ADVERTISEMENT

"பசியோட சோத்துல கை வைக்கும் போது பறிச்சுக்கிட்டு போனாங்க...." விளையாட்டு போட்டிகளுக்கு மாணவர்களை தயார் செய்யும் உடற்கல்வி ஆசிரியர்

01:24 PM Sep 12, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ள பாப்பான்விடுதி என்னும் கிராமத்தில் கூலி வேலை செய்யும் குடும்பத்தில் பிறந்த துரைராசு பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் போதே தேசிய விளையாட்டுப் போட்டிகளில் சாதித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் சாதனையாளனுக்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. வேலையில்லாமல் வீட்டில் சாப்பிடச் செல்லும் போது அக்கம்பக்கம் உள்ளவர்கள் சொன்ன வார்த்தைகள் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தியது போல் உணர்ந்தார்.

‘தேசிய போட்டியில தங்க மெடல் வாங்கிட்டு இப்ப தண்டச்சோறு திங்கிறான் பாரு...’ என்ற அந்த வார்த்தைகளை கேட்ட பிறகு ஒரு நாளும் தாமதிக்காமல் கையில் இருந்த காசோடு திருப்பூருக்கு சென்று ஒரு பனியன் கம்பெனியில் அயனிங் வேலை செய்த போது கம்பெனி முதலாளி, துரைராசு கதையை கேட்டு..‘நீ உடற்கல்வி ஆசிரியருக்கு படி’ என்று கூற என்னிடம் பணமில்லையே என்ற துரைராசிடன் ரூ.5 ஆயிரம் கொடுத்து கல்லூரியில் சேர்ந்து படி விடுமுறை நாளில் பனியன் அயன் பண்ணு, சம்பளம் வாங்கிக்க என்று ஊக்கமும், உற்சாகமும் கொடுக்க கல்லூரியில் சேர்ந்து பிபிஎட் படித்துவந்தார். அப்பொது ஒரு மாதம் விடுதிக்கான கட்டணம் கட்டவில்லை என்பதால் 150 பேருக்கு மத்தியில் சாப்பாட்டு தட்டில் கை வைக்கும் போது பணம் கட்ட வக்கில்லை, சாப்பாடு ஒரு கேடா என்ற அந்த வார்த்தைகளைக் கேட்டு பசியும் கண்ணீரோடும் வெளியே வந்த துரைராசு, அடுத்து நடந்ததை அப்படியே விவரிக்கிறார்..

“கடுமையான பசி சாப்பாட்ல கை வக்கும் போது தட்டை எடுத்துட்டு வார்டன் பேசின பேச்சுகள் என்னை ரொம்ப அவமானப்படுத்திவிட்டது. அவமானங்களை தாங்கிக் கொண்டு சாதிக்க வேண்டும். என்னைப் போன்ற அன்றாடம் சாப்பாட்டுக்கே வழியில்லாத குழந்தைகளையும், சாதனையாளர்கள் ஆக்க வேண்டும் என்ற உணர்வும் ஏற்பட்டது. வாராம் தவறாமல் பனியன் அயன்பண்ணி சம்பாதிக்கும் பணத்தையும், நான் ஆலங்குடி பள்ளியில் படிக்கும் போது பாடம் நடத்திய 2 ஆசிரியர்களிடமும் உதவி கேட்டு வாங்கியும் படித்தேன். படிப்பை முடித்ததும் ஒரு தனியார் பள்ளியில் வேலை கிடைத்தது. என் திறமையை பார்த்து மற்றொரு பள்ளியில் அதிக சம்பளத்தில் வேலை கொடுத்தார்கள்.

2005 - ல் புதுக்கோட்டை மாவட்டம் அத்தானி அரசு உயர்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகி அதே ஊரில் குடும்பத்தோடு தங்கி இருந்து கபடி, கோகோ பயிற்சி கொடுத்தேன். அதன் பிறகு எங்கே போனாலும் அத்தானி டீம் வெற்றியோட தான் திரும்பும். அதனால என்னை அத்தானி துரை என்றே அழைக்க தொடங்கிட்டாங்க. மாநில போட்டிகளில் தங்கம், வெள்ளி தலா 3 முறையும், வெண்கலம் 2 முறையும் எங்கள் அணி வாங்கியது.

அடுத்து பெருங்காடு அரசு உயர்நிலைப்பள்ளிக்கு வந்து அங்கிருந்தும் மாணவ, மாணவிகளை உருவாக்கி இருக்கிறேன். என் மாணவிகள் 34 பேர் தேசிய போட்டிகளில் பங்கேற்கிறார்கள். 24 பேர் உடற்கல்வி ஆசிரியர்களாக, பயிற்சியாளர்களாக உள்ளனர். 6 பேர் போலீஸ் வேலைக்கு சென்றுள்ளனர். நிறைய மாணவிகளை கபடியில் விளையாட வைத்து தனியார் கல்லூரிகளில் சேர்த்து உடற்கல்வி படிக்க வைக்கிறேன். அனைத்து செலவுகளையும் அந்தந்த தனியார் கல்லூரிகளே ஏற்பதால் அந்த கல்லூரிகளுக்காக விளையாடுகிறார்கள் எங்கள் மாணவிகள். பல நேரங்களில் எங்கள் அணியோடு எதிர் அணியிலும் எங்கள் மாணவிகளே மோதும் போது மகிழ்ச்சியாக இருக்கும்.

இபோது, ராஜேந்திரபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணியாற்றுகிறேன். ஆனாலும் எனது பழைய மாணவிகள் 20 க்கும் மேற்பட்டோருக்கு தொடர்ந்து பயிற்சி கொடுத்து வருகிறேன். அறந்தாங்கி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்படிக்கும் எங்கள் பழைய மாணவிகளுக்கு அங்கே விளையாட்டு மைதானம் இல்லாததால அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் ரயில் நிலையத்திலும் பயிற்சி கொடுக்கிறேன். எல்லா மாணவிகளும் கிராமங்களில் இருந்து வருகிறார்கள். வறுமையின் பிடியில் உள்ள திறமையான எங்கள் மாணவிகளுக்கு சரியான உணவு, விளையாட்டுக்கான உடை, ஷூ எதுவுமே இல்லை. என் சம்பளத்திலும் பெருந்தன்மையோடு உதவும் சிலரின் உதவியோடும் சமாளிக்கிறேன். இவர்களுக்கு நல்ல சத்தான உணவும் விளையாட்டுக்கான உடைகள், ஷூ கிடைத்துவிட்டால் அத்தனை பேரும் சாதிப்பார்கள் சார். சில வருடங்களுக்கு முன்பு வாங்கிய உடைகளைதான் பயன்படுத்துகிறார்கள். விளையாடும் போது கிழிந்துவிடுமோ என்ற அச்சமே கூட அவர்களை சரியான மனநிலையோடு விளையாடமுடியாமல் தவிக்கிறார்கள்.

அதே போல இவர்களுக்கு பயிற்சி கொடுக்க பாதுகாப்பான நல்ல மைதானமும் தேவைப்படுகிறது. இன்னும் சில நாளில் நடக்க உள்ள வருவாய் மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் எங்கள் மாணவிகள் வெற்றி பெற்று மாநிலப் போட்டிக்கு போவார்கள். விளையாட்டுத்துறை அமைச்சரின் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தொகுதியில் பிறந்த நான் விளையாட்டுத் துறையில் எங்கள் மாணவிகளை சாதிக்க வைத்து அமைச்சர் மெய்யநாதன் சாருக்கும் தமிழக அரசுக்கும் கல்வித்துறைக்கும் நல்ல பெயரை வாங்கிக் கொடுப்பேன் என்றார்.

இத்தனை மாணவ, மாணவிகளை சாதனையாளர்களாக உருவாக்கிய உங்களுக்கு கிடைத்திருக்கும் அங்கீகாரம் என்ன? இன்று வரை எங்கே போனாலும் அத்தானி துரை டீம் வந்திருக்கு என்று சொல்வதை கேட்கும் போது மன மகிழ்ச்சியாக இருக்கும். பல்வேறு அமைப்புகளும் என்னை பாராட்டி பல விருதுகள் வழங்கி இருக்கிறது. இதையெல்லாம் தாண்டி கடந்த 2 முறையாக டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்காக விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை என்றாலும் கூட எனக்கும் என் மாணவர்களுமாக அந்த விருது கிடைக்கும் என்றே நம்புகிறேன்.

என் வாழ்நாள் முழுவதும் ஏழை கிராமப்புற மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பதே என் எண்ணமாக உள்ளது. அதற்கு என் மனைவியும் குழந்தைகளும் துணையாக இருக்கிறார்கள். விளையாட்டு மைதானத்திலேயே என் உயிர் போக வேண்டும் என்பதே என் ஆசை" என்றார்.


சாதனையாளர்கள் சத்தமில்லாமல் ஒரு பக்கம் சாதித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அவர்களுக்கான அங்கீகாரம் தான் ஏனோ தாமதமாகிக்கொண்டே போகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT