ADVERTISEMENT

பாதுகாப்பு உபகரணங்களின்றி சாக்கடை கால்வாயில் இறக்கிவிடப்படும் துப்புரவு தொழிலாளர்கள்! சேலம் ஸ்மார்ட் சிட்டி சபாஷ்!!

07:58 AM Mar 16, 2020 | santhoshb@nakk…

முதல்வரின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் கொண்டு வரப்பட்டாலும் கூட, மனிதர்களே சாக்கடைக் கால்வாய்க்குள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களுமின்றி இறங்கி சுத்தப்படுத்தும் பெரும் துயரம் நீடிக்கிறது.

ADVERTISEMENT

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாநகரங்களுக்குப் பிறகு ஐந்தாவது பெரு நகரமாக சேலம் விளங்குகிறது. சுமார் பத்து லட்சம் மக்கள்தொகை கொண்ட இந்த மாநகராட்சி, நடுவண் அரசின் 'பொலிவுறு நகரமாக்கல்' (ஸ்மார்ட் சிட்டி) திட்டத்திலும் சேர்க்கப்பட்டு உள்ளது. மாநகராட்சியில் நாள்தோறும் தேங்கும் குப்பைகளை வீடு வீடாக சேகரிப்பதற்காக கடந்த ஆண்டு பேட்டரியால் இயங்கும் வாகனங்களை அறிமுகம் செய்தது. இது, துப்புரவுத் தொழிலாளர்களின் பணிகளை ஓரளவு எளிமைப்படுத்தி இருக்கிறது.

ADVERTISEMENT

என்றாலும், எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் துப்புரவுத் தொழிலாளர்கள் சாக்கடைக் கால்வாய்களில் இறங்கி சுத்தப்படுத்தும் அவல நிலையும் நீடித்து வருகிறது. கழிவுகள் அகற்றும் பணிகளுக்காக குட்டி ரோபோ இயந்திரங்களும் வாங்கப்பட்டுள்ளன. ஆனால், சாக்கடைக் கால்வாய் அடைப்புகளை சரிசெய்வதில் ரோபோக்களின் கரங்களை விட தொழிலாளர்களை இறக்குவதையே மாநகராட்சி நிர்வாகம் விரும்புவது விந்தை மட்டுமின்றி விதிகளை மீறியதும்கூட.


சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் அத்வைத ஆஷ்ரமம் சாலையில் மங்களம் உணவகத்தின் முன்பு சாக்கடைக் கால்வாயில் அடிக்கடி அடைத்துக்கொள்ளும் என்கிறார்கள் அந்த வார்டின் துப்புரவுத் தொழிலாளர்கள். அதற்காக வாரத்தில் ஓரிரு முறை கால்வாய்க்குள் இறங்கி உணவகக் கழிவுகளை அகற்றுவோம் என்கிறார்கள். அத்தகைய பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் கையுறைகளோ, முழங்கால் வரையிலான கம்பூட்ஸ் போன்ற உபகரணங்களோ அணியாமல் வெறுங் கைகளால் கழிவுகளை அகற்றுகிறார்கள்; அடைப்புகளை சரிசெய்கின்றனர். இத்தனைக்கும் அந்த சாக்கடைக் கால்வாய் முழங்கால் அளவுக்கு மேல் ஆழமிருக்கிறது.


கழிவுகளை அகற்றும் பணிகளில் மனிதர்களை ஈடுபடுத்துவதற்கான தடை சட்டம் & 2013 ஏற்கனவே நடைமுறையில் இருந்தாலும்கூட, சேலம் மாநகராட்சி நிர்வாகம் அந்த சட்டத்தை கிஞ்சித்தும் சட்டை செய்வதில்லை. ஒவ்வொரு மனிதனின் கண்ணியமும் காக்கப்பட வேண்டும் என்பதும் இந்த சட்டத்தின் முக்கிய கூறாகும். அரசியலைமைப்புச் சட்டமும் அதைத்தான் கூறுகிறது. அப்படியான அம்சம் இருப்பதையே சேலம் மாநகராட்சி நிர்வாகம் மறந்து போனது. சாக்கடைக் கால்வாய்க்குள் மனிதர்களை இறக்கிவிடுவது என்பது மனித உரிமை மீறல் என்பதுகூட மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரியுமோ என்னவோ?

மாநகராட்சிகள் சட்டம், அரசாணை எண். 101ன் படி, துப்புரவுத் தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஆண்களுக்கு இரண்டு இணை காக்கி நிற சட்டை, அரைக்கால் டிரவுசர்களும், பெண்களுக்கு இரண்டு இணை ஜாக்கெட், சேலைகள் வழங்கப்பட வேண்டும். சாக்கடைக் கால்வாயில் இறங்கி அல்லது குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு ஒளிரும் மேல் சட்டை, முழங்கால் வரையிலான கம்பூட்ஸ், கையுறைகள், கை, கால்களை கழுவிக்கொள்ளவும், சீருடைகளை துவைத்துக் கொள்ளவும் தேவைக்கேற்ப சோப்புகள் வழங்கப்பட வேண்டும்.


இதுபற்றி சேலம் மாநகராட்சி துப்புரவுத் தொழிலாளர்களிடம் கேட்டபோது, ''காக்கி சீருடைக்கான துணியை எடுத்துக் கொடுத்து விடுகிறார்கள். ஆண்களுக்கு தையல் கூலியாக ஒரு செட் சீருடைக்கு 400ம், பெண்களுக்கு 80 ரூபாயும் கொடுக்கின்றனர். பல தொழிலாளர்களுக்கு மூன்று ஆண்டு முதல் ஓராண்டு வரை சீருடை தரப்படவில்லை.


டெல்லியில் இருந்து தூய்மை இந்தியா திட்ட அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதாக இருந்தால் மட்டுமே எங்களை எல்லாம் ஒளிரும் ஜாக்கெட், கையுறை, கம்பூட்ஸ் போட்டுக்கொண்டு வேலை செய்யும்படி அதிகாரிகள் வற்புறுத்துவார்கள். மற்ற நாள்களில் கண்டுகொள்ள மாட்டார்கள். வெயில் காலங்களில் கையுறைகள், கம்பூட்ஸ் போட்டுக்கொண்டு வேலை செய்யும்போது கொஞ்சம் அசவுகரியமாகத்தான் உணர்கிறோம். ஆனாலும், எல்லா தொழிலாளர்களுக்கும் இந்த உபகரணங்கள் வழங்கப்படவில்லை. அப்படி அணிந்து வேலை செய்வது நல்லதுதான்,'' என்கிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க, ''சேலம் மாநகராட்சியில் தற்போது 1000 நிரந்தர துப்புரப் பணியாளர்களும், மகளிர் குழு மூலமாக 1000 தொழிலாளர்களும் வேலை செய்கின்றனர். இப்போதுள்ள மக்கள் தொகை, குடியிருப்புகள், வணிக கட்டடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப இன்னும் 1000 தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால் ஏற்கனவே இருப்பவர்களுக்கே உரிய நேரத்தில் சம்பளம் கொடுப்பதில் சிக்கல் இருப்பதால், புதிதாக துப்புரவுத் தொழிலாளர்களை நியமிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறோம்,'' என்கிறார்கள் சுகாதார ஆய்வாளர்கள்.


இது தொடர்பாக சேலம் மாநகராட்சி நல அலுவலர் பார்த்திபனிடம் கேட்டபோது, ''துப்புரவுத் தொழிலாளர்கள் தகுந்த பாதுகாப்பு உபகரணங்களுடன்தான் பணிகளில் ஈடுபட வேண்டும். நீங்கள் சொல்லும் புகார் குறித்து விசாரிக்கப்படும். பணி நேரத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் அணிவது உறுதி செய்யப்படும்,'' என்றார்.


ஸ்மார்ட் சிட்டி என்ற பெயரில் நவீன பேருந்து நிலையம் கட்டும்; நவீன வாகன நிறுத்துக் கூடம் கட்டும்; நவீன கழிப்பறை கட்டும்; ஆனால், மலக்குழிக்குள் மட்டும் மனிதர்களையே இறக்கி விடும். சபாஷ் சேலம் மாநகராட்சி.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT