ADVERTISEMENT

குறளுக்கு 'குரல்' கொடுத்த அரசுப்பள்ளி ஆசிரியர்! ''இசையால் எல்லாமே முடியும்!''

08:01 AM May 18, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


கரோனா ஊரடங்கு காலத்தை பலர் விடுமுறை காலமாகக் கருதினாலும், வெகு சிலர் ஆக்கப்பூர்வமான வழிகளிலும் பயன்படுத்தத் தவறவில்லை. சேலத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியர் பங்கஜம், பத்தாம் வகுப்பு மனப்பாட செய்யுள்களை அவரே சொந்தக்குரலில் பாடி, தனது யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்திருக்கிறார். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நெருங்கும் நேரத்தில் அவருடைய இந்தப் புதிய முயற்சி பரவலாகக் கவனம் பெற்றுள்ளது.

ADVERTISEMENT


சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கத்தேரி அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ்ப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார், பங்கஜம் (52). நாமக்கல் மாவட்டத்தில் அரசு கல்வியியல் கல்லூரி பின்புறம் உள்ள ஓலப்பாளையம்தான் சொந்த ஊர். வீட்டில் இருந்து காவிரி வாய்க்கால் கரையில் இரு சக்கர வாகனத்தில் பயணித்தால் பத்து நிமிடத்தில் பள்ளியை அடைந்து விடலாம். கணவர், முருகேசன். சொந்தமாக விசைத்தறி பட்டறை வைத்திருக்கிறார். மகள், மகன் எனத் திட்டமிட்ட குடும்பம்.

''இயல்பாகவே தமிழ் மொழி மீது ஆர்வம் உண்டு. அதனால் தமிழ் ஆசிரியர் பணி என்பது எப்போதும் விருப்பத்திற்குரிய ஒன்று. 1990 இல் ஆசிரியர் பணியில் சேர்ந்தேன். தொடக்கத்தில் ஆங்கில பாடத்தில் மனப்பாட செய்யுள்களை (ரைம்ஸ்) ஆசிரியர்கள் இசை வடிவில் ராகம் போட்டு பாடிக்காட்டும் முறை இருந்தது. காலப்போக்கில் அரசுப்பள்ளிகளில் அந்த உத்தி மறைந்து போனது. ஆனால் தனியார் பள்ளிகளில் இன்னும் ரைம்ஸ்களை ஆசிரியர்கள் ராகம் போட்டு பாடிக்காட்டுகின்றனர்.

தமிழ் மனப்பாட செய்யுள்களை ஏன் ராகமாகப் பாடிக்காட்டி மாணவர்கள் மனதில் பதிய வைக்கக் கூடாது என்ற எண்ணம் நீண்ட காலமாகவே எனக்குள் இருந்தது. நான் நினைப்பது கூட முற்றிலும் புதிய சிந்தனை அல்ல. ஏற்கனவே காலங்காலமாக, 'அம்மா இங்கே வா வா... ஆசை முத்தம் தா தா', 'நிலா நிலா ஓடி வா' போன்ற நான்கடி செய்யுள்களைக் குழந்தைகளுக்கு ராகம் போட்டு பாடிக் காட்டி வந்திருக்கிறோம்.

ஆனால் அந்தப் பாடல்களையும்கூட கர்நாடக ராகத்தில் பாடினால் என்ன என்று தோன்றியது. எதையும் செய்வதற்கு உரிய காலம் வர வேண்டுமே...? அப்படியான காத்திருப்புக்கு 2005இ ல் தெளிவு கிடைத்தது. அப்போது சென்னையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் முறையில் புதிய உத்திகள் குறித்த ஒரு பயிற்சி வகுப்பு நடந்தது. அங்கே ஒவ்வொரு ஆசிரியரும் செய்யுள்களைப் பாடலாக பாடினர். சிலர் சினிமா பாடல் மெட்டில் பாடினர். சிலர் குழுவாகப் பாடினர்.


அந்தப் பயிற்சி வகுப்பில்தான் என் சிந்தனை மேலும் செழுமை பெற்றது. நாம் என்ன செய்தால் உலகளவில் கவனம் பெற முடியும் என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். உலகப்பொதுமறையான திருக்குறட்பாக்களை ஏன் பாடலாக பாடக்கூடாது என்று தோன்றியது. திருக்குறளில் உள்ள 1,330 செய்யுள்களையும் தன்யாசி, ரேவதி உள்ளிட்ட மூன்று ராகங்களில் பாடினேன். அறம், பொருள், காமம் என ஒவ்வொரு பாலுக்கும் ஒரு ராகம். பின்னணி இசை ஏதும் இல்லை. தனிக்குரல் பாடல்தான். பாடல் முடிந்ததும் ஒருவர் பொருளுரை கூறுவார்.

என்னுடைய இந்தப் புதிய முயற்சிக்குப் பரவலாக வரவேற்பு கிடைத்தது. பாடல் வடிவில் இருப்பதால் மாணவர்களும் குறளின் சில கடினமான சொற்களையும் எளிதாக மனப்பாடம் செய்து கொள்கின்றனர். ஆரம்பத்தில் இப்படிச் செய்யுள்களை இசை வடிவமாகக் கொண்டு வருவதற்கும்கூட உங்களைப்போல ஒரு பத்திரிகையாளர்தான் உதவியாக இருந்தார்,'' என்கிறார் பங்கஜம்.


பிரபல சினிமா பாடகர்கள் அல்லது தொழில்முறை பாடகர்கள் சிலர் திருக்குறளுக்கு இசை வடிவம் தந்திருக்கிறார்கள். ஆனால் அரசுப்பள்ளி பெண் ஆசிரியர் ஒருவர் இப்படி குறட்பாக்களுக்கு இசை வடிவம் கொடுத்திருப்பது இதுதான் முதல் முயற்சி எனலாம்.

சில ஆண்டுக்கு முன்பு, கத்தேரி அரசு நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பங்கஜம் பணியாற்றி வந்தார். அப்போது எட்டாம் வகுப்பை முடிக்கும் மாணவ, மாணவிகள் அதற்கு மேல் படிக்க வேண்டும் என்றால், அங்கிருந்து 5 கி.மீ. தொலைவில் இருக்கும் குமாரபாளையம் அரசுப்பள்ளிக்குத்தான் செல்ல வேண்டிய நிலை இருந்தது. இன்றைக்கும் அரசுப்பள்ளிகளில் பயிலும் பல விளிம்புநிலை குழந்தைகள் வயிறா? வாழ்க்கையா? என்று வரும்போது வயிற்றுப்பாட்டுக்கே முன்னுரிமை அளித்து, படித்த வரை போதும் என்று இடைநின்று விடும் போக்கு நீடிக்கிறது.

குழந்தைகளின் இடைநிற்றலை தடுக்க ஒரே வழி, பள்ளியைத் தரம் உயர்த்துவது ஒன்றுதான் தீர்வு என உணர்ந்தார் பங்கஜம். அதற்கு தகுந்தாற்போல் பள்ளியிலும் 200- க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வந்தனர். அவரின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்தது. கடந்த 2011 இல் கத்தேரி நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அதே பள்ளியில் தமிழ்ப்பாட வகுப்பு ஆசிரியராகத் தொடர்கிறார் பங்கஜம்.


திருக்குறள் மட்டுமின்றி பாரதியார் பாடல்களையும் சொந்தக்குரலில் பாடி பதிவேற்றம் செய்திருக்கிறார். கரோனா ஊரடங்கு காலத்தில், பத்தாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இருக்கும் 12 மனப்பாட செய்யுள் பகுதிகளையும் பாடலாகப் பாடி தன்னுடைய 'குறள் கோ.பங்கயம்' என்ற பெயரிலான யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்திருக்கிறார். ஒரு தொழில்முறை பாடகர் போல ராக ஆலாபானையுடன் பாடியிருப்பது, பரவலாகக் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பின்னணி இசை கோப்பு இருந்திருந்தால், இன்னும் சிறப்பான படைப்பாக வந்திருக்கும்.

இவை தவிர, தமிழின் 247 எழுத்துகளையும் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் கற்றல் அட்டையும் தயார் செய்திருக்கிறார். ''செய்யுள்களுக்கு இசை வடிவம் தர வேண்டும் என்ற ஆர்வம் எப்படி வந்தது?,'' என்று ஆசிரியர் பங்கஜத்திடம் கேட்டோம்.

''நான் ஜே.கே.கே. ரங்கம்மாள் பள்ளியில்தான் படித்தேன். அப்போது ரங்கநாயகி என்ற இசை ஆசிரியர் ஒருவர் இருந்தார். அவர் எல்லா செய்யுள்களையுமே வகுப்பறையில் உடனுக்குடன் ராகமாகப் பாடிக்காட்டி பாடம் நடத்துவார். இன்றைக்கு என்னுடைய இத்தகைய முயற்சிகளுக்கு ரங்கநாயகி டீச்சர்தான் ஊக்கி. ஒருநாள் வானொலியில் 'மாசில் வீணையும்...' என்ற நான்கடி செய்யுள் கேட்டேன். அதை ராகமாகப் பாடிக்காட்டினேன். ஆசிரியர்கள் பலரும் பாராட்டினார்கள். அதனால் எனக்குள் இன்னும் ஆர்வம் அதிகரித்தது,'' என்றவரிடம், இசைவடிவிலான கற்பித்தல் முறைக்கு மாணவர்களிடம் உள்ள வரவேற்பு குறித்த வினாவையும் முன்வைத்தோம்.

''தமிழ் என்றாலே பசங்க எல்லாரும் ரொம்ப ஆர்வமாக இருப்பாங்க. தமிழம்மா இன்னிக்கு என்ன புதுசா சொல்வாரோ என்ற ஆர்வம் இருக்கும். நான் வகுப்புக்குள் நுழைந்ததுமே எல்லாரிடமும் நலம் விசாரிப்பேன். முதலில் அன்புதான் இல்லீங்களா... யாராவது சோகமாக இருக்கிறார்களா என பார்ப்பேன். அப்படி யாராவது இருந்தால் அவர்களைப் பக்கத்தில் அழைத்து விசாரிப்பேன். அதன்பிறகு எல்லாருமே சகஜ நிலைக்கு வந்துவிடுவார்கள். அப்படி மாணவர்கள் குஷியான நிலையில் இருக்கும்போது பாடம் நடத்தினால் நாம் சொல்வது முழுமையான அடைவை எட்டி விடும்.

அன்றாடம் ரெண்டு பாடவேளை முடித்து வரும்போது நானே முழு திருப்தியோடு வருவேன். செய்யுள்களைப் பாடலாக பாடும்போது, மாணவர்கள் ஏதோ பரம இசை பிரியர்கள் போல ஆஹா... என்றெல்லாம் கைகளை அசைத்து தாளம் தட்டிக் கேட்பார்கள். என்னுடைய வகுப்புகளில் பெண் பிள்ளைகளைக் காட்டிலும் பசங்க ஆர்வமாகச் செய்யுள்களைப் பாடலாகப் பாடுகின்றனர். இசையால் எல்லாரையம் எளிதில் ஊடுருவ முடியும்,'' என்றவர், தற்போது ஆறாவது முதல் பத்தாம் வகுப்பு வரை உள்ள அனைத்துச் செய்யுள்களையும் பாடல் வடிவில் கொண்டு வரும் முயற்சியில் இருப்பதாகச் சொன்னார்.


உரையாடலினூடே, முனைப்பாடியார் பாடிய 'அறம் என்னும் கதிர்' என்ற தலைப்பிலான நான்கடிச் செய்யுளை ராகத்துடன் பாடிக்காட்டினார். அது ஒரு அறநெறிப்பாடல். முண்டாசுக்கவிஞன் பாடிய, 'பகைவனுக்கு அருள்வாய் நன்னெஞ்சே' வரிகளைப் பாடலாக ஆசிரியர் பங்கஜத்தின் குரலில் கேட்டபோது, பகைவன்பால் யார்தான் இரக்கம் கொள்ளாமல் இருக்க முடியும்?

ஆசிரியர் பங்கஜத்தின் முயற்சிகளைப் பாராட்டி, சேலம் மாவட்ட நிர்வாகம் குடியரசுத் தின விழாவில் விருது வழங்கி கவுரவித்திருக்கிறது. பல்வேறு அமைப்புகளும் அவருக்கு விருதுகளையும், சான்றிதழ்களையும் வழங்கி பாராட்டி இருக்கிறது. பலரின் கவனத்தையும் பெற்ற ஆசிரியர் பங்கஜத்திற்கும் மனதில் குறைகள் இல்லாமல் இல்லை. ''இப்படித்தான் குமாரபாளையத்தில் ஒருமுறை பட்டிமன்றத்தில் கலந்து கொண்டு பேசினேன் சார்... நான் பேசிய முதலும் கடைசியுமான பட்டிமன்றம் அதுதான்'' என்றார் சிரித்தபடியே.

''குடுபத்தினர் ஒத்துழைப்பு இருந்தால் இன்னும் பல தளங்களிலும் செழுமைப்படுத்திக் கொள்ள முடியும்,'' எனக்கூறும் அவர், ''பத்தோடு பதினொன்றாக என்னால் இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையில் ஆர்வம் இருக்கும். எனக்குப் பாடப்பகுதிகளை இசை வடிவில் கொடுக்க வேண்டும். நிறைய மேடைகளில் தமிழைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. என்னால் உடல் ரீதியாக இயங்க முடியும் வரைக்கும் இந்தப்பணியைத் தொடர விரும்புகிறேன்,'' என்றார் திடமாக.

பங்கஜம் போன்றோரை பள்ளிக்கல்வித்துறையும் ஊக்கப்படுத்தினால் குழந்தைகளின் கற்றல் சுமை எளிமைப்படுத்தப்படும் என்பதோடு, கற்பித்தல் முறையிலும் புதுமை பிறக்கும்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT