rowdy incident eight person arrested police hosur

Advertisment

ஓசூர் அருகே, அண்ணனை கொலை செய்த ரவுடியை பழிக்குப்பழியாக, அதே பாணியில் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த தம்பி உள்ளிட்ட 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அந்திவாடியைச் சேர்ந்தவர் முரளி (வயது 20). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி நந்தினி (வயது 20). கடந்த ஓராண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். அக். 9- ஆம் தேதி இரவு வீட்டில் இருந்த முரளியை இருவர் வெளியே அழைத்துச் சென்றனர்.

Advertisment

இந்நிலையில், பெத்தகொள்ளு என்ற இடத்தில் தனியாருக்குச் சொந்தமான லேஅவுட் பகுதியில் வைத்து முரளியை அவர்கள் அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.இதுகுறித்து ஓசூர் ஹட்கோ காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

ஓசூர் அந்திவாடியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரும், வட்டித் தொழில் செய்து வந்தவருமான உதயகுமார் (வயது 32) என்பவர் கடந்த பிப்ரவரி 28- ஆம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முரளிதான், முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு இருந்தார். அவர் கைதாகி சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், சமீபத்தில் பிணையில் வெளியே வந்தார்.

அவரை நோட்டமிட்டு வந்த கும்பல், உதயகுமார் கொலைக்கு பழி வாங்கும் நோக்கத்தில் முரளியைத் தீர்த்துக் கட்டியிருப்பது தெரிய வந்துள்ளது. உதயகுமாரின் தம்பி சரவணன்தான் இந்த கொலைக்கு மூளையாக செயல்பட்டு வந்துள்ளார்.

இதையடுத்து, அந்திவாடியைச் சேர்ந்த சரவணன் (வயது 31), ஒன்னுப்பள்ளி மாதேஷ் (வயது 28), கொரட்டகிரி ரகு (வயது 21), தொட்டபிளி முத்திரை நவீன் (வயது 21), திம்மசந்திரன் மதன்குமார் (வயது 25), குருப்பட்டி நவீன்குமார் (வயது 20), மிடிகிரிப்பள்ளி சுனில் (வயது 29), பரத் (வயது 27) ஆகிய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உதயகுமாரையும் மது குடிக்கலாம் என்று அழைத்துச் சென்றுதான் முரளி தலைமையிலான கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்திருந்தது. அதே பாணியில் உதயகுமாரின் தம்பி சரவணன் தலைமையிலான கும்பலும் முரளியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்துள்ளனர்.

கைதான கும்பலிடம் இருந்து 4 வீச்சரிவாள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். கைதான எட்டு பேரும், நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.