ADVERTISEMENT

சேலம் மாநகராட்சியில் காய்கறி கடை ஒதுக்கீட்டில் ஊழல்!

09:25 AM Jun 28, 2020 | santhoshb@nakk…

ADVERTISEMENT


'எரிகிற வீட்டில் பிடுங்கியது லாபம்' என்கிற சொலவடை யாருக்கு வேண்டுமானாலும் பொருந்தாமல் போகலாம்; ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலம் மாநகராட்சிக்கு ரொம்பவே பொருந்தும். அன்றாடம் தெருவோரம் கடை விரித்தால்தான் வீட்டில் அடுப்பெரியும் என்ற நிலையில் இருக்கும் சாதாரண சாலையோர காய்கறி வியாபாரிகளிடம்கூட போலி ரசீது மூலம் பல லட்ச ரூபாய்களைச் சுருட்டியிருப்பதாக சேலம் மாநகராட்சி மீது புகார்கள் எழுந்துள்ளன.

ADVERTISEMENT

கரோனா தொற்று அபாயம் காரணமாக, தமிழகத்தில் மார்ச் 24- ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சேலம் மாநகராட்சியில், காலை 08.00 மணி வரை காய்கறி கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் விற்பனை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டது. சமூக இடைவெளி வேண்டும் என்பதற்காக, சேலம் ஆற்றோரம் மற்றும் ஆனந்தா இறக்கம் பகுதிகளில் இயங்கி காய்கறி கடைகள் அதிரடியாக அப்புறப்படுத்தப்பட்டன.

இதையடுத்து, அவர்களுக்கு பழைய பேருந்து நிலையம் பகுதியில் காய்கறி கடைகள் வைக்க இடம் ஒதுக்கப்பட்டது. ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதிகளில் 350- க்கும் மேற்பட்டோர் காய்கறி கடை வைத்திருந்த நிலையில், பழைய பேருந்து நிலையம் பகுதியில் வெறும் 100 கடைகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டதால், இடம் கிடைக்காதவர்கள் கடும் ஏமாற்றம் அடைந்தனர். இடம் ஒதுக்கீடு பெற்ற கடைக்காரர்களிடம் தலா 1500 முதல் 5000 ரூபாய் வரை அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல அதிகாரிகள் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாகவும் புகார்கள் எழுந்தன.

இந்நிலையில்தான், காய்கறி கடைகள் வைக்க ஒப்பந்தம் விடாமலேயே, சேலம் மாநகராட்சி நிர்வாகம் குண்டர்களுடன் கூட்டணி வைத்துக்கொண்டு சிறு காய்கறி கடைக்காரர்களிடம் ஏகத்துக்கும் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளது. அதுவும், கரோனா ஊரடங்கின் பெயரில் போலி ரசீது மூலம் பல லட்சம் ரூபாய்களை சுருட்டியிருப்பதாகக் கூறுகிறார்கள் காய்கறி வியாபாரிகள்.

இதுபற்றி, சாலையோர வியாபாரிகள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் ராஜூ, கன்னியம்மாள், புவனேஸ்வரி, முருகன் ஆகியோர் பேசினர். சேலம் ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதி, பஜார் தெரு ஆகிய இடங்களில் காய்கறிகள், பழங்கள் என 384 சாலையோர வியாபாரிகள் கடை போட்டு வந்தோம். ஊரடங்கு உத்தரவு காரணமாக இந்த கடைகளை எல்லாம் ஒரே நாளில் தடாலடியாக மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது. பிறகு, பழைய பேருந்து நிலையம் பகுதியில் மாற்று இடம் ஒதுக்கியபோது, 100 பேருக்கு மட்டுமே கடை வைக்க அனுமதித்தனர்.

அங்கே இடம் கிடைக்காத காய்கறி கடைக்காரர்கள் ஒவ்வொரு நாளும் இன்று இடம் ஒதுக்குவார்கள், நாளை ஒதுக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பில் அன்றாடம் மாநகராட்சி அலுவலகத்திற்கு நடையாய் நடந்ததுதான் மிச்சம். ஜூன் மாதத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இயங்கி வந்த காய்கறி கடைகள், அருகிலுள்ள மாநகராட்சி வணிக வளாகத்திற்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே ஏப்ரல், மே மாதத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடை நடத்த அனுமதி பெற்றவர்களுக்கே புதிய இடத்திலும் கடை நடத்த இடம் ஒதுக்கியுள்ளனர்.

ஆளுங்கட்சி என்ற செல்வாக்கு இருக்க வேண்டும்; இல்லாவிட்டால், மாநகராட்சி அதிகாரிகளுக்கு காசு கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் மட்டுமே வணிக வளாகத்தில் கடை போட முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அதேநேரம், வணிக வளாக பகுதியில் அனுமதி இல்லாத இடத்தில் மொத்த வியாபாரிகளிடம் தலா 5000 ரூபாய் வரை பணம் வாங்கிக் கொண்டு, சட்ட விரோதமாக கடை நடத்த அனுமதி கொடுத்துள்ளனர். இது தொடர்பாக அம்மாபேட்டையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்திலும், முதன்மை அலுவலகத்திலும் பலமுறை புகார் மனு கொடுத்தும் பயனில்லை.

சாலையோர காய்கறி கடைக்காரர்களிடம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தக்காலம் கடந்த மார்ச் 31- ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டது. ஆனாலும், மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து சாலையோர காய்கறி வியாபாரிகளிடம் அன்றாடம் சுங்கம் வசூலிக்கிறது. ஊரடங்கு காலத்தில் காய்கறி வியாபாரிகள், விவசாயிகளிடம் சுங்கம் வசூலிக்கக்கூடாது என்று அரசாங்கம் சொல்கிறது. அதையெல்லாம் அவர்கள் கண்டுகொள்வதே இல்லை.

அப்படித்தான் வசூலித்துவிட்டுப் போகட்டும் என்றாலும், அதிலும் ஒரு நியாயம் வேண்டாமா? ஒரே சீரியல் நம்பர் கொண்ட ரசீதுகள் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஜூன் வரை பல லட்ச ரூபாய்களை மாநகராட்சி நிர்வாகம் சுருட்டிவிட்டது. மாநகராட்சிக்கு சம்பந்தமே இல்லாத குண்டர்கள், தினமும் காலையில் காய்கறி வியாபாரிகளிடம் கடைக்கு 60 ரூபாய் முதல் 550 ரூபாய் வரை சுங்கம் வசூலித்துள்ளனர்.

சுங்கம் வசூலிக்கும் குண்டர்களுக்கும் மாநகராட்சிக்கும் யாதொரு சம்பந்தமும் இல்லை. இதையெல்லாம் கேள்வி கேட்டால், கண்ணியக்குறைவாக பேசுகிறார்கள். இப்படி போலி ரசீது போட்டு கொள்ளை அடிக்கும் தொகையெல்லாம் யாருடைய கல்லாவை நிரப்புகிறது என்று தெரியவில்லை,'' என்கிறார்கள் சாலையோர வியாபாரிகள், சுயதொழில் செய்யும் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள்.

காய்கறி கடைக்காரர்கள் ஒவ்வொருவருக்கும் நான்கு சதுர அடி இடம் ஒதுக்கப்படுகிறது. அதற்கு, மாநகராட்சி சட்ட விதிகளின்படி கடைக்கு தலா 20 ரூபாய்க்கு மேல் வசூலிக்கக் கூடாது. ஆனால், சரக்கு லாரியில் இருந்து சந்தைக்கு கொண்டு வந்து இறக்கப்படும்போது ஒரு பெட்டி தக்காளிக்கு 10 ரூபாய் இறக்குக் கூலியாகவும், அதை சில்லரை வியாபாரிகளின் இருப்பிடத்திற்குக் கொண்டு செல்வதற்கு கிரேடுக்கு 20 ரூபாயும், கடை நடத்த 60 முதல் 550 ரூபாய் வரையிலும் சுங்கம் வசூலி க்கின்றனர். சுங்கம் வசூலிக்கும் ஒப்பந்தக்காலம் அமலில் இருந்தபோது குத்தகைதாரர்கள் எந்தளவு வசூலித்தார்களோ, அதைவிட பல மடங்கு கட்டணத்தை மாநகராட்சி நிர்வாகம் குண்டர்களுடன் சேர்ந்து கொண்டு வசூலித்து வருகிறது.

இதுகுறித்து சேலம் மாநகராட்சியின் அம்மாபேட்டை மண்டல உதவி ஆணையர் (பொறுப்பு) ராம் மோகனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''சார்... ஆனந்தா இறக்கம், ஆற்றோரம் பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடந்து வருவதால் இனி அங்கு காய்கறி கடைகள் நடத்த முடியாது. அவர்களுக்கு சேலம் முதல் அக்ரஹாரம், நீலாம்பாள் மருத்துவமனை இறக்கம், கோட்டை மாரியம்மன் கோயில் பின்பகுதிகளில் இடம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான சுங்கம் வசூலிக்கும் புதிய ஏல ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. வரும் ஜூலை 1- ஆம் தேதி ஒப்பந்தம் முடிவு செய்யப்பட உள்ளது. இனிமேல் அதிகாலை 05.00 மணி முதல் காலை 08.00 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள் இயங்கும். மற்றபடி, நான் இந்த சீட்டுக்கு புதுசுங்க சார். எத்தனை கடைகளுக்கு அனுமதி என்ற விவரங்களை நீங்கள் ஏஆர்ஓவை கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்,'' என்றார்.

இதையடுத்து நாம் அம்மாபேட்டை மாநகராட்சி மண்டல உதவி வருவாய் அலுவலர் (ஏஆர்ஓ) செந்தில்முரளியிடம் தொடர்பு கொண்டோம். ''வணிக வளாகத்தில் காய்கறி கடை நடத்துவோரிடம் சுங்கம் வசூல் பணிகளை இன்னும் யாருக்கும் ஏலம் விடவில்லை. அதற்கான ஒப்பந்தம் ஜூலையில் இறுதி செய்யப்படும். ஏப்ரல் முதல் தற்போது வரை மாநகராட்சி நிர்வாகம்தான் நேரடியாக சுங்கம் வசூலிக்கிறது. மாநகராட்சி ஊழியர்களுக்கு கொரோனா டூட்டி இருப்பதால், சுங்கம் வசூலிக்கும் பணிகளை வெளி ஆள்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். அவர்கள் நமக்கு 'சப்போர்ட்டிங்' ஆக இருக்கிறார்கள்.

சுங்கம் வசூலிப்பதற்காக ஒரே சீரியல் நம்பரில் பல ரசீது போடப்பட்டதாக காய்கறி கடைக்காரர்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க சான்சே இல்லீங்க. அவர்கள் 'பில்டப்' செய்து பேசுவதுபோல் தெரிகிறது. அது ஒண்ணுமில்லீங்க சார்... மொத்தம் 400 காய்கறி கடைக்காரர்கள் இருக்கிறார்கள். புதிதாக இடம் ஒதுக்கியபோது பலருக்கு இடம் கிடைக்கவில்லை. அதனால் இப்படி புகார் சொல்கிறார்கள்,'' என்கிறார் செந்தில் முரளி.

ஏற்கனவே சேலம் மாநகராட்சியில் சைக்கிள் ஸ்டேண்டு, கடைகளை குத்தகை எடுத்துள்ள ஆளுங்கட்சி பிரமுகர் ஒருவர்தான், காய்கறி கடைக்காரர்களிடம் அடாவடியாக சுங்கம் வசூலித்து வருவதாக பல தரப்பிலும் சொல்லப்படுகிறது. அவர் நினைத்தால்தான் யார் ஒருவருக்கும் குத்தகை கிடைக்கும் என்ற அளவுக்கு மாநகராட்சி ஆணையருடன் நெருக்கத்தை வளர்த்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார்கள். ஆனால், அவரைப் பற்றியோ மாநகராட்சி தரப்பில் ஒருவரும் பிடிகொடுத்து பேசவும் மறுக்கிறார்கள்.

''எங்க தாத்தா, எங்க அப்பா ஆகியோரும் தெருவில்தான் காய்கறி கடை போட்டார்கள். நானும் அதே தெருவில்தான் கடை நடத்தி வருகிறேன். இப்படி காலங்காலமாக கேர் ஆப் பிளாட்பார்மாக இருக்கும் நாங்கள், என் பையனையாவது படிக்க வைத்து உத்தியோகத்துக்கு அனுப்பணும்னு நினைக்கிறோம். இந்த காய்கறி கடையால ஏதோ அரை வயித்து கஞ்சிக்குதான் வருமானம் வரும். இப்போது கொரோனா என்ற பெயரில் எங்களை ஒவ்வொரு இடமாக மாநகராட்சி அதிகாரிகள் அலை க்கழிப்பதோடு, அடாவடியாக சுங்கம் வசூலித்து வயிற்றில் அடிக்கிறார்கள். இதெல்லாம் நியாயம்தானா?,'' எனக் கேட்கிறார் ஒரு காய்கறி கடைக்காரர்.

அவருடைய கேள்வி, மாநகராட்சி ஆணையரின் செவிகளில் விழுந்தால் நல்லது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT