ADVERTISEMENT

பட்டினி எனும் புதிய நோய், பெரும் நஷ்டத்தில் வியாபாரிகள்... என்ன செய்ய போகிறார் பிரதமர் மோடி... எச்சரித்த உலக வங்கி!  

04:40 PM Apr 17, 2020 | Anonymous (not verified)

வருகிற மே 3 வரை ஊரடங்கு நீட்டிப்பை அறிவித்திருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த ஊரடங்கு நீட்டிப்பு இந்தியா முழுவதும் குறிப்பாக தமிழகத்தில் பட்டினிச் சாவுகளை கொண்டு வரும் என எச்சரிக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இதுவரை நான்கு முறை பிரதமர், கரோனா தொடர்பான ஊரடங்கு உத்தரவு பற்றி பேசியிருக்கிறார். அதில் எதிலுமே அந்த ஊரடங்கு உத்தரவினால் பொருளாதார ரீதியாக பாதிப்படையும் மக்களைப் பற்றி ஒரு வார்த்தைகூட பேசவில்லை. உங்களில் பலர் பட்டினியாய் இருக்கிறீர்கள். உறவுகளிடம் இருந்து விலகி தனியாக இருக்கிறீர்கள். இந்த கஷ்டமெல்லாம் எனக்கு தெரியும் என்று சொல்கிறாரே தவிர, அந்த பட்டினியை எதிர்கொள்ள என்ன திட்டம் என்பதை சொல்வதில்லை.

ADVERTISEMENT


ADVERTISEMENT



"இந்தியா முழுவதும் பல கோடி பேர் விவசாயத் தொழிலாளர்கள், பழங்குடியின மக்களாக இருக்கிறார்கள். இவர்கள் வருவாய்க்கும், சாப்பாட்டிற்கும் என்ன செய்வார்கள் என பிரதமர் அறிவிக்கவில்லை. அதிலும் குறிப்பாக தமிழகம் கரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இதில் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது மக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு சலுகைகள் அளிப்பது, அவர்களை சம்பாதிக்க வைப்பது போன்ற எந்த நடவடிக்கைகளிலும் மத்திய அரசு ஈடுபடாது. மே 3 வரை வரும் இரண்டாவது கட்ட ஊரடங்கு உத்தரவுக்கிடையில் பல பட்டினி சாவுகளை தமிழகம் சந்திக்க இருக்கிறது'' என்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளரான கே.பாலகிருஷ்ணன்.



தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவரான சண்முகம், "இதுவரை தமிழகத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு ஒரு பெரிய பாதிப்பை உருவாக்கவில்லை. அதற்கு காரணம் காவிரி டெல்டா போன்ற மாவட்டங்களில் நடைபெற்ற அரிசி சாகுபடி போன்ற நடவடிக்கைகள்தான். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் பேர் விவசாய தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கூலிவேலை உள்பட எந்த தொழிலும் இல்லை. பிரதம மந்திரி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் வேலைகள் தமிழகம் எங்கும் நடைபெறவில்லை.



ஒரு நாளைக்கு ஒரு ஆளுக்கு 229 ரூபாய் கூலி தரும் நூறு நாள் வேலைத் திட்டம் ஊரடங்கு உத்தரவு காரணமாக தமிழகத்தில் இல்லை. அதனால் விவசாய கூலித் தொழிலாளர்கள் கடுமையான உணவுத் தட்டுப்பாட்டில் தவிக்கிறார்கள். தமிழக அரசு வழங்கிய ஆயிரம் ரூபாய் மட்டும்தான் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது. ரேசனில் வழங்கக்கூடிய மளிகைப் பொருட்கள் இன்னமும் கிராமங்களுக்கு வந்து சேரவில்லை. கோவை மாவட்டத்தில் ஆனைமலை பகுதியில் 350 பழங்குடியினருக்கு ரேசன் கார்டுகளே இல்லை. அவர்கள் பட்டினியால் தவிக்கிறார்கள் என நான் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாமணிக்கு தகவல் கொடுத்தேன். அவர் உடனடியாக தொண்டு நிறுவனம் மூலம் பொருட்களை வழங்கி அந்த 350 குடும்பங்களையும் பட்டினி சாவில் இருந்து காப்பாற்றினார்.

இப்படி அரசின் ஊரடங்கு உத்தரவு என்பது கரோனா நோயை தடுப்பதற்காக போடப்பட்டாலும் அது பட்டினி என்கிற புதிய நோயை தமிழகத்தில் உருவாக்கி உள்ளது. இப்பொழுது நரேந்திர மோடியின் அறிவிப்பால் மே 3 வரை நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவின்போது, கிராம மக்களுக்கு தேவையான பொருளாதார நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டும். தமிழகத்தின் கிராமப்புறங்களிலும், மலைவாழ் மக்கள் மத்தியிலும் இன்னமும் கரோனா நோய் தாக்கம் இல்லை. ஆனால் நூறு நாள் வேலைத் திட்டம், ரேசன் பொருட்களை கார்டு இல்லாதவர்களுக்கும் முறையாக வழங்குதல், ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5 ஆயிரம் ரூபாய் உதவியாக வழங்குவது போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்தாவிட்டால் பட்டினிச் சாவு என்பது தவிர்க்க முடியாது'' என்கிறார்.



தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் அருண்குமார், "தமிழ்நாடு முழுவதும் மளிகைப் பொருட்கள், காய்கறி கடைகளை மட்டும் அரசு திறந்துள்ளது. ஆனால் மற்ற கடைகளை தமிழக அரசு திறக்கவில்லை. இதனால் பெரிய அளவில் வணிகர்களும் நகர்ப்புற மக்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்'' என்கிறார். இதுபற்றி நம்மிடம் பேசும் மற்ற வியாபாரிகளும் இதையேத்தான் சொல்கிறார்கள். ஒரு குடோனில் இருந்து பருப்பை கடைகளுக்கு கொண்டுவர வேண்டும் என்றால் அதை லாரிகளில் ஏற்றி கடைகளுக்கு கொண்டு வந்து அடுக்கி வைத்துவிட்டு செல்வது பருப்பு மொத்த வியாபாரிகளின் பழக்கமாக இருந்தது. இப்பொழுது அந்த சுமை, வியாபாரிகளிடம் திணிக்கப்படுகிறது. நகர்புறங்களில் இருக்கும் வியாபாரிகள் குடோன்களுக்கு ஆட்களை அனுப்பி பருப்பு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு கடைகளில் இறக்க வேண்டும். அதனால் பருப்பு விலையில் 30 சதவிகிதம் உயர்வு காணப்படுகிறது என்கிறார்கள்.

இதுபற்றி நம்மிடம் பேசிய தமிழ்நாடு வியாபாரிகள் சங்கத் தலைவர் விக்கிரமராஜா, "அதுமட்டுமல்ல, பருப்பு இருப்பு இப்பொழுது குறைவாக இருக்கிறது. பருப்பு வடமாநிலங்களில் விளைவது, அதன் இருப்பு குறைவாக இருப்பதால் செயற்கையாக சில மொத்த வியாபாரிகள் அதன் விலையை ஏற்றுவதற்காக பற்றாக்குறையை ஏற்படுத்தி வருகிறார்கள்'' என்கிறார்.



பருப்பு மட்டுமல்ல, எண்ணெய் விலையும் உயர்ந்திருக்கிறது. மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரைதான் திறக்கப்படுகின்றன. இந்த கடைகளுக்கு எண்ணெய், பிஸ்கட் மற்றும் சோப் ஆகியவற்றை சப்ளை செய்வதற்கு லாரிகள் கிடைப்பதில்லை. அதனால் இந்தப் பொருட்களின் விலையும் உயர்ந்திருக்கிறது. அரிசி, பூண்டு, மிளகாய் போன்றவை கர்நாடகா மற்றும் ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு வருகிறது. அங்கிருந்து வர லாரிகள் சரியாக கிடைப்பதில்லை. பலர் இங்கிருந்து லாரிகளை அனுப்பி பொருட்களை எடுத்து வருவதால் அதன் விலையில் ஏற்றங்கள் காணப்படுகிறது.

இது ஒரு பெரிய பிரச்சனையாக எழ தமிழகத்தைச் சார்ந்த வணிகர்கள் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்கள், தமிழ் தெரிந்த ஒரு அதிகாரியை டெல்லியில் இருந்து இந்த பொருட்களை லாரிகளில் கொண்டுவரும் பணிகளை ஒருங்கிணைக்கச் செய்திருக்கிறார்கள். ஆனால் அதிலும் சரியான பலன் ஏற்படவில்லை. அதனால் அரிசி, பூண்டு, மிளகாய், பருப்பு போன்ற பொருட்களில் பற்றாக்குறையும், விலையேற்றமும் ஏற்பட்டது.

தமிழகத்தில் விளைந்த நெல்லை தனியார் வியாபாரிகள் வாங்கி அரிசி பற்றாக்குறையை சமாளித்திருக்கிறார்கள் என்கிறார்கள் வணிகத் தொழிலில் ஈடுபடும் வல்லுனர்கள்.

இதுபற்றி தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவையின் தலைவரான வெள்ளையனை கேட்டபோது, "தமிழகத்தில் மளிகைப் பொருட்களின் விலையில் சிறிது உயர்வு ஏற்பட்டுள்ளது. மற்றபடி எல்லாம் கட்டுக்குள் இருக்கிறது'' என்கிறார். அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாமல், வணிகத்திற்கு வரும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் பூட்டியே கிடப்பதால் கடை வியாபாரிகள் பெருத்த நஷ்டத்தில் இருக்கிறார்கள் என நம்மிடம் பேசிய பெரும்பாலான வணிகர்கள் வருத்தப்படுகிறார்கள்.

மத்திய உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான், மக்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்களான அரிசி, கோதுமை, உப்பு, சர்க்கரை போன்றவற்றில் விலையேற்றம் நடக்காமல் பார்த்துக்கொள்வதற்காக ஒரு தனி கமிட்டியே அமைப்பதாக அறிவித்துள்ளார். ஒரு பக்கம் விலையேற்றம், மறுபக்கம் பொருட்களை வாங்க முடியாமல் பட்டினியால் கதறி அழும் ஜனக்கூட்டம் என எங்கும் இல்லாமை, வறுமை அடங்கிய கதறல்களே தமிழகம் முழுவதும் கேட்கிறது. இந்திய அளவிலும் அப்படித்தான்.

21 நாள் ஊரடங்கின் நான்காவது நாளில், வெளிமாநிலத் தொழிலாளர்கள் உணவும் வாழ்வாதாரமும் இன்றி கூட்டம் கூட்டமாக நடக்கத் தொடங்கியபோது, பட்டினி இந்தியாவின் கொடூர முகம் வெளியே தெரிய ஆரம்பித்தது. 21 நாட்களுக்குப் பிறகு நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில் அத்தகைய தொழிலாளர்கள் மட்டுமல்ல, சிறு-குறு வணிகர்கள், மொத்த விற்பானையாளர்கள், உற்பத்தியாளர்கள், மாதச்சம்பளம் வாங்குவோர் என அனைத்துத் தரப்பினரும் ஏதோ ஒரு வகையில் கடும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கிறார்கள்.

இந்தியாவின் பொருளாதார நிலைமை 1991 காலகட்டத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது என உலக வங்கி எச்சரித்துள்ளது. கரோனா காலத்திற்குப் பிறகு, கட்டுப்பாடுகள் தளர்ந்தாலும் இயல்பு வாழ்க்கை திரும்புமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். இதில் மறுபடியும் ஊரடங்கு உத்தரவு வந்தவுடன், நிலைமைகள் தாறுமாறாகியுள்ளன. அடுத்து என்ன நடக்குமோ, சோறாவது மிஞ்சுமா என தலையில் கை வைத்து கவலையடைந்திருக்கிறார்கள் தமிழகத்தில் வாழும் அனைத்துத் தரப்பு மக்களும்.

படங்கள் : அசோக், குமரேஷ்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT