ADVERTISEMENT

மூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது..! பாஜகவை கடுமையாகச் சாடிய முத்தரசன்..!

04:16 PM Nov 30, 2020 | rajavel

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி, கடந்த ஐந்து நாட்களாக, பஞ்சாப் விவசாயச் சங்கங்களின் கூட்டமைப்பு போராட்டம் நடத்தி வருகிறது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், டெல்லியில் நுழைவதைத் தடுக்க போலீசார் கண்ணீர் புகைக் குண்டு வீசி, தடியடி நடத்தினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. விவசாயிகள் மீதான தாக்குதலுக்கு, எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்து கொண்டார்.

அப்போது அவர், விவசாயிகள் எவ்வளவு வேண்டுமானாலும் இருப்பு வைத்துக்கொள்ளலாம். விலை உயர்ந்த பிறகு விற்கலாம், அப்படியான ஒரு நல்ல காரியத்தை நாங்கள் செய்திருக்கிறோம் என்று மோடி சொல்லி வருகிறார்.

உண்மையில் விவசாயி இருப்பு வைக்க முடியாது. பெரிய வியாபாரிகள்தான் இருப்பு வைத்துச் சம்பாதிப்பார்கள். இதனை, பா.ஜ.க தலைவர்கள் உள்பட மோடி வரை அனைவரும் மறுத்தார்கள். பெரம்பலூரில் உள்ள குடோனில் வெங்காயத்தை டன் கணக்கில் பதுக்கி வைத்ததைப் பறிமுதல் செய்ததோடு நான்கு பேரை கைது செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க என்ன சொல்கிறது?

செப்டம்பரில் சட்டத்தை நிறைவேற்றினார்கள். மூன்று மாதங்கள்கூட ஆகவில்லை, அதற்குள் வெங்காயத்தை யார் இருப்பு வைத்தார்கள் என்று தெரிய வந்திருக்கிறதே?.

ஒரு விவசாயி தன்னுடைய பொருளை எங்கே வேண்டுமானாலும் கொண்டு சென்று யாரிடம் வேண்டுமானாலும் விற்கலாம் என்கிறார்கள். எந்த ஒரு விவசாயியும் தனிப்பட்ட முறையில் அதுபோல் செய்வது நடைமுறையில் சாத்தியமே கிடையாது.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு எதுவாக இருக்கட்டும், உடனே அதனை விற்க வேண்டும், அந்த காசை வாங்கி கடனை அடைக்க வேண்டும், குடும்பச் செலவு செய்ய வேண்டும், மறுபடியும் சாகுபடி செய்ய வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். இதுதான் யதார்த்தமான நிலைமை. ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்குப் பொருளை வாகனங்கள் மூலம் கொண்டு சென்று விற்பது என்பது சாத்தியமே கிடையாது. அதேபோல் இருப்பு வைப்பதும் சாத்தியமில்லை.

விலை குறையாமல் இருப்பதற்கு வியாபாரிகளும், விவசாயிகளும் ஒப்பந்தம் செய்து கொள்ளலாம். ஒப்பந்தம் செய்யும்போது குறிப்பிடப்பட்டுள்ள தொகையைக் கொடுக்கவில்லை என்றால், புகார் செய்து அதனை வசூல் செய்யலாம் என்று சட்டம் சொல்கிறது.

நடைமுறையில் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம், கரும்பு விவசாயி கரும்பை உற்பத்தி செய்து ஆலைகளுக்குத்தான் கொடுக்க வேண்டும். ஆலைதான் கரும்பின் விலையைத் தீர்மானிக்கிறது. அரசாங்கம் அதனுடன் கூடுதலாகக் கொடுப்பதை தீர்மானிக்கிறது. ஆனால், அந்தத் தொகைகளை விவசாயிகள் பெற முடியவில்லையே. தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆலைகளிலும் கரும்பு விவசாயிகளுக்கு தர வேண்டிய பாக்கித் தொகை கோடிக்கணக்கான ரூபாய் உள்ளது. அப்படியென்றால் அவர்கள் சொல்லும் மூன்று விஷயங்களுமே நடைமுறையில் தோற்றுப்போனது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தல், அதற்கு முந்தைய நாடாளுமன்றத் தேர்தல், மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க வெற்றிபெறுவதற்கு கார்ப்பரேட் முதலாளிகள்தான் பெரிய உதவிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அந்த கார்ப்பரேட் முதலாளிகள் பலமடைய வேண்டும் என்பதற்காக, நன்றி விசுவாசத்தோடு, அரசாங்கத்தின் சட்ட ரீதியான உதவிகளைக் கொண்டுவருவதற்கு, பா.ஜ.க அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறது என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார் அழுத்தமாக.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT