ADVERTISEMENT

எழுச்சியா? நடிப்பா? - திரைக்குப் பின்னே அரசியல்!

11:00 PM Jan 06, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக, ‘தமிழகம் மீட்போம்’, ‘100 நாட்கள் தேர்தல் பரப்புரை’, ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’, ‘மக்கள் கிராம சபைக் கூட்டம்’, ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என பல தலைப்புகளில், மக்களைச் சந்தித்து வருகிறது திமுக.

பெண்களிடம் பெரிய மாற்றம்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகளிரணிச் செயலாளர் கனிமொழி எம்.பி., இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஆகியோர் செல்லுமிடமெல்லாம் கூட்டமோ கூட்டம். இதனை மக்களின் எழுச்சியாகவே பார்க்கிறது அக்கட்சி. மக்கள் கிராம சபைக் கூட்டமொன்றில் மு.க.ஸ்டாலினும்கூட “திமுக நடத்தும் மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்குப் பெண்கள் அதிகமாக வருகின்றீர்கள். பெண்களிடம் பெரிய மாற்றத்தைக் காணமுடிகிறது. அதனால், இதைக் கூட்டம் என்று சொல்வதைவிட, கிராமப் பெண்கள் மாநாடு என்றே கூறவேண்டும்” என்று பெருமிதப்பட்டுள்ளார்.

எல்லாமே செட்டப்!

தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜுவோ, “தலைக்கு ரூ.200-லிருந்து ரூ.300 வரை பணம் கொடுத்து கிராம சபைக் கூட்டங்களுக்கு பொதுமக்களை அழைத்து வருகிறார்கள். பணத்தை இறைத்து கூட்டத்தைக் கூட்டி அதிமுக ஆட்சி குறித்து குறை பேசுகிறார்கள். இதுபோன்ற ‘செட்டப்’ கூட்டங்களைப் பார்த்துப் பயப்படுவோமா?” என்று கேலி பேசியிருக்கிறார்.

உட்கார்வதே வேலை!

திமுக தொண்டரணி ரவிச்சந்திரனோ, “அமைச்சருக்கு விவரம் பத்தாது. இப்பக்கூட, முதலமைச்சர் எடப்பாடி வர்றப்ப கூட்டம் சேர்க்கிறதுக்கு ஆளுக்கு 200 ரூபாய் தரலியா? ஜெயலலிதா பிரச்சாரத்துக்கு வரும்போதும் கூலி கொடுத்துத்தான் கூட்டத்துக்கு ஆள் சேர்த்தாங்க. தானா கூட்டம் சேர்ந்ததெல்லாம் கலைஞர், எம்.ஜி.ஆர். பீரியட்லதான்” என்றார் நேர்மையுடன்.

கட்சி பேதமின்றி கூட்டங்களில் கலந்துகொள்ளும் ராக்காயி, “நூறு நாள் வேலைல வேலை பார்க்கிற மாதிரி சும்மா போயிட்டு வர்றோம்ல. அதுமாதிரிதான் இதுவும். ஒருநாள் வேலை. வாங்க.. வந்து உட்கார்ந்துட்டு போம்பாங்க. என்னென்னமோ பேசுவாங்க. எதுவும் புரியாது. தூக்கம் தூக்கமா வரும். பக்கத்துல இருக்கிற பொம்பளைங்க.. கட்சி ஆளுங்க சொல்லிக் கொடுத்த மாதிரி கை தட்டி, வர்ற தூக்கத்தையும் கெடுத்திருவாங்க” என்று சலித்துக்கொண்டார்.

பார்க்கப் பிடிக்காத முகங்கள்!

காலச்சக்கரத்தை பின்னோக்கி சுழற்றிய முதியவர் ஏழுமலை, “அப்பல்லாம் எம்.ஜி.ஆர். வர்றாருன்னா.. முன்னகூட்டியே போயி ரோடே கதின்னு கிடப்போம். நாங்க போறது சாயங்காலம்னா.. விடியக் காலைலதான் எம்.ஜி.ஆர். வருவாரு. சோறு தண்ணி வேணாம்ங்க.. வாத்தியாரு முகத்த பார்த்தாலே போதும்னு கிறுக்குப் பிடிச்சுப் போயி இருப்போம். இப்ப எந்த மூஞ்சியவும் பார்க்கப் பிடிக்கல” என்று நிகழ்கால அரசியலில் இருந்து விலகிப் பேசினார்.

உப்புச்சப்பில்லாத பேச்சு படுபோர்!

டீ கடைக்காரரான மாதவன் “விடுதலை உணர்வோடு இருந்த காலத்துல.. காந்தி வர்றாருன்னா.. ஒவ்வொரு ரயில்வே ஸ்டேஷன்லயும் கூட்டம் அலைமோதுமாம். எம்.ஜி.ஆருக்கு மட்டுமில்ல.. பெரியாருக்கும் கூட்டம் கூடிருக்கு. அந்தக் கால அரசியல் கூட்டங்கள்ல நிதி வசூலெல்லாம் நடந்திருக்கு. அண்ணா பேச்சைக் கேட்கிறதுக்காகவே பெருங்கூட்டம் கூடிருக்கு. வைகோ கூட்டம்னா.. சுத்துப்பட்டி கிராமத்துல இருந்து விழுந்தடிச்சு போவாங்க. கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்துக்கெல்லாம் காசு கொடுத்தா ஆளு சேர்க்கிறாங்க? சீமானும் அப்படித்தான். கழுத்து நரம்பு புடைக்கிற மாதிரி கத்திக்கத்திப் பேசுவாரு. அவரோட பேச்சுக்கு இளவட்ட பசங்ககிட்ட மவுசு இருக்கு.

தீப்பொறி ஆறுமுகம், வெற்றிகொண்டான் பேச்செல்லாம் வேற ரகம். அந்த மாதிரி பேச்சை வெறித்தனமா ரசிச்சவங்க ரொம்பப் பேரு. கமல் கூட்டத்துக்கு யாரும் பணம் தர்றது இல்ல. அதுமாதிரிதான்.. ஜாதி, மத உணர்வைத் தூண்டுற மாதிரி பேசுறவங்க கூட்டத்துக்கு, அதுல பற்றோடு இருக்கவங்க போறாங்க. பேச்சுல ஈர்ப்பு இருந்தா பைசா கொடுக்க வேணாம்ங்க. கூட்டம் அதுவா சேர்ந்திரும். உப்புச்சப்பு இல்லாம.. பேச்சுல அரைச்ச மாவையே அரைக்கிற அரசியல் தலைவருன்னா.. உட்கார்ந்து கேட்கிறவங்களுக்கு ரொம்ப போர் அடிக்கும்ல. அப்புறம்.. பணம் கொடுத்தால்தான் ஆளுங்க வருவாங்க. கூட்டத்துக்கு வர்ற எல்லாருக்குமே பணம் தர்றாங்கன்னு ஒரேயடியா சொல்லிற முடியாது. கட்சிக்காரங்களும் வரத்தான் செய்வாங்க. முன்னால இருக்கிற நாலு வரிசைல கட்சிக்காரங்க இருப்பாங்க. கூட்டிட்டு வந்தவங்கள அவங்களுக்குப் பின்னால உட்கார வைப்பாங்க” என்று படுவிவரமாகப் பேசினார்.

கொள்கையில் அல்ல! கொள்ளையில் போட்டி!

சமூக ஆர்வலரான வள்ளிநாயகம், “நாட்டைச் சுரண்டி சம்பாதித்த பணம் இல்லைன்னா இங்கே அரசியல் கட்சி நடத்த முடியுமா? ஓட்டுக்குத்தான் பணம்கொடுக்க முடியுமா?

முதலமைச்சர் பழனிசாமி ஒரு தடவை கார்ல போறப்ப கையை ஆட்டிக்கிட்டே போனாரு. அப்ப அந்த ரோட்டுல ஆளே இல்ல. உடனே, அதை போட்டோ பிடிச்சு, மக்கள் செல்வாக்கு இல்லாத எடப்பாடின்னு மீம்ஸ் போட்டாங்க. இப்ப பாருங்க.. சத்தியமங்கலத்துல எடப்பாடி பிரச்சாரம் பண்ணுற ஸ்பாட்ல இம்புட்டு கூட்டம் எப்படி வந்துச்சு? திடீர்ன்னு அவருக்கு மக்கள் ஆதரவு பெருகிருச்சா? இந்த ரெண்டு கட்சிக்கும் கூடுற கூட்டம் எல்லாமே முக்கால்வாசி செட்டப் கூட்டம்தாங்க. இவங்க இப்படி போலியா மாஸ் காட்டுறதுக்கு காரணம் இருக்கு. அது என்னன்னா.. என்னமோ மக்களோட அபரிமிதமான ஆதரவு இவங்க கட்சிக்கு இருக்கிற மாதிரி, பொய்யான ஒரு தோற்றத்தை மக்கள்கிட்ட உருவாக்கி, வாக்குகளை அறுவடை பண்ணுறதுதான்” என்று அடித்துச் சொன்னார், சூடமேற்றி சத்தியம் பண்ணாத குறையாக.

ஊழல் முகத்துக்கு உத்தம முகமூடி!

“ரெண்டு கட்சியுமே சினிமாவால வளர்ந்ததுதான். சீன் போடறது அவங்களுக்கு ஒன்னும் புதுசில்ல” என்று கூறிய ‘தோழர்’ செந்தில்வேல், “முன்னெல்லாம் ஓட்டு போடறப்ப மட்டும்தான் பணம் கொடுப்பாங்க. இப்ப.. கூட்டத்துக்கு வந்துட்டுப் போங்கன்னு.. தலைவருங்க வர்றப்பல்லாம் பணம் கொடுக்கிறாங்க. எல்லா ஊழலும் பண்ணிட்டு.. எங்கள மாதிரி யோக்கியன் எவன் இருக்கான்னு பேசுறதுக்குப் பேருதான் நடிப்பு. மக்களும் வயித்துப் பொழப்புக்காக எந்தக் கட்சி கொடுத்தாலும் வாங்கிட்டு, கூட்டத்துக்குப் போயி கைதட்டி நடிச்சா என்ன தப்பு? கோடி கோடியா கொள்ளையடிச்சு வச்சிருக்கிற அரசியல்வாதிங்க மலிந்து கிடக்கிற நம்ம நாட்டுல, வறுமையைப் பயன்படுத்தி மக்களில் சிலரையும் வேஷம்போட வைக்கிறாங்க. ஏதோ ஒரு வகையில், அரசியல்வாதிகளின் ஊழல் பணம், அன்றாடங்காய்ச்சிகளின் ஒருநாள் பசியைப் போக்க உதவுகிறது. இதைச் சரியென்று சொல்லிவிட முடியாது” என்றார் யதார்த்தமாக.

‘அத்தனையும் நடிப்பா?’ என யாரும் இங்கே ‘உச்’ கொட்ட வேண்டியதில்லை. உலகமே ஒரு நாடக மேடைதான்!

பேராசை என்ற அச்சாணியில் சுழலும் அரசியல் சக்கரம்!


அரசியல் தலைவர்கள் ஆட்சி, அதிகாரத்தைக் கைப்பற்ற துடிப்பதற்கு வலுவான காரணங்கள் உண்டு. ஒவ்வொரு அரசியல் கட்சியும், தனது கட்டமைப்பில் உள்ள மாவட்டச் செயலாளர்களில் இருந்து, சார்பு அணிகள், நகர, ஒன்றிய, பேரூர், கிளை நிர்வாகிகள் வரை அத்தனை பேரையும் அரவணைத்து வழிநடத்திச் செல்ல வேண்டியதிருக்கிறது. கட்சி நிர்வாகிகளில் 95 சதவீதம் பேர், அரசியலை முழுநேரத் தொழிலாகவே பார்த்து வருவதால், கட்சியின் கட்டளையை ஏற்று, கொடியேற்றுவதிலிருந்து கூட்டம் சேர்ப்பது வரை சகலத்துக்கும் செலவழிக்க நேரிடுகிறது. இந்த நிர்வாகிகள் ஒன்றும் மிட்டா, மிராசுகள் அல்ல. அதனால், பொதுவாழ்க்கைக்கும், சொந்த வாழ்க்கைக்கும் பணம் அதிகமாகத் தேவைப்படுகிறது.

இதற்கெல்லாம் எங்கே போவார்கள்? தேர்தல்களைச் சந்திப்பதற்கும், வாக்காளர்களைக் வளைப்பதற்கும், கட்சிக்கும் அபரிமிதாக பணத்தேவை உள்ளது. அந்தப் பணம், நல்ல வழியில் கிடைப்பதற்கு வாய்ப்பே இல்லை. ஆட்சிப் பொறுப்பு கையில்இருந்தால்தான், கான்ட்ராக்ட் பெர்சன்டேஜிலிருந்து, போஸ்டிங் போடுவது வரை, அத்தனை துறைகளிலும் ஊழல் செய்து, காலகாலத்துக்கும், தலைமுறை தலைமுறைக்கும், தேவைக்கு அதிகமாகவே பணம்சேர்க்க முடியும். தலைவர்களில் இருந்து நிர்வாகிகள் வரை, அரசியல் போர்வையில் பணத்தைக் குவிக்கும் பேராசை என்ற அச்சாணியில் சுழல்கின்ற சக்கரமாகவே உள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT