ADVERTISEMENT

"அந்தப் பள்ளியை அரசுடைமையாக்க வேண்டும்... அப்போதுதான் மற்ற தனியார் பள்ளிகளுக்கு.." - சபரிமாலா கொதிப்பு!

02:49 PM Nov 17, 2021 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கோவையில் சில நாட்களுக்கு முன்பு பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரின் பாலியல் தொல்லை காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக பலரும் கண்டனம் தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்குச் சென்று ஆறுதல் தெரிவித்துவிட்டு வந்த ஆசிரியர் சபரிமாலா அவர்களிடம் இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை நாம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

கோவையில் பள்ளி மாணவி ஒருவர் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சென்னையில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் ஆசிரியர் ஒருவர் தவறாக நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் கைது செய்யப்பட்டனர். இதோடு இந்த குற்ற சம்பவங்கள் நின்றுவிடும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது கோவையிலும் இதே மாதிரியான கொடூரம் அரங்கேற்றப்பட்டு அது தற்கொலை வரை சென்றுள்ளது. நீங்கள் உயிரிழந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று அவர்களின் பெற்றோருடன் பேசியுள்ளீர்கள். நடந்த சம்பவம் உங்களுக்கு முழுவதும் தெரியும் என்ற நிலையில் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

சென்னை பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றபோது அதனை தமிழக அரசு கடுமையாகக் கண்டித்தது. அமைச்சர்கள் கடும் எதிர்வினையாற்றினார்கள். இந்த நடவடிக்கையை அப்போதே நான் வரவேற்றேன். ஏனெனில் இதற்கு முந்தைய அரசு இதனை செய்ய தயாராக இல்லை. எனவே புதிய அரசின் அந்த விரைவான நடவடிக்கைகளை அனைவரும் பாராட்டினார்கள். முந்தைய ஆண்டுகளில் ஒரு மாணவி இறந்தால் கூட யாரும் அங்கே போக மாட்டார்கள்; அதைப் பற்றி பேச மாட்டார்கள். ஆனால் தற்போது அந்த நிலை மாறியுள்ளது. சென்னை பள்ளியில் நடைபெற்ற அந்த சம்பவத்தில் ஏதேனும் ஒரு முக்கிய முடிவு எடுத்திருந்தார்கள் என்றால் இன்றைக்கு இந்த சம்பவம் நடைபெற்றதை தவிர்த்திருக்கலாம். வழக்கு போடுகிறோம், நிவாரணம் கொடுக்கிறோம் என்று போனால் பள்ளிகளில் பெண்களுக்குப் பாதுகாப்பு ஏற்படுவதை உறுதி செய்வதற்குள் இன்னும் 10 பேர் இறந்துபோய்விடுவார்கள்.

பெண்களுக்கான பாதுகாப்பை அனைத்து பள்ளிகளுக்கும் கொண்டு சேர்ப்பதை நாம் முறையாகச் செய்யவில்லை. சென்னையில் நடைபெற்ற அந்தக் குற்றத்துக்காக நாம் என்ன செய்தோம் என்ற கேள்வி எழுகிறது. அந்தப் பள்ளியை சீல் வைத்தீர்களா அல்லது பள்ளியைக் கைப்பற்றினீர்களா என்ற வினாவுக்கு நம்மிடம் பதில் இருக்கிறா என்றால், இல்லை. அதிரடியான நடவடிக்கை நிச்சயம் அந்த விவகாரத்தில் எடுத்திருந்தால் இன்றைக்கு நாம் இந்த உயிரை இழந்திருக்க வேண்டாம். பாதுகாப்பு நடவடிக்கைகள் பள்ளிகளுக்குப் போய் சேராதவரை இதேபோன்ற மரணங்கள் தொடரும் என்பதை நாம் வருத்தத்தோடு ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்பதே நிதர்சனமான உண்மை.

பணியிடங்களில் பணியாற்றும் பெண்கள்முதல் பள்ளிகளுக்குச் செல்லும் பெண்கள்வரை எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அறிவுரையை நாம் தொடர்ந்து சொல்லிக்கொடுப்பதைப் போல ஆண்களுக்கு அதனை முன்னெடுக்க வேண்டும், நல்ல முறையில் கவுன்சிலிங் தர வேண்டும் என்று நினைக்கிறீர்களா?

நிச்சயமாக கொடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் கூட மாணவியின் வாட்ஸ் அப் சாட்ஸ், ஆடியோ வெளியே வந்துள்ளது. சிலர் அதனைக் குறை சொல்கிறார்கள். அதுஒருபுறம் இருக்கட்டும். பிள்ளை கிணற்றில் விழுந்துவிட்டது, அதை திறந்து வைத்தது யார் குற்றம். குழந்தையைக் குறை சொல்ல முடியாது, ஏனென்றால் அது குழந்தை. அதுதான் கோவை மாணவி விவகாரத்திலும் நடந்தது. அந்த மாணவியை வழிநடத்த வேண்டிய ஆசிரியர் குற்றம் செய்துள்ளார். மாணவியிடம் நாம் குற்றத்தைக் கொண்டு செல்ல என்ன இருக்கிறது. அந்தக் குழந்தையின் வயது, அனுபவம் என்ன என்பதை நாம் பார்க்க வேண்டும். நீங்கள் பணியிடங்களிலும் இதே மாதிரியான சம்பவங்கள் நடைபெறுகிறதே என்று கேட்டீர்கள். நடக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அது தவிர்க்கப்பட வேண்டும் என்பதே நம் அனைவரின் நோக்கமாக இருக்கிறது.

ஆனால் இந்த மாதிரியான சம்பவங்கள் பள்ளிகளில் நடக்கவே கூடாது. பள்ளிகள் பாடம் சொல்லிக்கொடுக்கக் கூடிய கோயில்கள், இந்த மாதிரியான களைகளை அங்கே அனுமதிக்கக் கூடாது. பெண்களுக்கு முதலில் பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்த வேண்டும். பெண் ஆசிரியர்களைப் பணியில் வைத்திருக்க வேண்டும். இப்போது நாங்கள் நம்பர் தருகிறோம், நீங்கள் அதில் பேசி உங்கள் பிரச்சனைகளைத் தெரிவியுங்கள் என்று கூறுவதை யார் நம்புவார்கள். ஏற்கனவே கொடுத்த நம்பர்களின் கதி என்னவென்று நமக்குத் தெரியும். பாதுகாப்பைத்தான் நாம் கொடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அவர்களைக் குறை சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. மாற்று வழியாக அவர்களுக்கான பாதுகாப்பை அனைத்து பள்ளிகளுக்கும் அரசாங்கம் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்.

உயிரிழந்த அந்த மாணவி, தலைமை ஆசிரியரிடம் இதுதொடர்பாக புகார் அளித்துள்ளார். ஆனால் இந்த விஷயத்தில் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பேருந்தில் முகம் தெரியாதவர் இடித்தது போல் நினைத்துக்கொள் என்று தலைமை ஆசிரியர் அந்த மாணவியிடம் கூறியுள்ளார். இந்த விஷயத்தில் அரசு என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

அரசு உடனடியாக அந்தப் பள்ளியை அரசுடமையாக்க வேண்டும். இந்த மாதிரியான நடவடிக்கைகளை அரசு எடுத்தால்தான் அடுத்தவர்களுக்குப் பயம் வரும். இந்த மாதிரி ஒரு நான்கு பள்ளியை செய்தால்தான் தனியார் பள்ளிகளுக்குத் தாங்கள் கண்காணிக்கப்படுகிறோம் என்ற உணர்வு வரும். புகாருக்கு உள்ளாகும் நபர்களை உரிய முறையில் தண்டிப்பார்கள். எனவே அரசு இதில் பாரபட்சம் காட்டாமல் நடவடிக்கை எடுத்தால்தான் இனி இந்தமாதிரியான விஷயத்தில் யாரும் உயிரிழக்க மாட்டர்கள். எனவே துரித நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT