ADVERTISEMENT

சேலம்: அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் வெற்றியை நழுவவிட்ட திமுக! காலை வாரிய உடன்பிறப்புகள்!!

08:19 AM Jan 12, 2020 | santhoshb@nakk…

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியை, தொடர்ந்து மூன்று முறை தக்க வைத்திருந்த திமுக, மயிரிழையில் நான்காம் முறையாக தலைவராகும் வாய்ப்பை இழந்திருக்கிறது. ஒரு வாக்கு வித்தியாசத்தில் அதிமுகவைச் சேர்ந்த பார்வதி மணி தலைவராக வெற்றி பெற்றுள்ளார்.

ADVERTISEMENT


சேலம் மாவட்டத்தில், அண்மையில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் திமுக 6, அதிமுக 6, திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சைகள் 6 பேரும் வெற்றி பெற்றுள்ளனர்.

ADVERTISEMENT


அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழு தலைவர் பதவி இந்தமுறை பெண்கள் (பொது) பிரிவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, இந்த ஒன்றியத்தின் முன்னாள் தலைவரான திமுகவின் விஜயகுமார், இம்முறை தனது மனைவி ஹேமலதாவை கவுன்சிலர் தேர்தலில் நிறுத்தினார். விஜயகுமாரின் அண்ணன் செந்தில்குமாரின் மனைவி புவனேஸ்வரியும் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டார். இருவரும் தேர்தலில் வெற்றி பெற்றனர்.


இந்த ஒன்றியத்தில் விஜயகுமாரின் குடும்பத்திற்கென்று தனிப்பட்ட செல்வாக்கு இருக்கிறது. தனிப்பட்ட குணநலன்களும், பாரபட்சமின்றி உதவும் குணமும், கணிசமாக உள்ள வன்னியர் சமுதாய வாக்கு வங்கியும் விஜயகுமாருக்கு பக்கபலமாக உள்ளது. அதனால், தேர்தலுக்கு முன்பிருந்தே இந்தமுறை விஜயகுமாரின் மனைவிதான் ஒன்றியக்குழு தலைவராக வருவார் என்ற எதிர்பார்ப்பு எல்லா மட்டத்திலும் நிலவியது.


அயோத்தியாப்பட்டணத்தில் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்ற பெரும்பான்மைக்கு 10 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இந்நிலையில், திமுக, அதன் கூட்டணியான காங்கிரஸ் உறுப்பினரையும் சேர்த்தால் அக்கட்சிக்கு 7 உறுப்பினர்களின் ஆதரவு இருக்கிறது. திமுகவில் சீட் கிடைக்காததால் சுயேச்சையாக களமிறங்கி வெற்றி பெற்ற செந்திலின் ஆதரவும் திமுகவுக்கு இருந்தது. மேற்கொண்டு, இரண்டு பேரின் ஆதரவு இருந்தால் போதும் என்ற நிலையில், அதற்கான வேலைகளையும் விஜயகுமார் 'கச்சிதமாக' முடித்திருந்தார்.


அதன்படி, திமுக சார்பில் வெற்றி பெற்றிருந்த ஹேமலதா, புவனேஸ்வரி, பிரீத்தி மோகன், உஷா, ஆறுமுகம், பாலியாகவுண்டர், காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற சாந்தி, சுயேச்சைகளாக வெற்றி பெற்ற பாரதி ஜெயக்குமார், சிந்தாமணி, செந்தில் ஆகியோரின் ஆதரவும் திமுக அணிக்கு இருந்தது.


ஆக, உறுதியாக நான்காம் முறையாகவும் விஜயகுமார் தரப்புதான் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர் பதவியைக் கைப்பற்றும் என்ற பெரும் எதிர்பார்ப்புடன், சனிக்கிழமை நடந்த தலைவர், துணைத்தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தலை சந்தித்தனர். திமுக தரப்பில் ஹேமலதாவும், அதிமுக தரப்பில் அனுப்பூர் மணியின் மனைவி பார்வதியும் தலைவர் பதவிக்கு வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.


மறைமுகத் தேர்தலில் பயன்படுத்தப்படும் வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே அச்சிடப்பட்டு இருக்கும். சின்னமோ, வேட்பாளரின் புகைப்படமோ இருக்காது. வாக்களிக்க விரும்பும் வேட்பாளரின் பெயருக்கு நேராக சீல் வைக்க வேண்டும். இதுதான் நடைமுறை. வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில், திமுகவுக்கு 9 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 10 வாக்குகளைப் பெற்ற அதிமுகவின் பார்வதி மணி, முதன்முதலாக அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவியாக வெற்றி பெற்றார்.


இது ஒருபுறம் இருக்க, விஜயகுமாரின் குடும்பம் ஒன்றியக்குழுத் தலைவராக வெற்றி பெற்றுவிடக்கூடாது என்பதில் அதிமுகவைக் காட்டிலும் திமுகவினரே உள்ளடி வேலைகளில் இறங்கி வேலை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. திமுகவின் கிழக்கு மாவட்ட செயலாளர் வீரபாண்டி ராஜா, முன்னாள் ஒன்றிய நிர்வாகி கவுதமன் ஆகியோர் விஜயகுமாருக்கு எதிராக வேலை செய்தார்கள் என்கிறார்கள் அக்கட்சியின் உள்விவகாரங்களை அறிந்தவர்கள்.


ஒருகாலத்தில் கவுதமனை கவிழ்த்துவிட்டுதான் ஒன்றிய பொறுப்புக்கு விஜயகுமார் வந்தார். அப்போது செய்த முன்வினைதான், இப்போது விஜயகுமாருக்கு எதிராக திரும்பி இருக்கிறது என்கிறார்கள். வீரபாண்டி ராஜாவிடம் இருந்து தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதும்கூட விஜயகுமாருக்கு எதிரான உள்குத்துகளுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள். அதனால்தான், விஜயகுமாருக்கு ஆதரவு தெரிவித்த கவுன்சிலர்களில் ஒருவரையே கருப்பு ஆடாக பயன்படுத்தி, அவரை வீழ்த்தியதாகவும் சொல்கிறார்கள்.


அதேநேரம், சொந்த கட்சியினரின் உள்ளடிகளால் அயோத்தியாப்பட்டணத்தை கோட்டையாக தக்க வைத்திருந்த திமுகவிடம் இருந்து இந்த முறை அதிமுக வெற்றியை தட்டிப் பறித்துவிட்டதே என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.


உள்குத்துகளால் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்ததால் விஜயகுமார் ரொம்பவே அப்செட் ஆனார். ஒருகட்டத்தில் மாலையில் நடைபெற இருக்கும் துணைத்தலைவர் தேர்தலையேகூட புறக்கணித்து விடலாம் என்றுகூட சிந்திக்கத் தொடங்கி இருந்தார். அவருடைய அண்ணன் செந்தில்குமார், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்கள் விஜயகுமாருக்கு நம்பிக்கை அளித்தனர்.


இதையடுத்து, சனிக்கிழமை மாலையில் நடந்த துணைத்தலைவர் தேர்தலில் திமுக தரப்பில் புவனேஸ்வரியும், அதிமுக தரப்பில் மோனிஷாவும் (சுயேச்சை) போட்டியிட்டனர். இந்த மறைமுகத் தேர்தலில் ஒரு வாக்கு செல்லாததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, இரு வேட்பாளர்களும் தலா 9 வாக்குகள் பெற்று சமநிலையில் இருந்தனர். எங்கே இந்த வாய்ப்பும் கைநழுவிப் போய்விடுமோ என்று திமுகவினர் திக்...திக்... நிலையில் இருக்க, வெற்றியாளரைத் தேர்வு செய்ய குலுக்கல் முறை பயன்படுத்தப்பட்டது. இதில் திமுக வேட்பாளர் புவனேஸ்வரி துணைத்தலைவராக வெற்றி பெற்றார்.


காலையில் தலைவர் தேர்தலில் தோற்றாலும், மாலையில் துணைத்தலைவர் தேர்தலிலாவது வெற்றி கிடைத்ததே என்ற உற்சாகத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். புவனேஸ்வரிக்கும், அவருடைய சகோதரியும், விஜயகுமாரின் மனைவியுமான ஹேமலதா ஆகிய இருவருக்கும் திமுகவினர் பூங்கொத்துகள் கொடுத்தும், மாலைகள், சால்வைகள் அணிவித்தும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.


ஏற்காடு ஒன்றியத்திலும் மொத்தமுள்ள 6 கவுன்சிலர் இடங்களில் திமுக, அதிமுகவும் தலா 3 இடங்களில் வெற்றி பெற்றிருந்தன. இந்த நிலையில், திமுக கவுன்சிலர்கள் ஆளுங்கட்சியினரிடம் விலை போனதால், அங்கேயும் அதிமுகவே தலைவர் பதவியைக் கைப்பற்றியது. ஆளுங்கட்சியை வெற்றி பெறச்செய்ய பெரும்தொகை கைமாறியதாக சொல்கின்றனர். சேலம் ஒன்றியத்திலும் திமுக கூட்டணியில் அங்கம் வகித்த கம்யூனிஸ்ட் கட்சி கடைசி நேரத்தில் ஆளுங்கட்சிக்கு சாதகமாக தாவியதாகவும் கூறுகின்றனர்.


உள்கட்சி பூசல்களாலும், உள்ளடி வேலைகளாலும், சேலம் மாவட்டத்தில் வெற்றி பெறவேண்டிய ஒன்றியங்களில்கூட இந்தமுறை திமுக கோட்டை விட்டிருக்கிறது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT