ADVERTISEMENT

பெண் எஸ்.பி.யையே தெறிக்கவிட்ட ஜோடி!!

04:04 PM Mar 20, 2020 | rajavel

ADVERTISEMENT

சேலம் அருகே, குடிபோதையின் உச்சத்தில் இருந்த தந்தை, பிளஸ்-1 படித்து வரும் தன் மகளையே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றபோது, தன் மானத்தைக் காத்துக்கொள்ள தந்தையையே கல்லால் தாக்கி கொன்ற மகள் என ஒரே நாளில் நாயகி அவதாரம் எடுத்தார் அந்தச்சிறுமி. ஆனால், அடுத்த 24 மணி நேரத்தில், கொலைச் சம்பவத்தில் திடீரென்று ஒரு டிவிஸ்ட் வர, இந்த வழக்கில் சிறுமியின் தாயாரும், அவருடைய 'ஆண் நண்பரும்' இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

ADVERTISEMENT


இந்த வழக்கில் கொஞ்சம் அசந்து இருந்தாலும்கூட இந்நேரம் சேலம் மாவட்ட எஸ்.பி., தீபா கணிகர் முதல் ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளர் வரை பலரின் தொப்பிகளும் தெறித்துப் போயிருக்கும் என்பதுதான், இச்சம்பவத்தில் உள்ள இன்னொரு டிவிஸ்ட்.


சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள தென்பொதியான் காட்டு வளவைச் சேர்ந்த படவெட்டி (40), கரும்பு வெட்டும் தொழிலாளி. இவருடைய மனைவி நளா (37). இவர்களுக்கு அமுதா (16), பூங்கொடி (14) என்ற இரு மகள்களும், சேகர் (10) என்ற மகனும் இருக்கிறார்கள். அமுதா, அரசுப்பள்ளியில் பிளஸ்-1 படித்துக் கொண்டிருக்கிறார். (சிறுமிகள், சிறுவர் பெயர்கள் மாற்றப்பட்டு உள்ளன).





படவெட்டிக்கு குடிப்பழக்கம் இருந்ததால், கணவன் மனைவிக்குள் அடிக்கடி உரசல் இருந்து வந்தது. ஒருககட்டத்தில் பொறுமையிழந்த நளா, குழந்தைகளுடன் ஆவடத்தூர் ராஜா கோயில் பகுதியில் உள்ள தன் பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார். இது நடந்தது ஐந்து ஆண்டுக்கு முன்பு. பெற்றோர் வீட்டில் சொந்தமாக வைத்திருக்கும் விசைத்தறிக்கூடத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில்தான் அண்மையில், அவரின் மூத்த மகள் அமுதா பெரிய மனுஷியாகி விட, இனியும் கணவன், மனைவி முறுக்கிக் கொண்டு திரிவது நல்லதல்ல என்று கருதிய நளாவின் பெற்றோர், படவெட்டியைத் தங்கள் மகளுடன் சேர்ந்து வாழுமாறு சமாதானம் செய்து அழைத்து வந்தனர்.


ஒரு மாதம் அமைதியாக சென்ற நிலையில், கடந்த பிப். 26ம் தேதி இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த படவெட்டி, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டிருக்கிறார். மறுநாள் (பிப். 27) காலையில் கயிற்றுக்கட்டிலில் படவெட்டி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்தார். அருகில், ரத்தம் தோய்ந்த நிலையில் திருவாட்டுக்கல் (கேழ்வரகு அரைக்கும் ஆட்டுக்கல்) கிடந்தது. காலை 7 மணிக்கெல்லாம் ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளர் ரவி உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்றுவிட்டனர். மாவட்ட எஸ்.பி., தீபா கணிகரும் அங்கே வந்து சேர்ந்தார்.


சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 20 அடி தூரத்தில் ஒரு விவசாய குடும்பமும், 50 அடி தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் நளாவின் வயதான பெற்றோரும் வசிக்கின்றனர். இரவு 11 மணியளவில் இச்சம்பவம் நடந்திருக்கிறது. நள்ளிரவை நெருங்கிய நேரம். வீடுகள் நெருக்கமாக இல்லாத பகுதி. அதனால் கொலை நடந்தது குறித்து மறுநாள் காலையில்தான் எல்லோருக்கும் தெரிய வந்திருக்கிறது.


என்ன நடந்தது...? என காவல்துறையினர் கேட்க, சிறுமி அமுதா பேசினாள்.


''ராத்திரி எங்கப்பா குடிபோதையில் இருந்தாரு. அம்மாவோட சண்டை போட்டாரு. அப்புறம் அவங்கள வீட்டுக்குள் தள்ளி கதவை வெளிப்பக்கமாக தாழ்ப்பாள் போட்டுட்டாரு. நான் மட்டும்தான் வீட்டு தாழ்வாரத்தில் பாய் போட்டு படுத்திருந்தேன். எங்கப்பா என்மேல பாய்ஞ்சு தப்பா நடக்க பார்த்தாரு. நான் அவரை கட்டிலில் தள்ளி விட்டேன். ஆனாலும், மறுபடியும் என்கிட்ட தப்பாக நடக்க முயற்சி பண்ணினதால கீழே கிடந்த ஆரியம் அரைக்கிற ஆட்டுக்கல்லை எடுத்து, அவர் மேல போட்டுக் கொன்னுட்டேன்,'' என்று சொல்லி இருக்கிறார்.


சம்பவ இடத்தில் கூடியிருந்த சிலரும்கூட அமுதாவின் ஸ்டேட்மெண்டை சொல்லிவைத்தாற்போல ஒப்பித்தனர். சிறுமி சொன்னதைக் கேட்டு, எஸ்.பி.யே சிறுமி மீது இரக்கப்பட்டு 'உச்' கொட்டினார் என்கிறார்கள் விசாரணையின்போது உடனிருந்த காவலர்கள். பிப். 28ம் தேதி, ஊடகங்களிலும் 'தவறாக நடக்க முயன்ற தந்தையை கொன்ற சிறுமி' என்றே செய்திகள் வெளியாகின.


ஆனால், ஏதோ ஒன்று இச்சம்பவத்தில் தர்க்க ரீதியாக இடறிக்கொண்டே இருப்பதாகக் கருதிய ஆய்வாளர் ரவி, படவெட்டியின் தம்பி வெள்ளையனிடம் விசாரித்தார். அவரோ, ''எங்கண்ணன் குடிப்பாரே ஒழிய, மகளிடம் தப்பாக நடக்கும் அளவுக்கு காமக்கொடூரன் இல்லை,'' என்று சொல்லி இருக்கிறார். அதன்பிறகும் அவர், படவெட்டியின் சொந்த ஊரில் சென்று விசாரித்தபோதுதான், நளாவின் நடத்தை தொடர்பாக கணவன், மனைவிக்குள் பிரச்னை இருந்து வந்ததாக ஒரு 'க்ளூ' கிடைக்கிறது.


அந்தக் கோணத்தில், மீண்டும் ஆரம்பத்தில் இருந்து விசாரணையைத் தொடங்கினார் ஆய்வாளர் ரவி. நளாவின் பெரியம்மா மகள் சரஸ்வதி. இவருடைய மகளான சற்குணவதியின் கணவர் ரங்கசாமிக்கும் (25), நளாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்திருக்கிறது. நளாவின் வீட்டில் இருந்து 400 மீட்டர் தொலைவில் ரங்கசாமியின் வீடு இருக்கிறது. அவரும் விசைத்தறி பட்டறை வைத்திருக்கிறார். நளாவுக்கு, ரங்கசாமி மருமகன் உறவுமுறை ஆகிறது. தன்னுடைய விசைத்தறிக்குத் தேவையான பாவு நூலை வாங்கும்போது, நளாவின் விசைத்தறிக்கும் பாவு நூல் வாங்கி வந்து விடுவார். இதனால் நளாவுக்கும், ரங்கசாமிக்கும் 'நெருக்கமான' தொடர்பு ஏற்பட்டுள்ளது. மாமியார், மருமகன் என்பதால் மற்றவர்களுக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. படவெட்டியுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு வந்து விட்ட நளாவும், தன்னைவிட 12 வயது குறைந்த ரங்கசாமியை அடிக்கடி 'ஆசைக்கு' பயன்படுத்திக் கொண்டார்.




இதை அரசல் புரசலாக தெரிந்து கொண்டதால்தான் நளாவுடன், அடிக்கடி படவெட்டி பிரச்னை செய்து வந்திருக்கிறார். இந்நிலையில், மீண்டும் சேர்ந்து வாழலாம் என்ற நம்பிக்கையுடன் படவெட்டியும் மாமியார் வீட்டுக்கே வந்துவிட்ட நிலையில், இனிமேல் ரங்கசாமி இந்த வீட்டுப்பக்கம் வரக்கூடாது என்று கண்டிஷன் போட்டுள்ளார். நளாவின் பெற்றோரும் ரங்கசாமியை எச்சரித்துள்ளனர்.


இதையடுத்து நளா, 'இனியும் படவெட்டி உயிருடன் இருந்தால் நாம் சந்தோஷமாக வாழ முடியாது' என்ற முடிவுக்கு வந்திருக்கிறார். சம்பவம் நடப்பதற்கு இரண்டு நாள் முன்னதாக ரங்கசாமியிடம், ''அவன் கதைய முடிச்சிடு ரங்கா... இல்லேனா அவன் குடிச்சிட்டு வந்து என்னை அடிச்சே கொன்னுடுவான்,'' என்று அழுது புலம்பியுள்ளார். அதன்பிறகுதான், பிப். 26ம் தேதி இரவு, வீட்டு தாழ்வாரத்தில் கயிற்றுக்கட்டிலில் குடிபோதையில் மட்டையாகிக் கிடந்த படவெட்டி மீது திருவாட்டுக்கல்லைத் தூக்கி போட்டிருக்கிறார் ரங்கசாமி. அதன்பிறகும் நம்பிக்கை இல்லாத நளா, அவர் உயிர் பிழைத்து விடக்கூடாது என்பதற்காக, அருகில் அடுப்பு மூட்டுவதற்காக வைக்கப்பட்டிருந்த கருங்கல்லை எடுத்து இரண்டு முறை போட்டிருக்கிறார்.


காவல்துறையினர், ரங்கசாமியிடம் அவர்கள் 'பாணியில்' விசாரித்தபோதுதான் இந்த உண்மைகளை எல்லாம் ஒன்று விடாமல் கக்கி இருக்கிறார். முதல் நாள் விசாரணை வரை காவல்துறையினருடன் ரங்கசாமியும் அப்பாவி போல கூடவே இருந்திருக்கிறார்.


பிறகு, சிறுமி அமுதா எதற்காக இந்தக் கொலையைச் செய்ததாக சொல்ல வேண்டும் என்பதையும் விசாரித்திருக்கிறது காவல்துறை.


''சிறார் குற்றவாளி என்றால் பெரிய அளவில் தண்டனை கிடைக்காது என்பதாலும், அதுவும் சிறுமி தற்காப்புக்காக கொலை செய்தாலும்கூட தண்டனையில் இருந்து தப்பி விடலாம் என்பதாலும் அமுதாவிடம் சொல்லி பழியை ஏத்துக்க வெச்சோம். எல்லாமே நல்லாத்தான் போய்க்கிட்டு இருந்தது. ஆனாலும் மாட்டிக்கிட்டோம்,'' என அலட்டிக்காமல் கூறியிருக்கிறார் ரங்கசாமி.


இதையடுத்து பிப். 29ம் தேதியன்று, ரங்கசாமி, நளா ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களை மேட்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிமன்ற உத்தரவின்பேரில் ரங்கசாமி சேலம் மத்திய சிறையிலும், நளா, பெண்கள் கிளைச்சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


கொலை நடந்த இடத்தை நாமும் பார்வையிட்டோம். படவெட்டி மீது திருவாட்டுக்கல்லை பலமாக போட்டதில், அவர் படுத்திருந்த கயிற்றுக்கட்டிலின் குத்துக்கால்களும் முறிந்து இருந்தன. அவற்றை அப்புறப்படுத்தி, தரையில் படிந்திருந்த ரத்தக் கறைகளை தண்ணீரால் கழுவிவிட்டுக் கொண்டிருந்தாள் சிறுமி அமுதா. தந்தை கொலை செய்யப்பட்டது குறித்த எந்த வித கவலையோ, பதற்றமோ இன்றி பேசினாள்.



''எங்க அம்மாவும், மாமாவும்தான் (ரங்கசாமி) என்னை பழியை ஏத்துக்கச் சொன்னாங்க. மைனர் பொண்ணு கொலை செஞ்சதா சொன்னா கேஸூல இருந்து ஈஸியா தப்பிச்சிக்கலாம்னு ஐடியா கொடுத்தாரு. அதுவுமில்லாம நானும் எத்தனையோ சினிமால இந்த மாதிரிலாம் பார்த்திருக்கிறேன். அதனால மாமா சொல்லித் தந்ததை அப்படியே போலீசுக்கிட்டயும் சொல்லிட்டேன்,'' என்றாள் அமுதா. தான் என்ன மாதிரியான குற்றம் செய்திருக்கிறோம் என்ற பிரக்ஞையே இல்லாமல் பேசினாள்.


நளாவின் தாயார் மினிச்சி, தந்தை செங்கோட்டையன் ஆகியோரிடமும் பேசினோம். ''அய்யோ அதை ஏன் கேக்குறீங்க கடவுளே... இந்த ரங்கசாமி பயல இனிமே வீட்டுப் பக்கம் வராதேனு பஞ்சாயத்து பேசியாச்சுங்க. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டானுங்களே... இனிமே இந்த மூணு புள்ளைங்களையும் வயசான காலத்துல எப்படி கரை சேர்த்துவோம்னு தெரியலையே கடவுளே....,'' என கதறி அழுதனர்.


கொலையை நிகழ்த்தும்போது படவெட்டியின் உடலில் இருந்து தெறித்த ரத்தம், ரங்கசாமியின் வேட்டியின் மீது விழுந்திருக்கிறது. ஒருவேளை, மோப்ப நாய் கொண்டு காவல்துறையினர் கண்டுபிடித்து விடுவார்களோ என பயந்த ரங்கசாமி, சம்பவத்தன்று இரவே தனது வேட்டியை கழற்றி அதன் மீது மிளகாய்த்தூளை கொட்டி, ஒளித்து வைத்திருக்கிறார் என்ற தகவலும் நமக்குக் கிடைத்தது.


ஜலகண்டாபுரம் காவல் ஆய்வாளர் ரவியைச் சந்தித்தோம்.


''படவெட்டியுடன் சேர்ந்து வாழ நளாவுக்கு விருப்பம் இல்லை. தன்னை விட 12 வருஷம் வயதில் சின்னவனாக இருந்தாலும் ரங்கசாமியுடன் கள்ளத்தொடர்பை வைத்துக்கொண்டே காலத்தை ஓட்டிவிடலாம் என நினைத்திருக்கிறார். அதற்கு இடைஞ்சலாக வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் படவெட்டியை தீர்த்துக்கட்டி விட்டனர். மோப்ப நாய் கொண்டு போயிருந்தால், முதல் நாளே இந்த வழக்கில் ரங்கசாமி சிக்கியிருப்பான். ஆனால், நளாவின் மகள், நான்தான் கொலை செய்தேன் என்று எங்கள் எல்லோரையும் ஈஸியாக நம்ப வைத்துவிட்டார்.


படவெட்டியின் உடல் கிடந்த கட்டிலின் குத்துக்கால்கள் உடைந்து இருந்தன. கொலைக்குப் பயன்படுத்தபட்ட திருவாட்டுக்கல்லின் எடை 30 கிலோவுக்கு மேல் இருக்கும். அந்தக் கல்லை தலைக்கு மேல் உயரமாக தூக்கிப் போட்டால்தான் கட்டிலின் குத்துக்கால்களும் உடையும் என ஏட்டு ஒருவர் சொன்னார். அதனால் அந்தக் கல்லை தூக்கிக் காட்டும்படி சிறுமியிடம் கூறினோம். அவளும் கல்லை இடுப்பு உயரம் வரை தூக்கினாளே தவிர தலைக்கு மேல் தூக்க முடியவில்லை. இந்த இடத்தில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது. உள்ளூக்காரர் ஒருவரிடம் விசாரித்தபோது, ரங்கசாமிக்கும் நளாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்த தகவல் கிடைத்தது. அதன்பிறகுதான் இந்த கொலையில் உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடிந்தது,'' என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT