ADVERTISEMENT

இப்பவே பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்கு ஓ.பி.எஸ் மகன் !

11:04 AM Mar 29, 2019 | Anonymous (not verified)

"துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன்' என்ற கெத்துடன் ரவீந்திரநாத் குமாரும், "தமிழக காங்கிரசின் சீனியர் தலைவர்களில் ஒருவர்' என்ற கெத்துடன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும், "டி.டி.வி. தினகரனின் வலதுகரம்' என்ற கெத்துடன் தங்க தமிழ்ச்செல்வனும் தேனியில் களம் காண்கிறார்கள். எப்படியும் தனது மகனைத்தான் ஓ.பி.எஸ். இறக்குவார் என்பதால், ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் களத்திற்குப் பதிலாக, தேனி எம்.பி. தொகுதியில் தங்க தமிழ்ச்செல்வனை களம் இறக்கியிருக்கிறார் தினகரன்.

ADVERTISEMENT



வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வனப்பேச்சியம்மன் கோவிலுக்குச் சென்று மனமுருக வேண்டிவிட்டு, தேனி மாவட்ட கட்சி அலுவலகத்திற்கு வந்தார் ரவீந்திரநாத். மகனுக்கு மணி மகுடம் சூட்டியே ஆகவேண்டும் என்பதால், வேட்பு மனு தாக்கலுக்கு ஆயிரக்கணக்கில் ர.ர.க்களை கூட்டியிருந்தார் ஓ.பி.எஸ். மதுரையைச் சேர்ந்த அமைச்சர் உதயகுமாரும் தேனியில் முகாமிட்டு, ரவீந்திரநாத்திற்கு கூட்டம் சேர்த்தார்.

அமைச்சர்களான ஓ.பி.எஸ்., உதயகுமார், எம்.எல்.ஏ. ஜக்கையன், மாஜி எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் பிரச்சார ஜீப்புகளில் ஏறி, இரட்டை இலைக்கு வாக்கு கேட்டபடி, கலெக்டர் அலுவலகம் நோக்கி கிளம்பினார்கள். எல்லோரும் ஜீப்பில் போய்க்கொண்டிருக்கும் போது, வேட்பாளர் ரவீந்திரநாத் மட்டும் முதல்வர் எடப்பாடி பாணியில் பிரச்சார வேனில் ஏறி நின்றவாறு இரட்டை விரலைக் காட்டியும் கையெடுத்துக் கும்பிட்டும் வாக்கு கேட்டபடி சென்றதைப் பார்த்து ர.ர.க்களே மிரண்டுவிட்டனர். "இப்பவே பெரிய தலைவர்கள் ரேஞ்சுக்கு ரவீந்திரநாத் ஆகிட்டாரே' என பொதுமக்களும் அதிசயமாகப் பார்த்தனர்.

ADVERTISEMENT



ர.ர.க்களின் கூட்டத்தால் தேனி கலெக்டர் அலுவலகமே திக்குமுக்காடியது. எம்.எல்.ஏ. ஜக்கையனை தனது மகனுடன் அனுப்பி, கலெக்டர் பல்லவி பல்தேவிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்யச் சொன்னார் ஓ.பி.எஸ். வருமானம் 4 கோடி, கடன் 3 கோடி, தாய் விஜயலட்சுமியிடம் 83 லட்சத்து 10 ஆயிரம், தம்பி பிரதீப்பிடம் 33 லட்சத்து 3 ஆயிரத்து 131 ரூபாய் கடன் வாங்கியிருப்பதாக தனது வேட்புமனுவில் ரவீந்திரநாத் குறிப்பிட்டுள்ளார். ரவீந்திரநாத்தின் தாய் விஜயலட்சுமியும் மனைவி ஆனந்தியும் வீடுவீடாக ஏறி இரட்டை இலைக்கு ஓட்டுக் கேட்டு வருகிறார்கள்.

ரவீந்திரநாத்தை எதிர்த்து தங்க தமிழ்ச்செல்வன் களம் இறங்கியதுவரை இருமுனைப் போட்டியாகத்தான் இருந்தது. ஆனால் காங்கிரஸ் வேட்பாளராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களம் இறங்கியதும் மும்முனைப் போட்டியாக சூடு பிடித்துள்ளது. தனது உடல்நலன் கருதி இந்தத் தேர்தலில் போட்டியிட ஆர்வம் காட்டாத மாஜி எம்.பி. ஜே.எம்.ஆரூண், தனது மகன் அசன் ஆரூணுக்கு சீட் கேட்டார். ஆனால் காங்கிரஸ் தலைமையோ இளங்கோவனை களத்தில் இறக்கியுள்ளது.



ஈரோடு அல்லது கிருஷ்ணகிரியை எதிர்பார்த்திருந்த இளங்கோவனுக்கு தேனி கிடைத்தாலும் சுறுசுறுப்புடன் தொகுதியில் வந்திறங்கி, காங்கிரஸ், தி.மு.க., வி.சி.க. இரு கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் ஆகி யோரைச் சந்தித்து வெற்றிக்கான வியூகங் களை வகுக்க ஆரம்பித்துவிட்டார். கரன்சி விஷயத்திலும் இளங்கோவன் தாராளம் காட்டுவார் என்ற எதிர்பார்ப்பு கூட்டணிக் கட்சித் தொண்டர்களிடம் உள்ளது.

ஆரம்பகட்ட வேலைகள் எல்லாம் சுமுகமாக முடிந்தபின், 25-ஆம் தேதி, மதியம் 12 மணியிலிருந்து 1 மணி வரை நல்ல நேரம் என்பதால், தி.மு.க. மா.செ. கம்பம் ராமகிருஷ்ணன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் சென்று கலெக்டர் பல்லவி பல்தேவிடம் வேட்புமனுவை தாக் கல் செய்தார் இளங்கோவன். ஆளும் தரப்பே மிரளும் வண்ணம் மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணித் தொண்டர்கள் திரண்டிருந்தனர்.

வேட்புமனுவை தாக்கல் செய்துவிட்டு வெளியே வந்த இளங்கோவன் மீடியாக்களிடம் பேசியபோது, பிஞ்சுலேயே பழுத்ததெல்லாம் போட்டியிடுது. நான் மரத்துலேயே பழுத்தவன், பெரியாரின் பேரன். மதுரையிலிருந்து போடிக்கு வந்துக்கிட்டிருந்த ரயில் நின்னு பத்து வருஷத்துக்கும் மேலாச்சு. இந்த ரயில் பாதையை அகல ரயில் பாதையாக மாற்றும் காண்ட்ராக்டை ஆந்திராவைச் சேர்ந்த எனது நண்பர் எடுத்திருந்தார். இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஆளும் கட்சி முக்கியப் புள்ளி ஒருத்தர் அவரிடம் போய் 33% கமிஷன் கேட்டிருக்காரு. மிரண்டு போன அந்த காண்ட்ராக்டர் என்னிடம் சொல்லிவிட்டு, அந்த காண்ட்ராக்டே வேணாம்னு ஓடிட்டாரு''’என சரமாரியாக போட்டுத் தாக்கினார் ஈ.வி.கே.எஸ்.

அ.ம.மு.க.வின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தனது சமூகமான பிறமலைக் கள்ளர் சமூக பிரமுகர்களையும் அ.ம.மு.க. நிர்வாகிகளையும் சந்தித்தார் தங்க தமிழ்ச்செல்வன். குக்கர் சின்னம் குறித்த வழக்கில் முடிவு எதுவும் தெரியாததால், 25-ஆம் தேதி வரை தங்க தமிழ்ச்செல்வன் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.

மகனின் வெற்றி தனது கௌரவப் பிரச்சனை என்பதால், தேனி எம்.பி. தொகுதி முழுக்க தேனீயாய் சுற்றி வருகிறார் ஓ.பி.எஸ். "ரவீந்திரநாத்தை வீழ்த் தியே தீருவது' என்ற தினகரனின் தீவிரத்திற்கு தீயாய் உழைக்கிறார் தங்க தமிழ்ச்செல்வன். இவர்கள் இருவரின் மோதலால், தனது வெற்றி சாத்தியப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் இளங்கோவன்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT