ADVERTISEMENT

போலீசாரின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தாய்... உயிர் பலியான சோகம்!

07:01 AM Apr 27, 2020 | rajavel

ADVERTISEMENT

சேலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி கடை திறந்ததாக மகன் மீது வழக்குப்பதிவு செய்ய முயன்ற காவல்துறையினரின் கால்களில் விழுந்து மன்னிப்பு கேட்ட தாயாரை, தலைமைக் காவலர் ஒருவர் மிரட்டியதால் அதிர்ச்சியில் மாரடைப்பில் மயங்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT


சேலம் அம்மாபேட்டை வித்யா நகர் 8வது குறுக்கு தெருவை சேர்ந்த பழனிமுத்து மகன் வேலுமணி (35). இவருடைய தாயார், பாலாமணி (75). அம்மா, மகன் இருவரும் பட்டைக்கோயில் அருகில் எலுமிச்சம் பழ வியாபாரம் செய்து வருகின்றனர். சேலத்தில் ஏப். 25 மற்றும் 26 ஆகிய இரு நாள்களும் முழு ஊரடங்கு என்று 24ம் தேதி மதியம் திடீரென்று மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவித்தார்.


ஏப். 24ம் தேதியன்று காலை 8.30 மணியளவில், கிடங்கில் இருக்கும் எலுமிச்சம் பழங்களை டோர் டெலிவரி செய்வதற்காக வேலுமணியும், அவருடைய தாயார் பாலாமணியும் கிடங்கைத் திறந்துள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சேலம் நகர காவல்நிலைய தலைமைக் காவலர் முத்துசாமி, திடுதிப்பென்று கிடங்கிற்குள் புகுந்து வேலுமணியை சரமாரியாக தாக்கியுள்ளார்.



தன் கண் முன்னாலேயே மகன் அடி வாங்குவதை பார்த்து வெலவெலத்துப் போன மூதாட்டி பாலாமணி, ''ஏன் சார் பையனை அடிக்கிறீங்க. நீ எல்லாம் நாசமாத்தான் போவ... நல்லாருப்பியா... கடைய சாத்தச் சொன்னா சாத்திட்டுப் போறோம்... எதுக்காக அடிக்கிறீங்க...,'' என்று வசை பாட, விவகாரம் வேறு திசைக்குச் சென்றது.


அதன்பிறகு நடந்ததை வேலுமணி நம்மிடம் சொன்னார்.


''என்னை ஏட்டு முத்துசாமி அடித்ததை பொறுத்துக் கொள்ள முடியாமல்தான் எங்கம்மா அவரை திட்டினார். பதிலுக்கு அவரும், வயசுக்குக் கூட மரியாதை இல்லாமல் திட்டினார். அத்தோடு நில்லாமல் அவர், இன்ஸ்பெக்டர் குமாருக்கு போன் செய்து, நான் அவரை ஆள்களை வைத்து அடிக்க முயன்றதாக பொய்யான தகவலைச் சொன்னார். அக்கம்பக்கத்தினர் கூடியதால் அத்துடன் அந்தப் பிரச்னை முடிந்தது.


இந்நிலையில், தொடர்ச்சியாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதால் எலுமிச்சம் பழங்கள் எல்லாம் வீணாகி விடும் என்பதால் கிடங்கில் இருக்கும் பழங்களை வீட்டுக்குக் கொண்டு வருவதற்காக நானும் எங்கம்மாவும் ஏப். 25ம் தேதி காலை 5.30 மணி அளவில் எலுமிச்சம் பழ கிடங்குக்குப் போனோம். அப்போதும் அங்கு வந்த ஏட்டு முத்துசாமி, காவல்நிலையத்தில் இருந்து இன்னொரு போலீஸ்காரை அழைத்து வந்து, என்னை விசாரணை செய்ய வேண்டும் என்று சொல்லி வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றார். காவல் நிலையத்தில் வைத்து என்னை கருப்பு கலர் பைபர் லட்டியால் அடித்தனர். டிரஸ்ஸை எல்லாம் கழற்றிப் போட்டு வெறும் உடம்புடன் நிற்க வைத்து அடித்தனர். எங்க அம்மா காவல்நிலையத்திற்கு வெளியே நின்றதால் உள்ளே நடந்தது எல்லாம் அவருக்கு தெரியாது.


வீட்டுக்குச் சென்ற அம்மா, காலை 9.30 மணியளவில் என் அக்கா வீட்டுக்காரர் செந்தில்குமாரை அழைத்துக்கொண்டு டவுன் காவல்நிலையத்திற்கு மீண்டும் வந்து விட்டார். என்னை போலீசார் பிடித்துச்சென்ற வருத்தத்தில் அம்மாவும் சாப்பிடவில்லை. நானும் சாப்பிடவில்லை. அப்போது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் குமார், ''போலீசையே அடிக்கிறியா? நீ டவுன்ல எப்படி கடை போட்டுடறேனு பார்த்துக்கறேனு,'' மிரட்டினார்.

வியாபாரம் செய்து வரும் நாங்க, டூட்டியில் இருக்கும் போலீசாரை அடிக்க முடியுமாங்கய்யானு கேட்டேன். அதை எல்லாம் அவர் காதில் வாங்காமலேயே, ''உன்னை ஜெயில்ல போடாம விட மாட்டேன்டானு சொன்னார். அந்தளவுக்கு என்னைப் பற்றி ஏட்டு முத்துசாமி, அவரிடம் சொல்லி இருந்திருக்கார். அதனால்தான் அவர் என்னை அப்படி மிரட்டினார்.


அதேநேரம், கள் விற்ற வழக்கிலும், பான்பராக் விற்ற புகாரிலும் கைது செய்யப்பட்ட நபர்களையெல்லாம் விட்டுவிட்டார்கள். ஆனால், எந்த தப்பும் செய்யாத என்னை முதல் நாள் நடந்த வாக்குவாதத்தை மனதில் வைத்துக்கொண்டு காவல்துறையினர் மிரட்டினர். அந்த பொம்பளையும் இவனும் முத்துசாமி ஏட்டுக்கிட்ட மன்னிப்பு கேட்கணும். ஏட்டு மன்னிப்பு கொடுக்கற வரைக்கும் இவங்கள விட்டுடடாதீங்கனு சொல்லிட்டு இன்ஸ்பெக்டர் குமார் வெளியே போய் விட்டார்.


அப்புறம் மதியம் 2.10 மணியளவில், இன்ஸ்பெக்டர் குமாரும், ஏட்டு முத்துசாமியும் மீண்டும் வந்தனர். அப்போது வரை டூட்டியில் இருந்த மூன்று போலீஸ்காரர்கள் என்னை மாத்தி மாத்தி அடித்தனர். எங்கம்மா ஏட்டு முத்துசாமி காலிலும், இன்ஸ்பெக்டர் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டார். மறுபடியும் இன்ஸ்பெக்டர் திடீரென்று அவசரமாக எங்கோ கிளம்பி சென்றுவிட்டார்.


ஆனால் ஏட்டு முத்துசாமி, தகாத முறையில் பேசினார். அப்போது அந்த இடத்தில் இருந்த ஆறேழு போலீஸ்காரங்க கால்களிலும் விழுந்து என்னை விட்டுவிடும்படி மன்னிப்பு கேட்டார். அதைப்பார்த்த முத்துசாமி ஏட்டு, ஆத்திரத்தில் என் அம்மாவை அடிக்க வருவதுபோல் லட்டியை ஓங்கினார். அதைப்பார்த்த அதிர்ச்சியில் என் தாயார் அங்கேயே மயங்கி விழுந்தார்.


அவர் மூச்சு பேச்சின்றி அசைவற்றுக் கிடந்தார். ஆனால் அப்போதுகூட ஏட்டு முத்துசாமி, மகனை ரிலீஸ் பண்றதுக்காக எப்படிலாம் கீழே விழுந்து நடிக்கிறா பாருனு எகத்தாளமாக பேசினார். அவரை தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றனர். என் தாயாரிடம் எந்த அசைவும் இல்லை. பின்னர் என் தாயாரை இருசக்கர வாகனத்திலேயே அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், வரும் வழியிலேயே என் அம்மா இறந்துவிட்டதாக கூறிவிட்டனர்.


எனக்காகவே என் அம்மா உயிர் விட்டுட்டாங்க. கள்ளையும் பான்பராக்கையும் வித்தவனையெல்லாம் விட்டுட்டாங்க. எல்லார் காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்டபிறகும் போலீஸ்காரங்க அலட்சியம் காட்டியதால்தான் இன்னிக்கு எங்க அம்மாவையும் பறிகொடுத்துட்டு நிக்கறேன்,'' என்றவர் மேற்கொண்டு பேச முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.


பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று வேலுமணி கைப்பட எழுதிக் கொடுத்தால், இரவு 8.30 மணியளவில் தாயாரின் உடலை அவரிடம் ஒப்படைத்துள்ளனர். காவல்துறை முன்னிலையில் பச்சைப்பட்டி இடுகாட்டில் சடலத்தை புதைத்துள்ளனர்.


சேலம் மாவட்ட தெருவோர வியாபாரிகள் சங்க நிர்வாகி ராஜேந்திரன், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி நிர்வாகி பன்னீர்செல்வம் ஆகியோர் கூறுகையில், ''மகனை பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள் என்ற பதற்றத்தில் கண்ணீரும் கம்பலையுமாக காலை முதல் மதியம் 2 மணி வரை கால் கடுக்க காத்திருக்கும் அந்த மூதாட்டிக்கு போலீசார் ஒரு வாய் சோறு வாங்கிக் கொடுத்திருந்தால்கூட இந்நேரம் அந்த உசுரு போயிருக்காதுங்க.


இறந்த மூதாட்டியும், அவருடைய மகனும் எலுமிச்சம் பழக்கடையை திறக்கவில்லை. கிடங்கில் இருக்கும் பழங்களை வீட்டுக்குக் கொண்டு செல்லத்தான் திறந்துள்ளனர். முதல் நாள் சம்பவத்தை மனதில் வைத்துக்கொண்டு ஏட்டு முத்துசாமி உள்நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்.


மூதாட்டி மயங்கி விழுந்து நீண்ட நேரம் கழித்துதான் அரசு மருத்துவமனைக்கு இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்றுள்ளனர். அரை கி.மீ. தூரத்தில் இருக்கும் ஆம்புலன்ஸ் வருவதற்கு லேட் என காவல்துறை சொல்வதெல்லாம் நம்பும்படியாக இல்லை. அப்படி வேலுமணி குற்றம் செய்திருந்தால், அவர் மீது வழக்குப்பதிவு செய்யட்டுமே? அதை விட்டுவிட்டு அவரை நிற்க வைத்து அடிப்பதற்கு எந்த உரிமையும் கிடையாது. அதுவும் அம்மா, மகன் இருவருக்கும் காலை முதல் மதியம் வரை சோறு கூட வாங்கித் தராமல் பட்டினி போட்டுள்ளனர்.


காவல்துறையின் அலட்சியத்தாலும், ஏதேச்சாதிகாரப் போக்காலும்தான் மூதாட்டி இறந்துள்ளார். தெருவோர வியாபாரிகளை தெரு நாய்களைப் போல காவல்துறையினர் நடத்துகின்றனர். இதற்குக் காரணமான இன்ஸ்பெக்டர் குமார், ஏட்டு முத்துசாமி ஆகியோர் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்,'' என்றனர்.


சர்ச்சைக்குரிய இச்சம்பவம் குறித்து சேலம் நகர காவல் ஆய்வாளர் குமாரிடம் பேசினோம்.


''சேலம் பட்டைக்கோயில் அருகில், கரோனா பாதிப்பு உள்ள இடம் என்று சீல் வைத்திருந்த பகுதியில்தான் வேலுமணி எலுமிச்சம்பழக்கடை வைத்துள்ளார். அவரை கடை திறக்கக்கூடாது என்று முதல் நாளே ஏட்டு முத்துசாமி எச்சரித்து இருந்தார். அப்போது அவரை வேலுமணியின் தாயார், நீ எல்லாம் நல்லாருக்க மாட்ட என்று ஏதோ சாபம் விட்டதாகச் சொன்னார்கள்.


முதல் நாள் எச்சரிக்கையையும் மீறி, முழு ஊரடங்கு நாளன்று காலையிலும் கடை திறந்ததால், டவுன் போலீசார் அந்த கடைக்குச் சென்று கேமராவில் படம் எடுத்ததோடு, அவரை விசாரணைக்கு அழைத்தனர். அவர் வர மறுத்ததால், மற்றொரு போலீசார் உதவியுடன் காவல்நிலையத்திற்கு கொண்டு வந்தோம். அவர்கள் விசாரணைக்கு வந்தபோது, பத்திரிகையாளர்களுக்கு கரோனா நிவாரண உதவிகள் வழங்கும் பணிகளில் பிஸியாக இருந்ததால் என்னால் அவர்கள் பிரச்னையில் கவனம் செலுத்த முடியவில்லை.


சம்பவத்தின்போது, இறந்துபோன தாயார் காவல்நிலையத்திற்கு வெளியே நின்றிருந்தது எனக்குத் தெரியாது. மேலும், மதியம் 2 மணிக்கு வந்தபோது அந்தம்மா என்னிடம் முறையிட்டார். அப்போது வேலுமணியை ஜாமினில் விடுவதற்கான பேப்பர்களை தயார் செய்யும்படி சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டேன். நான் கிளம்பும்போதுதான் ஏட்டு முத்துசாமி அங்கு வந்தார். அதன்பிறகுதான் அந்த மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார்.


அவருடைய முகத்தில் தண்ணீர் தெளித்தோம். எழவில்லை. சர்க்கரை தண்ணீர் ஊற்றினோம். அப்போதும் எழாததால் அவரை உடனடியாக அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். அங்கு பரிசோதனையில் நாடித்துடிப்பு 10 புள்ளிகள் வரை இருந்தது. ஆனாலும், வரும் வழியில் இறந்துவிட்டதாக மருத்துவத்துறையினர் பதிவு செய்தனர். மற்றபடி வேலுமணியை நாங்கள் அடித்ததாகச் சொல்வதில் உண்மை இல்லை.


அதற்காக இந்த சம்பவத்தில் எனக்கு வருத்தம் இல்லை என்று சொல்ல முடியாது. ஒருநாள் ஆகியும் இன்னும் அந்த மூதாட்டியின் மரணம் வருத்தம் அளிக்கிறது. வேறு எந்த கேஸிலும் என்னால் கவனம் செலுத்த முடியவில்லை. ஒருவேளை, சம்பவ இடத்தில் இன்னும் கொஞ்ச நேரம் நான் இருந்திருந்தால்கூட அந்தம்மாவுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டிருக்காது என்று நினைக்கிறேன்,'' என வருத்தத்துடன் சொன்னார்.


காவல்துறையினரின் லட்டிகள் எப்போதும் சாமானியர்கள் மீதே வேகமாக சுழல்கின்றன. மனிதநேயமற்ற காக்கிகளின் லட்டிகளுக்கு, இங்கே ஒரு மூதாட்டியின் உயிர் பலியாகி இருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT