார்த்துவிட்டார்கள். பிறகு, போலீசில் புகார் கொடுக்கலாம் என்று முடிவுக்கு வந்து, கோட்டார் போலீஸ் ஸ்டேஷன் சென்றபோது, புகார் கொடுத்தால் உங்க மகளின் வாழ்க்கைதான் நாசமாகும் என்று திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

போலீஸ் அலட்சியத்தால் சுஜியின் ஆட்டம் அதிகமானது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பல்வேறு பெயர்களில் கணக்குத் தொடங்கி, அதில் பழக்கமாகும் வசதியான, அழகான பெண்களை தன்வசப்படுத்தினான். அவர்களுடன் உல்லாசத்தை அனுபவித்து, அதை வீடியோவாக எடுத்து மிரட்டி லட்சங்களில் பணம் பறிப்பதுதான் சுஜியின் பொழுதுபோக்கு. பாதிக்கப்பட்ட அனைவருமே கல்லூரி மாணவிகளும், 30 வயதுக்குட்பட்ட குடும்பப் பெண்களும்தான்.



ஒன்றாக இருக்கும்போது, ஆசைவார்த்தை கூறியும் சிலரை மிரட்டியும் வீடியோ எடுத்திருக்கிறான். அந்த வீடியோக்களின் மூலமாக தொழிலதிபரை போல பகட்டான வாழ்க்கை நடத்தி வந்தான். தன்னை ஒரு தொழிலதிபர் என்றே, அந்த சென்னை பெண் மருத்துவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு, பழக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறான். கன்னியாகுமரி மற்றும் சென்னையில் வைத்து அவருடன் நெருக்கமாக இருந்து, அந்த வீடியோக்களை காட்டி மிரட்டி லட்சங்களை கறந்திருக்கிறான். டார்ச்சர் தாங்கமுடியாத அந்த மருத்துவர் ஒரு கட்டத்தில், துணிச்சலாக புகார் கொடுக்க முன்வந்ததன் மூலம், பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவரை போலவே முன்வருவார்கள் என்று நம்புகிறோம் என்கிறார்கள். அன்று வடிவீஸ்வரம் கல்லூரி மாணவி விவகாரத்தில் தப்பிய இந்தத் திருட்டுப்பூனை சுஜிக்கு, சென்னை பெண் மருத்துவர் மணி கட்டிவிட்டிருக்கிறார்.


சுஜியை கைதுசெய்து, அவனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் மற்றும் தேரேக்கால்புதூரில் இருக்கும் அவனுடைய கோழி இறைச்சிக் கடையிலிருந்த லேப்டாப்பில் 90க்கும் அதிகமான பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்களும், புகைப்படங்களும் இருக்கின்றன. இவற்றை முக்கிய ஆதாரமாக போலீசார் சேகரித்துள்ளனர்.

இதற்கிடையே, சுஜி ஒருவனால் இவ்வளவு பெரிய காரியத்தை செய்திருக்க முடியாது. பொள்ளாச்சி விவகாரம் போல அவனுக்குப் பின்னால் ஒரு டீம் இருக்கிறது. அவனால், யாருக்கோ ஆதாயம் ஏற்பட்டிருக்க வேண்டும் என்ற கோணத்திலும் விசாரணையை முடுக்கி விட்டிருக்கும் ஏ.எஸ்.பி. ஜவஹர் தலைமையிலான தனிப்படை, வீடியோவில் சுஜியோடு சேர்ந்து பெண்களுடன் குதூகலமாக இருக்கும் அவனுடைய நண்பர்களையும் தீவிரமாக விசாரித்து வருகிறோம் என்று பகீர் கிளப்பினார்கள்.

அரசியல் தரப்பில் சுஜிக்கு ஏதாவது நெருக்கம் இருக்கிறதா? என்ற நம் கேள்விக்கு அ.தி.மு.க. பிரமுகரான முன்னாள் கூட்டுறவு ஒன்றியத் தலைவர் சந்தோஷ் மற்றும் வழக்கறிஞர் ஹரி ஆகியோரை கைகாட்டினார்கள். இதில் வழக்கறிஞர் ஹரியிடம் பேசியபோது, “2018 நவம்பரில் ஜிம்மில் விளையாடிக் கொண்டிருக்கும்போதுதான், என்னிடம் சுஜி அறிமுகமாகினான். எனக்கு உங்களை நல்லா தெரியும். நான் வழக்கறிஞர் ஆகி உங்ககிட்ட ஜூனியராகணும்னு ஆசையிருக்கு’ என்றான். அதற்கு நான், முதலில் அதற்கு அட்வகேட் படிக்கணும். அதன்பிறகு மீதியுள்ளதை பற்றி யோசிக்கலாம்’ என்று சொல்லிவிட்டேன். அப்புறம், அடிக்கடி பார்ப்போம். பேசுவோம் அவ்வளவுதான். மற்றபடி, அவனுடைய பர்சனல் லைஃப் பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது'' என்றார்.

இதுபோலவே, அ.தி.மு.க. பிரமுகர் சந்தோஷும், அவனைத் தெரியும். ஆனால், பர்சனல் பற்றியெல்லாம் எதுவும் தெரியாது என்பதோடு நிறுத்திக் கொண்டார். சந்தேகம் வலுத்ததால், அ.தி.மு.க. தரப்பில் நாம் விசாரணையில் இறங்கினோம். “சுஜியும், சந்தோஷும் மிகவும் நெருக்கமானவர்கள். இது நூறு சதவீதம் உண்மை'' என்று அடித்துச் சொன்னார்கள்.

இதுபற்றி இன்னும் விரிவாக சொன்னவர்கள், ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது கட்சியில் பதவிகேட்டு, தென்சென்னை மா.செ.வாக இரண்டு மாதம் இருந்த ஓ.பி.எஸ்.சின் பினாமியான பாபுவிடம் அடைக்கலமானார் சந்தோஷ். அவரது ஏற்பாட்டில், போயஸ் கார்டன் ஜோசியரைச் சந்திக்க சந்தோஷுக்கு வாய்ப்புக் கிடைத்தது. ஆனால், அவர் செல்வதற்கு முன்பாகவே, இப்போ திருக்கும் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, ராஜேந்திரபாலாஜி ஆகியோர் காத்திருந்ததால் சந்தோஷுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

வேறுவழியின்றி திரும்பிவந்த சந்தோஷிடம் நீ இங்கிருந்து தொழிலைக் கவனித்துக்கொள் என்று, அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலரின் அறிமுகத்தையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் பாபு. கட்சியிலும் எதிர்பாராத சில பெரிய மாற்றங்கள் நடந்தன. இதனால், சந்தோஷுக்கு கட்சியில் பதவி கிடைக்காத போதிலும், சென்னை மற்றும் பாண்டிச்சேரி சாலாங்குப்பத்தில் இருக்கும் ரிசார்ட்டுகளில் பார்ட்னராகும் வாய்ப்பும், சில வி.ஐ.பி.க்களின் நட்பும் கிடைத்தது. இந்த ரிசார்ட்டுகளில் வைத்துதான் சுஜி தனது லீலைகளைத் தொடர்ந்திருக்கிறான். இதற்காக சில வி.ஐ.பி.க்கள் மற்றும் நண்பர்களின் ஆசையும் பூர்த்தி செய்யப்பட்டிருக்கிறது’ என்று விரிவாக விவரித்தார்கள்.

இந்நிலையில், சுஜியுடன் மேலும் தொடர்புடைய கந்துவட்டி கும்பல், மிட்டாய்க்கடை அதிபர் மகன், தாசில்தார் மகன் மற்றும் மாஜி மந்திரி மகன் என ஒரு பெரிய லிஸ்ட்டைக் கையில் வைத்து விசாரணைக்கு ஆயத்தமாகி வருகிறது காவல்துறை தரப்பு.

இதுதொடர்பாக எஸ்.பி. ஸ்ரீநாத்திடம் நாம் கேட்டபோது, “பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். பாதிக்கப்பட்டவர்களின் முகங்கள் தெளிவாக இருக்கிறது. இன்னும் நிறைய ஆதாரங்களை திரட்டி வருகிறோம்'' என்றார் நம்மிடம். இன்னொரு பொள்ளாச்சி சம்பவமாக இது வெடிப்பதற்கு முன்பாக, இதை மூடிமறைக்கும் வேலையிலும் அரசியல் வட்டாரத்தில் வேலைகள் ஜோராக நடக்கின்றன.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT