ADVERTISEMENT

புதுச்சேரி (மாநில) - மக்களவை தொகுதி நிலவரம்:

05:56 PM Mar 22, 2019 | sundarapandiyan

1954-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி விடுதலை பெற்றது. ஆனால் 1963-ஆம் ஆண்டுதான் புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு முழுமையாக இந்தியாவின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் வந்தது. அந்த 1963-ஆம் ஆண்டு நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிவப்பிரகாசம் எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு 1968-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த புதுவை சிவம் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது காலத்தில் பல்வேறு பகுதிகளாக பிரிந்திருந்த பகுதிகள் நகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது, வரி சீரமைப்பு செய்யப்பட்டது. 1971-ல் காங்கிரஸ் கட்சி மோகன் குமாரமங்கலம் எம்.பி யாக வெற்றி பெற்றார். 1977-ஆம் ஆண்டு அ.தி.மு.கவை சேர்ந்த அரவிந்த பாலாபழனுார் வெற்றி பெற்றார். இவரது காலத்தில் புதுச்சேரியை தமிழ்நாட்டுடன் இணைக்க எடுத்த முன்னெடுப்புக்கு பலத்த எதிர்ப்பு ஏற்பட்டது. அதன்பிறகு புதுச்சேரியில் அ.தி.மு.கவுக்கு பின்னடைவுதான். அதேசமயம் காரைக்கால், புதுச்சேரி துறைமுக திட்டம் செயல்படுத்தப்பட்டது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

1980, 1984, 1989 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சண்முகமும், 1991, 1996, 99 தேர்தல்களில் எம்.ஓ.ஹெச்.பாரூக்கும், 2009-ம் ஆண்டு தற்போதைய முதலமைச்சர் நாராயணசாமி என சுமார் 50 ஆண்டு காலம் காங்கிரஸின் கோட்டையாக இருந்தது புதுச்சேரி. 1980 முதல் 91 வரை எம்.பியாக சண்முகம் காலத்தில் சுதேசி பஞ்சாலைகள் இயக்க நடவடிக்கை எடுத்தார். 1991 முதல் 2004 வரை எம்.பி.ஆக இருந்த எம்.ஓ.ஹெச்.பாரூக் பெட்ரோலியத்துறை இணையமைச்சராகவும் இருந்தார். லாஸ்பேட்டை விமான நிலையம் அமைக்க காரணமாக இருந்தார்.

இடையில் 1998-ல் அ.தி.மு.கவை சேர்ந்த கல்மண்டபம் ஆறுமுகமும், 2004-ல் பா.ம.கவை சேர்ந்த மு.இராமதாசும், 2014-ல் என்.ஆர்.காங்கிரஸை சேர்ந்த ராதாகிருஷ்ணனும் எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

2004 முதல் 2009 வரை எம்.பியாக இருந்த பா.ம.க இராமதாஸ் காலத்தில் பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரி என தமிழில் மாற்றப்பட்டது. 700 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகள் வலுப்படுத்தப்பட்டது. 2014-ல் எம்.பியான ராதாகிருஷ்ணன் காலத்தில் தொகுதி மேம்பாட்டு நிதி உள்ளாட்சிக்கு முழுவீச்சில் ஒதுக்கி செயல்படுத்தப்பட்டது. தேசிய நெடுஞ்சாலை தொடரமைப்பு செயல்படுத்தப்பட்டது.

கடந்த 2014 தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் 2,55,826 ஓட்டுகள் (34.57 சதவீதம்) பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் 1,94,972, (26.35 சதவீதம்), அ.தி.மு.க 1,32,657 (17.93 சதவீதம்), தி.மு.க. 60,580,(8.19 சதவீதம்), பா.ம.க 22,754 (3.07 சதவீதம்), இந்திய கம்யூனிஸ்ட் 12,709 (1.72 சதவீதம்) ஓட்டுகள் பெற்றன.

இந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க, பா.ம.க, பா.ஜ.க, தே.மு.தி.க ஒரு அணியாகவும், காங்கிரஸ், தி.மு.க, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், முஸ்லீம் அமைப்புகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.

2014 தேர்தல்படி இவ்விரு அணிகளில் இடம் பெற்றுள்ள கட்சிகள் வாங்கிய ஓட்டு சதவீதத்தின்படி கணக்கிட்டால் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணிக்கு 55.57 சதவீதமும், காங்கிரஸ் கூட்டணிக்கு 36.26%ஆக ஓட்டு சதீவீதமும் உள்ளது. ஆனாலும் 2014 சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ்க்கு ஓட்டு சதவீதம் குறைந்தது. மேலும் 2014-ம் ஆண்டு தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. இப்போது காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருக்கிறது. எனவே காங்கிரஸ் கூட்டணியின் பலம் அதிகரித்துள்ளது.

நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரஸ் கூட்டணி சார்பில் தற்போதைய சபாநாயகர் வைத்திலிங்கம் போட்டியிட உள்ளார். அதேசமயம் வைத்திலிங்கத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலான வேட்பாளரை தேர்வு செய்வதில் என்.ஆர்.காங்கிரஸ் குழப்பத்திலேயே உள்ளது.

புதுச்சேரி மாநிலத்துக்கு தனி மாநில அந்தஸ்து, மத்திய நிதிக்குழுவில் புதுச்சேரியை சேர்த்தல், 8420 கோடி கடனை தள்ளுபடி செய்தல், புதுச்சேரி துறைமுக திட்டத்தை முழுமைபடுத்துதல், புதுச்சேரி – சென்னை தொடர்வண்டி திட்டத்தை செயல்படுத்துதல் என பல முக்கிய திட்டங்கள் மக்களவை வேட்பாளர் முன் நிற்கின்றன. இவைகளில் கூடுதல் அக்கறையும், முனைப்பும் காட்டுபவராக தேர்வு செய்யப்படுவது புதுச்சேரிக்கு முக்கியம்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT