Skip to main content

கரோனாவால் நீங்க செய்த ஊழலுக்கு எங்களைக் கைக்காட்டுவதா? எடப்பாடி மீது கோபத்தில் பிரதமர் மோடி... வெளிவந்த அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 23/04/2020 | Edited on 23/04/2020


நீட்டிக்கப்பட்டுள்ள தேசிய ஊரடங்கால் பொருளாதாரம் மற்றும் பங்குச் சந்தைகளின் கடுமையான வீழ்ச்சி பிரதமர் மோடி அரசுக்கு கடும் தலைவலியைக் கொடுத்து வருகிறது. இந்தச் சூழலில், அந்நிய நேரடி முதலீடுகள் மூலம் இந்திய நிறுவனங்களை கபளீகரம் செய்யும் சீனாவின் சதியை முறியடிக்க பிரதமர் மோடி எடுத்த நடவடிக்கைகள் காலதாமதமானவை எனக் குற்றம் சாட்டுகிறார்கள் காங்கிரஸ் எம்.பி.க்கள்.
 

bjp



 


கரோனாவால் பாதிக்கப்பட்ட சீனா அதிலிருந்து மீண்டு, தனது பொருளாதாரத்தை தூக்கி நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது. அதே வேளையில் கரோனாவை எதிர்கொண்டு வரும் உலக நாடுகளில் தனது நாட்டின் வர்த்தக முதலீடுகளை அதிகரித்துக்கொள்ளும் நடவடிக்கைகளில் வேகமாகக் குதித்துள்ளது சீனா. குறிப்பாக, இந்தியாவின் நேரடி அந்நிய முதலீடு கொள்கையில் அதிக கவனம் செலுத்தும் சீனா, ஷேர் மார்க்கெட்டில் வீழ்ச்சியடைந்துள்ள 16 நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறது. இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என மோடி அரசாங்கத்தின் நிதி ஆலோசகர்கள் எச்சரித்த நிலையில்தான் கடந்த 18-ந்தேதி அந்நிய நேரடி முதலீடு சட்டத்தில் திருத்தம் செய்து சீனாவின் கபளீகரத்திற்கு கடிவாளம் போட்டுள்ளார் பிரதமர் மோடி.

 

 

admk



இது குறித்து நம்மிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி.டாக்டர் விஷ்ணுபிரசாத், "மோடி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட "ஸ்டார்ட் அப்' திட்டத்தின் மூலம் 100 கோடி டாலர் (1 பில்லியன் டாலர்) மதிப்பிலான 30 நிறுவனங்கள் இயங்குகின்றன. இதில் 16 நிறுவனங்களில் 400 கோடி டாலர் மதிப்பிலான முதலீடுகளை சீனாவின் மக்கள் வங்கி மூலம் அந்நாட்டு நிறுவனங்கள் செய்திருக்கின்றன.
 

http://onelink.to/nknapp


உதாரணத்திற்கு, கரோனா நெருக்கடியால் இந்தியாவிலுள்ள ஹெச்.டி.எஃப்.சி. வீட்டு கடன் வழங்கும் நிறுவனத்தின் பங்குகள் சமீபத்தில் கடும் வீழ்ச்சியைச் சந்தித்தது. அதனைப் பயன்படுத்தி 1.01 சதவீதப் பங்குகளை 3000 கோடிக்கு சீனாவின் மக்கள் வங்கி வாங்கியுள்ளது. இதேபோல 16 இந்திய நிறுவனங்களில் பங்குகளைச் சீனா வாங்கியிருக்கும் நிலையில், ஒரு கட்டத்தில் சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் முடிவுகளில் தலையிடும் அதிகாரம் சீன நிறுவனங்களுக்கு கிடைத்து, அவற்றை கபளீகரம் செய்யவும் முடியும்.

 

admk



இந்த ஆபத்துகளை உணர்ந்துதான், சீன நிறுவனங்களைக் கண்காணிக்க வேண்டும் என எங்கள் தலைவர் ராகுல்காந்தி எச்சரிக்கை செய்தார். ஆனால், அதை அலட்சியப்படுத்தினார் மோடி. ஆனால், சீனாவின் ஆதிக்கத்தின் விளைவைத் தற்போது உணர்ந்து அந்நிய நேரடி முதலீடுகளுக்கு இனி மத்திய அரசின் அனுமதி தேவை என அந்நிய நேரடி முதலீடு கொள்கையில் திருத்தம் செய்திருக்கிறார். இத்தகைய புரிதல் இல்லாத செயல்பாடுகளால்தான் கரோனாவால் சந்திக்கும் பொருளாதார வீழ்ச்சியைச் சமாளிக்க முடியாமல் தடுமாறுகிறது பாஜக அரசு. இதன் பாதிப்பு மக்கள் மீது இறங்குகிறது'' என்கிறார் ஆவேசமாக.

ராகுல்காந்தியின் எச்சரிக்கையில் இருக்கும் எதார்த்தத்தை பிரதமர் மோடிக்கு எடுத்துச் சொல்லியிருக்கிறார் முன்னாள் நிதியமைச்சரும் முன்னாள் ஜனாதிபதியுமான பிரணாப் முகர்ஜி. அதேபோல, மத்திய நிதியமைச்சக அதிகாரிகளும் நிதி ஆலோசகர்களும் இந்தியாவில் விரியும் சீனாவின் ஆக்டோபஸ் கரங்களின் ஆபத்துக்களை விவரித்த நிலையில் சுதாரித்துக் கொண்ட மோடி, இந்தியாவின் எல்லைகளை பகிர்ந்துகொள்ளும் நாடுகள் இந்தியாவுக்குள் முதலீடு செய்ய மத்திய அரசின் அனுமதி தேவை என்கிற திருத்தத்தை கொண்டுவந்திருக்கிறார். இந்த கட்டுப்பாடு ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் பங்களாதேசத்திற்கு இந்தியா விதித்திருக்கிறது. தற்போது சீனாவுக்கும் பொருந்தும்படியாக திருத்தத்தைச் செய்து அறிவித்துள்ளது மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம்.

 

admk



இந்திய பொருளாதாரத்தில் சீனாவின் தாக்குதல் இப்படி இருக்கும் நிலையில், ஏழை மற்றும் நடுத்தரவர்க்கத்தினரிடம் பணப் புழக்கத்தை அதிகரிக்க, அவர்கள் கையில் நேரடியாகக் குறிப்பிட்டளவில் பணம் கொடுக்க வேண்டும்; அதற்கேற்ப ரிசர்வ் வங்கி சட்டத்தில் திருத்தம் செய்து தேவையான பணத்தை அச்சிட்டுக்கொள்ளும் நடவடிக்கையை எடுக்கலாம் என்கிற யோசனை குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாசிடம் விவாதித்திருந்தார் மோடி. ஆனால், அது வேறு மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என சக்திகாந்த தாஸ் தெரிவித்திருப்பதாக டெல்லி தகவல்கள் கூறுகின்றன.


அரசாங்கம் நினைத்தால் தங்களுக்குத் தேவையான பணத்தை அச்சிட்டுக்கொள்ள முடியுமா? என பொருளாதார ஆய்வாளர் ஆனந்த் ஸ்ரீனிவாசனிடம் பேசிய போது, "மன்மோகன்சிங் நிதியமைச்சராக (1994) இருந்தபோது திருத்தப்பட்ட ரிசர்வ் வங்கி சட்டம்தான் தற்போது நடை முறையில் இருக்கிறது. இதன்படி அரசாங்கத்தின் தேவைக்காக நினைத்த மாத்திரத்தில் பணத்தை ரிசர்வ் வங்கி அச்சிடமுடியாது. அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தால் வங்கிகள் மூலம் கடன் பத்திரங்களைத்தான் ரிசர்வ் வங்கி கொடுக்க முடியும். நேரடியாக அச்சிட்டு பணத்தைத் தர முடியாது. சட்டத்தைத் திருத்தினால் அச்சடிக்க முடியுமே என்கிற வாதம் முன்வைக்கப்படுகிறது. இது விபரீதமானது.

அதாவது, ஏற்கனவே இந்திய ரூபாயின் மதிப்பு சர்வதேச அளவில் குறைந்திருக்கிறது. இந்தச் சூழலில், தேவைக்கேற்ப பணத்தை அச்சிட்டுக்கொண்டால் பணத்தின் மீதுள்ள நம்பிக்கையும் அதன் மதிப்பும் சரமாரியாகச் சரிந்து விடும். பணத்தின் மதிப்பு சரியும் போது தேசத்தின் பொருளாதாரமும் சரியும். மோடி அரசாங்கம் நிதி நெருக்கடியில் தத்தளிக்கிறது என்பதும் ஒரு ஹம்பக்தான். மோடி அரசின் கஜானா நிரம்பி வழியத்தான் செய்கிறது. ஆனால், ஏழைகளுக்கு தர மோடிக்கு மனசில்லை! அண்மையில், மோடியின் 846 நண்பர்களுக்காக, வருமானவரியைத் தள்ளுபடி செய்தது நிதியமைச்சகம். அதாவது, 33 சதவீத வரிக்குப் பதிலாக 23 சதவீதம் கட்டினால் போதும் என அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் 1 லட்சத்து 50 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டது.
 

http://onelink.to/nknapp


அவர்களுக்குத் தள்ளுபடி செய்யாமல் அந்தப் பணத்தை 13 கோடி ஏழைகளுக்கு தந்திருக்கலாமே! 13 கோடி ஏழைகளுக்கு தலா 5000 ரூபாய் நிதி உதவி அளித்தால் 65 ஆயிரம் கோடி போதும். மூன்று மாதங்களுக்குத் தருவதற்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கோடி தேவை. மோடியின் நண்பர்களான பெரு முதலாளிகளுக்காக கணிசமான தொகையைத் தள்ளுபடி செய்யும் மோடி அரசாங்கம், ஏழைகளுக்காக 3 மாதங்களுக்கு வழங்க தேவைப்படும் தொகை ஒன்றும் பெரிது கிடையாது.

கச்சா எண்ணெய் ஒரு பேரல் 140 டாலருக்கு விற்ற நிலையில் 55 ரூபாய்க்கு ஒரு லிட்டர் பெட்ரோலை விற்றார் மன்மோகன்சிங். இன்னைக்கு ஒரு பேரல் வெறும் 20 டாலர்தான். ஆனால், லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய்க்கு விற்கிறார் மோடி. இப்படி நிறைய சொல்லலாம். ஆக, நிதி நெருக்கடி என்பதெல்லாம் பொய்! ஏழைகளுக்கு கொடுக்க மோடிக்கு விருப்பமில்லைங்கிறதுதான் நிஜம்'' எனத் தாக்குகிறார் ஆனந்த்ஸ்ரீனிவாசன்.

மோடி அரசாங்கத்தின் சூழல் இப்படி இருக்க, தமிழக முதல்வர் எடப்பாடியோ கரோனா விவகாரத்தை ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் தினமும் ஆலோசித்துக் கொண்டே இருக்கிறார். மூன்றே நாட்களில் கரோனா பாதிப்பு ஜீரோ நிலையை அடையும் என எடப்பாடி சொன்னதிலிருந்துதான் பாதிப்பின் எண்ணிக்கை அதிகரித்தபடி இருக்கின்றன. ஆலோசனைகளில் என்ன நடக்கிறது என விசாரித்தபோது, ’ரேபிட் டெஸ்ட் கிட்ஸ் பர்ச்சேஸ் குறித்தும் மத்திய அரசிடமிருந்து நிதியை பெறுவது குறித்தும்தான் இதுவரை அதிக அளவில் விவாதம் நடந்திருக்கிறது. அதிக எண்ணிக்கையில் கிட்ஸ்களை வாங்குவதன் மூலம் அதிகளவில் கமிஷன் கிடைக்கும் என்கிற கோட்பாட்டில் இயங்கியது எடப்பாடி அரசு. அதற்காகத்தான், அதிக எண்ணிக்கை தேவைப்படாத பட்சத்திலும் 6 லட்சம் கருவிகளை வாங்க சீனாவிடம் ஆர்டர் தரப்பட்டது. சீனாவிடமிருந்து பெறப்படும் கிட்ஸ்கள் தரமற்றவையாக இருக்கின்றன எனக் குற்றம்சாட்டி ஜெர்மன், ரஷ்யா, இத்தாலி, பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கருவிகளைத் திருப்பி அனுப்பி விட்டது.

அந்த நாடுகள் தங்கள் கொள்முதலை தென்கொரியா பக்கம் நகர்த்திக்கொண்டது. விலையும் குறைவுதான். அதனால்தான், சத்தீஸ்கர் மாநில அரசு ஒரு கிட்டை 337 ரூபாய்க்கு வாங்கியது. ஆந்திர அரசோ தென்கொரியாவிலிருந்து தரமான ஒரு கருவியை 300 ரூபாய் என 1 லட்சம் கருவியைக் கொள்முதல் செய்துள்ளது. ஆனால், தமிழக அரசோ ஒரு கிட்டை 600 ரூபாய் என 24 ஆயிரம் கருவிகளைக் கூடுதல் விலை கொடுத்து சீனாவிடமிருந்து வாங்கியிருக்கிறது. தரமற்ற கருவியைக் கூடுதல் விலை கொடுத்து ஏன் வாங்க வேண்டும்? கமிஷன் மட்டுமே காரணம்.


கூடுதல் விலை ஏன் என பத்திரிகையாளர்கள் கேட்டால், மத்திய அரசு நிர்ணயித்த விலைக்குதான் வாங்கியிருக்கிறோம் எனத் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர் உமாநாத்துக்கு மேலிடம் உத்தரவிட்டதால், அதன்படியே அவர் விளக்கம் தந்தார். மத்திய அரசு மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு மோடியின் கவனத்துக்குச் சென்ற நிலையில், 19-ந்தேதி இரவு எடப்பாடியைத் தொடர்பு கொண்டு நீங்கள் செய்திருக்கும் ஊழல்களுக்கு மத்திய அரசை கைக்காட்டுவீர்களா? என செம டோஸ் கொடுத்த பிரதமர் மோடி, இந்தியாவில் தமிழகத்தில்தான் பாதிப்பு அதிகம் எனக் காட்டுவதன் மூலம் நிதியை அதிகம் பெறலாம் எனத் திட்டமிட்டே எண்ணிக்கையை அதிகரித்து காட்டுவதாகவும் எடப்பாடியை விளாசியிருக்கிறார்.

அதாவது, சாதாரணமான சளி, இருமல், காய்ச்சல் என யார் போனாலும் அது கரோனாவின் பாதிப்பு எனச் சொல்லி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்து விடுகிறது எடப்பாடி அரசு. அதற்கேற்ப, காய்ச்சல் என யார் வந்தாலும் அவர்களை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விடுங்கள் எனத் தனியார் மருத்துவ மனைகளுக்கு ஓரலாக உத்தரவிட்டுள்ளது தமிழக சுகாதாரத் துறை.
 

http://onelink.to/nknapp


தற்போது மோடியின் டோஸ்களுக்கு பிறகு உடல்நலம் குணமடைந்தாகச் சொல்லி பலரையும் வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது எடப்பாடி அரசு. அமெரிக்காவின் பிரபல புரூக்ளீன் மருத்துவமனையே கரோனாவுக்கு மருந்தில்லை என கை விரித்துவிட்டது. ஆனால் தமிழக அரசோ, விழுப்புரத்தில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆன கரோனா பாதிப்பாளர்களைக் குணமடைய செய்துவிட்டோம் எனச் சொல்லி அவர்களை ரிலீஸ் செய்திருக்கிறது. என்ன வகையான மருத்துவச் சிகிச்சை கொடுக்கப்பட்டு கரோனாவை ஒழித்தோம் என அரசுத் தரப்பில் சொல்ல வில்லை. ஆக, குணமடைந்ததாகச் சொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சாதாரண காய்ச்சல், சளிக்காக வந்தவர்கள்தான்'' என்கிறார்கள் மாவட்ட அளவில் கரோனா ஆய்விலுள்ள ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

 

 

 

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.