ADVERTISEMENT

என்கவுண்டர் பின்னணி...மணிகண்டன் குறிவைத்த அந்த வி.ஐ.பி...அதிர்ச்சி தகவல்!

11:15 AM Oct 01, 2019 | Anonymous (not verified)

சென்னையில் ஜூன் 15-ந் தேதி ரவுடி வல்லரசுவை என்கவுன்ட்டரில் போலீஸார் சுட்டுக் கொன்றனர். அது நடந்து சரியாக 101-வது நாளில் மீண்டும் துப்பாக்கிச் சத்தம் கேட்டிருக்கிறது. விழுப்புரத்தில் வீழ்த்த முடியாத தாதாவாக இருந்த மணிகண்டனுக்குதான் தோட்டா மூலம் முடிவுரை எழுதியிருக்கிறார்கள் தனிப்படை போலீசார்.

ADVERTISEMENT


யார் இந்த ரவுடி?

விழுப்புரம் மாவட்டம் குயிலாபாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். கட்டப் பஞ்சாயத்து, கஞ்சா விற்பனை, பெண்களை வைத்து பாலியல் தொழில், கூலிக்கு கொலை என சகலத்திலும் கொடிகட்டிப் பறந்தவர். இவருக்கு போட்டியாக பூபாலன் என்பவரும் களத்தில் இறங்க, 2 தரப்பிலும் பல தலைகள் விழுந்தன. விழுப்புரம் எஸ்.பி.யாக இருந்த நல்லசிவம், பெரியய்யா, அமல்ராஜ் ஆகியோர் இருதரப்பையும் எச்சரித்தாலும் சட்டவிரோத செயல்களும் தொடர்ந்தன. இதனால், மணிகண்டன் மீது ஆரோவில், மயிலம், கோட்டக்குப்பம், செஞ்சி, திருவண்ணாமலை என பல்வேறு காவல்நிலையங்களில் 8 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் பதிவாகின.

ADVERTISEMENT



2010-ஆம் ஆண்டு மணிகண்டனின் தம்பி ஆறுமுகத்தை பூபாலன் தரப்பு கூலிப்படையை ஏவி கொலைசெய்தது. இதன் பிறகும் மணிகண்டனின் குற்றச் செயல்கள் அதிகரித்தன. இதனால், 'என்கவுன்ட்டர்' லிஸ்ட்டில் அப்போதே மணிகண்டனின் பெயர் சேர்க்கப்பட்டது. உயிருக்குப் பயந்து திருந்தி வாழப்போவதாக 2015-ல் அப்போதைய எஸ்.பி. அமல்ராஜை நேரில் சந்தித்து மனு கொடுத்தார் மணிகண்டன். "நான் எந்த சட்டவிரோத செயலிலும் ஈடுபடவில்லை. ஆனால், என் பெயரைச் சொல்லி சிலர் கட்டப்பஞ்சாயத்து, மாமூல் வசூல், கஞ்சா விற்பனையில் ஈடுபடுகின்றனர். பூபாலன் குரூப் ஆரோவில்லில் பெண்களை வைத்து தொழில் செய்கிறது. அவர்கள் என் பெயரை பயன்படுத்துவதால், போலீஸார் என்மீது வழக்கு போட்டுள்ளனர். ஆகவே எஸ்.பி. ஐயாவை பார்த்து மனம்திருந்தி வாழப்போவதாக மனு கொடுத்துள்ளேன்' என மீடியாக்களிடமும் தெரிவித்தார் மணிகண்டன்.

மீண்டும் சட்டவிரோத செயல்?

"பாடின வாயும், ஆடின காலும் சும்மா இருக்காது' என்பதைப்போல், கொஞ்சநாள் ஒதுங்கியே இருந்த தாதா மணிகண்டன், மீண்டும் கோதாவில் இறங்கினார். புதுச்சேரியில் கடந்த ஆண்டு 2018-ல் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கொலை, ரியல் எஸ்டேட் பிரமுகர் ஒருவர் கொலையிலும் இவருக்கு தொடர்பு இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனடிப்படையில் விழுப்புரம் போலீஸார் தேடிவந்த நிலையில், ஒரு மாதத்திற்கு முன்புதான் சென்னை வந்து மணிகண்டன் தனது மனைவி பியூலா மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார். இதையறிந்து 24-ந் தேதி விழுப்புரத்தில் இருந்துவந்த தனிப்படை போலீஸார், மணிகண்டன் தங்கியிருந்த நான்கு மாடி குடியிருப்பை சுற்றி வளைத்துள்ளனர். கீழ்த்தள வீட்டிலிருந்த மணிகண்டன் போலீசாரைக் கண்டதும், தான் வைத்திருந்த பட்டாக்கத்தியை வீச, அது உதவி ஆய்வாளர் பிரபுவின் தலையில் பாய்ந்திருக்கிறது. தற்காப்பு நடவடிக்கையாக உதவி ஆய்வாளர் பிரகாஷ் மணிகண்டனை நோக்கி தனது கைத்துப்பாக்கியால் சுட்டிருக்கிறார். மூன்றுமுறை துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டிருக்கிறது. அந்த இடத்திலேயே மணிகண்டனின் உயிர் பிரிந்திருக்கிறது.


இந்த என்கவுன்ட்டர் சம்பவம் குறித்து உளவுத்துறை தரப்பில் விசாரித்தபோது, “என்கவுன்ட்டர் நடந்தது மாலை 6:15 மணிக்கு. தகவல் 7:00 மணிக்கு மேல்தான் வெளியில் கசிந்தது. விழுப்புரம் எஸ்.பி. ஜெயக்குமார் சென்னையில் இரவு 10:00 மணிக்குமேல் பேட்டி தருகிறார் என்றால், சம்பவத்திற்கு முன்பே அவர் சென்னையில் இருந்திருக்கவேண்டும். அதே போல், மேற்கு ஜே.சி. விஜயகுமாரி, அம்பத்தூர் டி.சி. ஈஸ் வரன், ஏ.டி.சி. தினகரன், சட்டம்- ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. ஜெயந்த்முரளி என முக்கியமான ஐ.பி.எஸ். அதிகாரிகள் அனைவரும் இந்த விவகாரத்தில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள். ஆளுங்கட்சியைச் சேர்ந்த இளம் வி.ஐ.பி. ஒருவரை காவுவாங்க மணிகண்டன் சுற்றி வந்ததை அறிந்துதான், இந்த என்கவுன்ட்டர் திட்டமிட்டு அரங்கேறியிருக்கிறது''’என்று பகீர் கிளப்புகிறார்கள். அடுத்ததாக, தென் மாவட்டத்தில் நிச்சயம் என்கவுன்ட்டர் சத்தம்கேட்கும் என்ற தகவலும் வருகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT