
உத்திரபிரதேசத்தில் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் அண்ணா சிலை அருகே உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்ட காங்கிரசார் கலந்துக்கொண்டனர்.
போராட்டத்தின்போது செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி, "உத்திரபிரதேச மாநிலத்தில் தலித் சமுதாய பெண்கள் வல்லுறவு சம்பவம் தொடர் கதையாகி வருகிறது. உத்திரபிரதேச மாநிலம் வல்லுறவு மாநிலமாக மாறிவருகிறது.
உத்திரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மத்தியில் உள்ள மோடி அரசு தலித் விரோத அரசாக செயல்படுகிறது. குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சி.பி.ஐ விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருகிறார். அவருக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கிடையாது. நரேந்திரமோடி அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சர்வாதிகார போக்காக உள்ளது.
நாம் இன்னொரு சுதந்திர போராட்டத்திற்கு தள்ளப்படுகின்றோம். பா.ஜ.க ஆட்சியில் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை, மகளிருக்கு பாதுகாப்பு இல்லை, மீனவர்களுக்கு பாதுகாப்பு இல்லை. நரேந்திரமோடி அரசு மாநிலங்களுக்கு உண்டான அதிகாரத்தை எடுத்துக்கொண்டது. நரேந்திரமோடி அரசு ஹிட்லர் ஆட்சி. மக்கள் இந்தியாவில் ஜனநாயகம் இல்லாமல் வாழ முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளார்கள். ஜனநாயகம் மலரும் வரை நமது போராட்டம் தொடர வேண்டும்." என்றார்.
தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து இறந்த பெண்ணின் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செய்த பின்பு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதம் முடித்துவைக்கப்பட்டது.