ADVERTISEMENT

பத்மராஜன் பராக்...!

10:23 AM Apr 08, 2019 | elayaraja

ADVERTISEMENT


இந்திய தேர்தல் வரலாறு மட்டுமல்ல... உலக அளவிலான தேர்தல் வரலாற்றை புரட்டினால் அதில் கண்டிப்பாக பத்மராஜன் பற்றிய பதிவுகளும் இருந்தே தீரும். அதற்காக அவர் மாபெரும் கட்சித் தலைவரோ இல்ல... தேர்தல் அதிகாரியோ இல்ல... சினிமா நட்சத்திரம் என்றோ நினைத்துவிட வேண்டாம். என்ன இது.... பீடிகை ஓவராக இருக்கேனு நினைக்கிறீங்களா...?

ADVERTISEMENT


அன்றாடம் செய்தித்தாள் வாசிக்கிறவங்களுக்கு வேணும்னா பத்மராஜன்கிற பேர் ஓரளவுக்கு பரிச்சயம் ஆகியிருக்கலாம். ஆனாலும், அவரைப்பற்றியும் தேர்தல் சடுகுடு ஆட்டத்தில் தெரிஞ்சுக்கறது முக்கியம்னு நினைக்கிறோம். அது சரி... யார் அந்த பத்மராஜன் என்கிறீர்களா? சொல்றேன் கேளுங்க.



சேலம் மாவட்டம் மேட்டூர் பெருமாள் கோயில் தெருவில் வசிப்பவர்தான் பத்மராஜன். அவருக்கு வயசு இப்போ 60 ஆச்சு. ஆரம்பத்துல இருசக்கர வாகனங்களுக்கு பஞ்சர் ஒட்டும் கடை வெச்சிருந்தாரு. அதுதான் அவருக்கு அப்போ வாழ்வாதாரம். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி, சின்ன அளவுல ஒரு டயர் ரீட்ரேடிங் கம்பெனி ஆரம்பிச்சாரு. இப்போ வரைக்கும் அதுதான் அவரோட குடும்பத்துக்கு சோறு போடுது.


தேர்தல் வரலாறு அது இதுனு சொல்லிட்டு பத்மராஜனோட பஞ்சர் கடைய பத்தி பேசறீங்களேனு கேட்பது எனக்கும் கேட்குது.


தேர்தலில் பணம் உள்ளவர்கள் மட்டும்தான் போட்டியிடணுமா? ஏன் நம்மைப்போல சாதாரண ஆளெல்லாம் போட்டியிடக்கூடாதானு பத்மராஜனுக்குள்ள திடீர்னு ஒரு கேள்வி எழுந்துச்சு. அதன் விளைவு, அவர் ஒவ்வொரு முறை தேர்தல் அறிவிக்கப்படும் போதெல்லாம் இந்த நாட்டில் ஏதாவது ஒரு தொகுதியில் கண்டிப்பாக வேட்புமனு தாக்கல் செய்வதை வழக்கமாக்கிக்கிட்டாரு.


அப்படி 1988ல் ஆரம்பிச்ச இந்தப்பழக்கம், இப்போ 2019 வரைக்கும் தொடருதுனா பாருங்களேன். இந்தப்பயணத்தை இத்தோடு அவரு நிறுத்திக்கப்போறதில்ல. அடுத்த டுத்த தேர்தல்களிலும் அவர் கண்டிப்பாக போட்டியிடத்தான் போறாரு.



கடந்த 30 ஆண்டுகளில் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிங்களில் சட்டமன்றம், மக்களவை, உள்ளாட்சித் தேர்களில் எல்லாம் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார். அவ்வளவு ஏன்.... ஜனாதிபதி தேர்தலில்கூட போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறார்னா நீங்கள் நம்பித்தான் ஆகணும். அது மட் டுமில்லீங்க... நம்ம ஊர்ல மறைந்த பிரபலமான தலைவர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரை எதிர்த்துக்கூட வேட்புமனு தாக்கல் செய்திருக்காரு.


இங்க மட்டுமில்ல... கர்நாடகத்துல எடியூரப்பா, எஸ்.எம்.கிருஷ்ணா, பங்காரப்பா, தேவகவுடா, குமாரசாமி, சதானந்தகவுடா, ஜெகதீஷ் ஷட்டர் உள்ளிட்ட முக்கிய விஐபி க்களை எதிர்த்தும் களம் கண்டிருக்காரு. சண்டையில கிழியாத சட்டை எங்கிட்டு இருக்குனு கேட்கற மாதிரி, விஐபி தலைவர்களை எதிர்த்து போட்டியிடறதுல சில நேரம் சிக்கல்களையும் சந்திச்சிருக்காரு, பத்மராஜன்.



சரியாக சொல்லணும்னா அது 1991ம் வருஷம். ஆந்திரா மாநிலம் நந்தியால் தொகுதியில, மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போட்டியிட்டாரு. அவரை எதிர்த்து நம்ம பத்மராஜனும் மனு தாக்கல் செய்திருந்தாரு. திடீர்னு ஒரு நாள் ஒரு மர்ம கும்பல் அவரை கடத்திட்டுப் போய்ட்டாங்க. கொஞ்ச நேரம் கடத்தி வெச்சிருந்த அந்த கும்பல், அப்புறம் அவரை வெளியே விட்டுட்டாங்க. அவரை யார் கடத்தினது? எதுக்காக கடத்தினாங்க போன்ற விவரங்கள் இன்று வரைக்கும் அவருக்கும் தெரியாதுங்கறதுதான் இதுல பெரிய வேடிக்கையே.


இன்னொரு வேடிக்கையும் நடந்திருக்கு. ஒரு வேட்பாளர் அதிகபட்சம் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். அதுதான் தேர்தல் ஆணையத்தின் விதிமுறையும்கூட. ஆனால் பத்மராஜன் 1996ம் வருஷத்துல ஒரே நேரத்துல 5 மக்களவை தொகுதிகளிலும், 3 சட்டமன்ற தொகுதிகள்னு மொத்தம் 8 தொகுதிகளில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தாரு. அனைத்து மனுக்களும் நிராகரிக்கப்பட்டுவிட்டது.


இத்தனை வருஷத்துல அவரு 201 முறை தேர்தல்களில் போட்டியிட வேட்புமனுக்கள் தாக்கல் செய்திருக்காரு. தர்மபுரி மக்களவை தொகுதியில பாமக வேட்பாளர் மருத்துவர் அன்புமணி ராமதாஸை எதிர்த்து கடந்த மார்ச் 19ம் தேதி முதல் ஆளாக வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அதுதான் அவரோட 200வது தேர்தல். அத்தோடு மனுஷன் நின்னாரானா அதுதான் இல்லை.


கடந்த 3ம் தேதி கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து வயநாட்டிலும் இந்த முறை களம் இறங்குறாரு நம்ம பத்மராஜன். அது அவரோட 201வது வேட்புனு தாக்கல்.


இத்தனை முறை போட்டியிடறாரே எந்த தேர்தலிலாவது ஜெயிச்சிருக்காரானா அதுதான் இல்லை. வேட்புமனு தாக்கல் செய்யறதோட சரி. பெரும்பாலும் அவரோட மனுக்கள் தள்ளுபடி ஆகிடும். அப்படியே மனுக்கள் பரிசீலனை முடிந்து, தேர்தல் போட்டிக்களத்திற்குள் நுழைந்துவிட்டாலும், அவர் பிரச்சாரத்துக்கெல்லாம் போனதா சரித்திரமும் இல்லை பூகோளமும் இல்லை. இதுவரைக்கும் அவர் டெபாசிட் தொகையை ஒருமுறைகூட திருப்பி வாங்கினதே இல்லை.


டெபாசிட்டுனு சொல்லும்போதுதான் ஞாபகம் வருது. வேட்புமனு தாக்கல் செய்யும்போது வேட்பாளர்கள் டெபாசிட் தொகை கட்டணுமே? அதுக்கெல்லாம் என்ன பண்ணுவாரு?னு நீங்கள் கேட்கறது நல்ல கேள்விதான்.



பத்மராஜனுக்கு எந்தவிதமான கெட்டப்பழக்கமும் கிடையாது. ஆடம்பர பிரியரும் கிடையாது. குடும்பத்துக்கு தேவையான அத்தியாவசிய செலவுகளை செய்துடுவாரு. அப்புறம், தேர்தலுக்குனு கொஞ்சம் கொஞ்சமா குருவி சேர்க்கற மாதிரி சேர்த்து வைப்பாரு. அவரோட தேர்தல் ஆர்வத்தை புரிஞ்சுக்கிட்ட சில நண்பர்களும் கொடுத்து உதவியிருக்காங்க. சில நேரம் நகைகளை அடமானம் வைத்தும் டெபாசிட் தொகைக்கு பணம் கட்டியிருக்காரு. ஆரம்பத்துல அவரோட குடும்பத்துல இதிலெல்லாம் விருப்பம் இல்லைனாலும், காலப்போக்கில் அவங்களும் பத்மராஜனோட ஆர்வத்துக்கு பச்சைக்கொட்டி காட்டிட்டாங்க. கடந்த 30 வருஷத்துல தேர்தல் டெபாசிட், போக்குவரத்து செலவு, வேட்புமனு தயாரிப்பு செலவுனு 30 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்காரு பத்மராஜன்.


சரி... பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்து ஏன் அவர் தேர்தலில் போட்டியிடணும்? எப்படியும் தோற்றுப்போகப் போகிறார். அப்படி இருக்கும்போது எதற்காக இப்படி தேர்தலில் போட்டியிடணும்னு நீங்கள் கேட்கறீங்க. நல்ல கேள்விதான். இதே கேள்வியைத்தான் அவரிடமும் கேட்டோம். அதுக்கு அவர் ரொம்பவே கூலாக சிரிச்சிக்கிட்டே சொன்னார்.


நாம ஆரம்பத்துலயே சொன்னதுதான். தேர்தலில் சாதாரணமான ஆளுங்களும் போட்டியிட முடியும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் அவர் தொடர்ந்து போட்டியிடுவதாகச் சொன்னார். அப்புறம், உலக சாதனைக்காக இப்படி போட்டியிடுவதாகவும் சொன்னார்.



ஏற்கனவே, 'அதிகமுறை தேர்தலில் தோல்வி கண்டவர்' என்றும், 'அதிகமுறை தேர்தலில் போட்டியிட்டவர்' என்ற மகத்தான சாதனையை லிம்கா புக்ல பதிவு செய்திரு க்காரு. கின்னஸ் சாதனைக்கும் தயாராகி வருகிறார்.


இத்தனை ஆண்டுகால கடும் போட்டிகளில், கடந்த 2011ல் மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 6273 வாக்குகள் பெற்றார். அதுதான் அவர் இதுவரை தேர்தலில் வாங்கிய அதிகபட்ச வாக்குகள். சில முன்னணி கட்சிகளில் இருந்து பலமுறை அழைப்பு வந்தும், அவற்றில் எல்லாம் சேர விரும்பாமல் இன்றுவரை சுயே ச்சையாகத்தான் போட்டியிட்டுட்டு வருகிறார்.


இப்படி தொடர்ந்து எல்லா தேர்தல்களிலும் போட்டியிட்டுக்கிட்டு வர்றதாலோ என்னவோ அவரை 'தேர்தல் மன்னன் பத்மராஜன்'னு பலரும் சொல்றாங்க. எனக்கு என்ன சந்தேகம்னா, தொடர்ந்து தேர்தலில் வெற்றி மேல் வெற்றிகளைக் குவித்து வருபவரைத்தானே மன்னன் என்று சொல்ல வேண்டும்? தேர்தலுக்குத் தேர்தல் தோற்றுப்போகும் ஒருவரை எப்படி தேர்தல் மன்னன் என்று சொல்ல முடியும்?


என்ன நான் கேட்கறது... சரிதானே...?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT