ADVERTISEMENT

பிக் பாஸ் பார்க்காதவர்கள் தைரியசாலிகள்! பார்த்தவர்கள்... - பிக் பாஸ் குறித்து மனநல மருத்துவர் ஷாலினி

02:23 PM Jul 16, 2019 | george@nakkheeran.in

தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல், யூ-ட்யூப், வாட்ஸ் அப், ஃபேஸ் புக் என எல்லா சமூக ஊடகங்களிலும் பிக் பாஸ் பற்றிய பேச்சே பரவலாக இருக்கிறது. இரவு ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிக்காக மட்டுமில்லாமல் அதன் முன்னோட்டங்களுக்காகவும் மக்கள் காத்திருக்கின்றனர். பிக் பாஸ் பற்றி எங்கு யார் பேசினாலும் அதை ஆர்வத்துடன் கேட்கின்றனர். தமிழக மக்களின் முழு கவனத்தையும் பெற்றுவிட்ட பிக் பாஸ், மக்களுக்கு தருவது என்ன? பிக் பாஸ் மீதான மோகத்திற்கு காரணம் என்ன? இதுபோன்ற பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறார் மனநல மருத்துவர் ஷாலினி.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முந்தைய இரண்டு சீசன்களை விடவும் இந்த சீசனுக்கு அதிக வரவேற்பு இருப்பதாக கமல் கூறுகிறார். இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

இது ஒரு ஆரோக்கியமான போக்கு இல்லை. மனிதர்களுக்கு எப்போதும் அடுத்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் இருக்கும். அதை நாகரீகம் கண்டித்துவைத்திருக்கிறது. அடுத்தவீட்டில் என்ன நடந்தால் நமக்கென்ன, நாம் ஒழுங்காக இருப்போம், இதுமாதிரி அல்ப விஷயத்திலெல்லாம் நாம் தலையிட கூடாது என்பதுதான் ஆரோக்கியமான விஷயம். ஆனால், ஊடகங்கள் மட்டுமில்லாமல் மல்டிநேஷனல் கம்பனிகளும் அவர்களுடைய வியாபாரத்திற்காக நம்முடைய அடிப்படை மனித உந்துதலை தூண்டிவிடுகிறது. சாக்லெட் பிடிக்கும் என்பது மனித உந்துதல், அதை தூண்டுவதற்காக விதவிதமான, கலர்கலரான சாக்லெட்களை கம்பெனிகள் தயாரிக்கின்றனர். நமது உடல்நிலை பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. நாம்தான் நமக்கு எவ்வளவு சுகர் இருக்கு, நம் உடல்நிலை எப்படியிருக்கு, நமக்கு சாக்லெட் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவுசெய்யவேண்டும். பிக் பாஸும் அப்படியொரு மனித உந்துதலை தூண்டுகிறது. அந்த வீட்டில் என்ன நடக்கிறது என்பதைக் காட்டுறேன், பாக்குறியா? என்கிறது. இல்லை, எனக்கு வேண்டாம் என்பவர்கள்தான் தைரியசாலிகள். அல்லது, சும்மா கொஞ்சம் பார்த்தேன், அதில் நடிப்பவர்களைப் பிடிக்கும் அதனால் பார்த்தேன் என்று சொன்னால், நீங்கள் உளவியல் ரீதியாக தோற்றுவிட்டீர்கள் என்றுதான் அர்த்தம்.

நம்மைச்சுற்றி அந்த விவாதங்கள் நடந்துகொண்டே இருக்கும்போது, அதற்கு நிறைய வரவேற்பு கிடைக்கும்பொது, அதை எப்படிப் பார்க்காமல் தவிர்க்க முடியும்?

எல்லோரும் டாஸ்மாக்கிற்குச் சென்று சாராயம் குடிக்கிறார்கள் என்பதற்காகவும், தெருதெருவாய் சாராயம் விற்கிறார்கள் என்பதற்காகவும், நாமும் அதை குடிக்கமுடியுமா? அவ்வளவு டெம்டேஷன் இருந்தும், உங்கள் ஆர்வத்தை தூண்டியும், நீங்கள் அந்த நிகழ்ச்சியைப் பார்க்காமல் இருந்தால்தானே ஜெயித்ததாக அர்த்தம்.

பார்வையாளர் மீது எப்படி குற்றம்சொல்ல முடியும்? அவர்களின் இயலாமையை பயன்படுத்திக்கொண்டு இதுமாதிரியான நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புகிறவர்கள் மீதுதானே குற்றம்சாட்டவேண்டும்?

அவர்கள், இது என்னுடைய கிரியேட்டிவ் சுதந்திரம், பார்ப்பதும் பார்க்காததும் உங்கள் விருப்பம் என்று சொல்லிவிடுவார்கள். இரண்டுபக்கமும் சரிசெய்யப்படணும் என்பது உண்மையென்றாலும், அது நடைமுறையில் சாத்தியமில்லை என்பதால் நம் கண்களை நாம் மூடிக்கொண்டால் நல்லது.

பிக் பாஸ் முந்தைய சீசன்கள் நடக்கும்போது அதில் இருக்கும் குறிப்பிட்ட கேரக்டருக்கு மிகுந்த வரவேற்பு இருந்தது, ஓவியா ஆர்மியெல்லாம் வைத்திருந்தார்கள். தற்போது அதெல்லாம் எங்கே என்று தெரியவில்லை. எனவே, மக்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை வெறும் கேளிக்கைக்காக மட்டும் பார்க்கிறார்கள். வேறெந்த விளைவும் இருக்காது என்று எடுத்துக்கொள்ளலாமா?

எந்த ஒரு சமூதாயம் கேளிக்கைக்காக அதிக நேரத்தையும் பணத்தையும் செலவிடுகிறதோ அந்த சமூதாயம் அழியபோகிறது என்று அர்த்தம். உலகையே ஆண்ட மிகப்பெரிய ரோம் சாம்ராஜ்ஜியம் கேளிக்கையை பிரதானமாக நினைத்து, அதற்காக ஆட்களைக் கொண்டுவந்து, பெரிய ஸ்டேடியங்கள் அமைத்துக் கொண்டாடியதால் அழிவைநோக்கிச் சென்றது. மங்கோலியர்கள், மாயங்கள், பாரசீகர்கள் எல்லோருக்கும் மிகுந்த சொகுசு வந்தப்பிறகு கேளிக்கையில் கவனம் செலுத்தியதால் அழிந்தார்கள். அந்த அழிவைநோக்கி நாமும் செல்லவேண்டாம் என்று நினைக்கிறேன். பிக் பாஸ் உட்பட எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும், அதற்காக அதிக நேரம் செலவிடுவது, அதைப்பற்றியே எப்போதும் பேசிக்கொண்டிருப்பது, முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் அதையே விவாதிப்பது எல்லாம், மக்கள் அதற்கு அடிமையாகிறார்கள் என்பதை காட்டுகிறது. மனநல மருத்துவராக எச்சரிக்கவேண்டியது எங்கள் கடமை. மக்கள் எதற்காகவும் அந்த நிகழ்ச்சிகளை பார்க்காமல் புறக்கணிப்பதுதான் நல்லது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT