/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/our-ins-art_12.jpg)
பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் வேலை கிடைத்துள்ளதாக போலி பணி நியமன ஆணை வழங்கி இளைஞரிடம் 22 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பெண் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் புது காலனியைச் சேர்ந்தவர் குணசீலன். இவருடைய மகன் மகாதேவ் (வயது 26). பொறியியல் பட்டதாரியான இவர், சேலம் மாவட்டக் காவல்துறை எஸ்பி அருண்கபிலனிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், “நான் அரசுப்பணிக்காக டி.என்.பி.எஸ்.சி. தேர்வுகளை எழுதி வந்தேன். இந்த சூழலில்கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மேட்டூரைச் சேர்ந்த பழனிசாமி என்பவர் அறிமுகம் ஆனார். அவர் பெட்ரோல் பங்க் வைக்க உரிமம் பெற்றுக் கொடுப்பதாகவும், பொதுப்பணித்துறையில் வேலை வாங்கிக் கொடுப்பதாகவும் கூறி, 30 லட்சம் ரூபாய் கேட்டார். அதன்பேரில் பழனிசாமி, அவருடைய நண்பர்கள் சந்தோஷ் பாண்டி, நித்தியானந்தம் ஆகியோரிடம் 22 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.
இதையடுத்து அவர்கள் எனக்கு தமிழக அரசின் பொதுப்பணித்துறையில் இளநிலை பொறியாளர் பணி கிடைத்துள்ளதாகக்கூறி, ஒரு பணி நியமன ஆணை கடிதத்தை வழங்கினர். அந்த பணி நியமன ஆணை கடிதத்தை வாங்கிப் பார்த்தபோது அது போலியானது எனத் தெரிய வந்தது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களிடம் நான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடும்படி கேட்டேன். ஆனால் பணத்தைத் தர மறுத்து, கொலை மிரட்டல் விடுத்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதுடன், என்னுடைய பணத்தை மீட்டுத் தர வேண்டும்” எனத் தனது புகார் மனுவில் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்தப் புகார் மீது உரிய விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்கும்படி மாவட்டக் குற்றப்பிரிவுக்கு எஸ்.பி. உத்தரவிட்டிருந்தார். இதன்பேரில் குற்றப்பிரிவு காவல்துறையினர் நடத்திய முதல்கட்ட விசாரணையில் பழனிசாமி, கூட்டாளிகள் கந்தபாலன், நித்தியானந்தம், சந்தோஷ்பாண்டி, சுமதி ஆகிய 5 பேரும் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் ஐந்து பேர் மீதும் கூட்டுச்சதி, பண மோசடி, போலி பணி நியமன ஆணை தயாரித்து வழங்கியது, கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும்தலைமறைவாக உள்ள இவர்கள் 5 பேரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)