ADVERTISEMENT

எடப்பாடியும்,பன்னீர்செல்வமும் தோல்வி பற்றி யோசிக்கிறது கூட இல்ல!கடுப்பில் அதிமுகவினர்! 

05:29 PM Jun 10, 2019 | Anonymous (not verified)

நாடாளுமன்றத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததும், சட்டமன்ற இடைத்தேர்தலில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததும் கட்சியின் எதிர்காலம் குறித்து எங்களை மிகவும் கவலைகொள்ள வைத்திருக்கிறது' என்று அ.தி.மு.க. நிர்வாகிகளே கூறிவரும் நிலையில், அக்கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் மனநிலையை அறிந்திட களமிறங்கினோம். இரட்டை இலையைத் தவிர வேறு சின்னத்துக்கு இதுவரை நான் ஓட்டு போட்டதில்லை... இனிமேல் என்னாகுமோ?''’என்று சிந்தனை வயப்பட்டார் செல்லம்மாள்.

ADVERTISEMENT



கைலிக்கு மேல் பெல்ட்டும் கற்றையாய் மீசையும் வைத்திருந்த ராஜகணபதி, எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பிறகு ஆபத்பாந்தவனாக வந்து நின்னாங்க ஜெயலலிதா. இயக்கம் பிளவுபட்டது. ஆனாலும், பின்னாளில் இணைந்தது. அப்போது ஆனந்தக்கூத்தாடிய தொண்டர் களில் நானும் ஒருவன். ஜெயலலிதாவுக்குப் பிறகு, இந்த இயக்கம் சுயநலக் கும்பலின் கரங்களுக்குச் சென்றது, பன்னீர்செல்வமும் பழனிச்சாமியும் முதலில் அடிபணிஞ் சாங்க. அப்புறம், "அடிமைப் பெண்' எம்.ஜி.ஆரைப் போல நிமிர்ந்து நின்று, சசிகலா கும்பலிடம் இருந்து இந்த இயக்கத்தை மீட்டாங்க. ஆனா... அ.தி.மு.க.வை வீழ்த்தணும்கிற ஒரே நோக்கத்தோடு, சசிகலா ஆதரவு நிலை எடுத்தவர்கள், "அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில், ஜெயலலிதாவின் படத்தையும், பெயரையும் பயன்படுத்தி குறிப்பிட்ட சமுதாயத்தின் ஆதரவோடு இந்த தேர்தலைச் சந்திச்சாங்க.

ADVERTISEMENT



ஆனா... களத்தில் இரட்டை இலையை வீழ்த்தி அவர்களால் வெற்றி பெற முடியல. இதற்குக் காரணம், என்னைப் போன்ற அடிமட்டத் தொண்டர்கள் அ.தி.மு.க.வை காப்பாத்தணும்னு வெறித்தனமா ஓட்டு போட்டதுதான். ஆனாலும், இரட்டை இலையின் வெற்றி சொல்லிக்கிற மாதிரியில்ல. பூலாவரி சுகுமாரன், வத்தலக்குண்டு ஆறுமுகம், அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் உதயகுமார் போன்றோரின் குருதியில் பூத்த மலர்தான் அ.தி.மு.க.'' என்று மீசையை முறுக்கினார்.




அ.தி.மு.க. கடந்துவந்த பாதையை நன்கறிந்த சந்திரன், ""இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, முழுமையான சுயபரி சோதனை மேற்கொள்ள கட்சி தயாராகி இருக்கவேண்டும். கடந்த காலங்களில் இது நடந் துள்ளது. 1996-ல், மோசமான தோல்விதான். அப்போது, கட்சியின் ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியையும் சென்னைக்கு வரச்சொல்லி, தனித்தனியாகக் கேட்டறிந்தார் ஜெயலலிதா. சென்னை -வடபழனி விஜய சேஷ மகாலில்தான், இந்த ஆய்வுக் கூட்டம் நடந்துச்சு. அதோடு அவர் நிறுத்தல. கட்சியின் மூத்த தலைவர் கே.ஏ.கிருஷ்ணசாமியை, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொண்டர்களைச் சந்தித் துப் பேசச் சொன்னார். தொண்டர்களின் உணர்வுகளை அறிந்து வந்து, வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு சசிகலா கும்பல் நடத்திய ஆடம்பர திருமணமும், அவர்கள் தமிழகம் முழுவதும் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டு போட்ட ஆட்டமும்தான் தோல்விக்கான காரணம் என்று ஜெயலலிதா விடம் எடுத்துச் சொன்னார். தொண்டர்களின் உணர்வு களை ஜெயலலிதாவும் அறிந்தார். பிறகு, 1999 லோக்சபா தேர்தலிலும் கட்சிக்குப் பெரும் பின் னடைவு. சென்னை, கிண்டி, டான்சி வளாகத் தில் வைத்து கட்சிக்காரர் களைச் சந்தித்தார். தொகுதி வாரியாக தோல்விக்கான காரணங்கள் அலசப்பட்டன.

2004 லோக் சபா தேர்தலில், நாற்பதுக்கு நாற்பதும் தோல்வி. கழகத்தை மீட்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறைந்த வாக்குகள் வித்தியாசத் தில் தோல்வியடைந்த கோபிச்செட்டிபாளையம் என்.ஆர்.கோவிந்தராஜன், நாமக்கல் அன்பழகன், பெரியகுளம் தினகரன் போன்றவர்களுக்கு ராஜ்யசபா உறுப்பினர் பொறுப்புகளை வழங்கினார்.அமைச்சர்களிடம் குவிந்து கிடந்த அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டன. நாற்பதுக்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகளுக்கு வாரியத் தலைவர் பதவிகள் வழங்கப்பட்டன. இதனால், புது ரத்தம் பாய்ச்சப்பட்டு, கட்சி மீண்டும் வலிமையையும், பொலிவையும் பெற்றது. இதனால்தான், 2006 சட்டசபைத் தேர்தலில் தி.மு.க. அமைத்த மெகா கூட்டணியையும் மீறி, அ.தி.மு.க.வால் 68 இடங்களை வெல்ல முடிந்தது. ஜெ. கடைசிவரை ஆளுமையோடு இருந்தார்'' என்று விரிவாகப் பேசினார்.


எம்.ஜி.ஆர். ரசிகரான முதியவர் நேசமணி, ""மோசமான தோல்விக்கு என்ன காரணம்? இதை அறிந்து சரிபண்ண வேண்டாமா? பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும் இது குறித்து சிந்திக்கக்கூட நேரமில்லாம சுத்திக்கிட்டிருக்காங்க. இது நியா யமா? ஜெயலலிதாவைவிட கூடுதல் ஆளுமைன்னு அவங்களுக்கு நினைப்புபோல. இந்த ஆட்சிமேல, மக்களுக்கு எந்தவிதத்திலும் நல்ல அபிப்ராயம் இல்ல. இந்தக் கோபம்தான் இரட்டை இலை இருந்தும், அ.தி.மு.க.ங்கிற ஆலமரம் சாய்ஞ் சிருச்சு. எல்லா துறையிலும் லஞ்சம் தலைவிரித்தாடுது. முதல்வர், துணை முதல்வர்ங்கிற பெரிய அந்தஸ்தில் இருக் கிறவங்களகூட சந்திச்சிடலாம். ஆனா.. அமைச்சர்களா இருக்கிறவங்கள, என்னை மாதிரி சாதாரண தொண்டனால சந்திக்க முடியாது'' என்றார் வேதனையுடன்.


அம்மாவுடைய கால் தூசிக்கு...?''’என்று சினந்த சவுந்தரராஜன், ""பதவிங்கிறது வரும்; போகும். ஆனா.. கட்சி இருந்தால்தான், எதுவுமே நடக்கும். அம்மாவைத்தான் காப்பாற்ற முடியல. கட்சியையாவது? இப்ப முதல்வர், துணை முதல்வரா இருக்கிறவங்க நல்லவங்களா? கெட்டிக்காரங்களா''ன்னு கட்சிக்காரர்களுக்கு நல்லாவே தெரியும். ஆனா.. வேறு வழியில்ல. இவங்க ரெண்டு பேரும்தான் சூழ்நிலையைப் புரிஞ்சிக்கிட்டு, கட்சியைத் தூக்கி நிறுத்துற காரியங்களில் இறங்க வேண்டும். கமல், சீமான், ரஜினின்னு மக்களை ஈர்க்கிறவங்க வந்துகிட்டே இருக்காங்க. அரசியலில் அடுத்து என்ன சுனாமி வரப்போகுதோ? அப்படி வந்துட்டா, அ.தி.மு.க.ங்கிற ஓட்டைப் படகு மூழ்கடிக்கப்பட்டு, இருந்த சுவடே தெரியாம போயிரும்'' என்று அழுத்தமாகச் சொன்னார். அ.தி.மு.க. காப்பாற்றப்பட வேண்டும் என்ற அக்கறை அக்கட்சியில் தொண்டர்களிடம் மட்டுமே வெளிப்படுகிறது.

படங்கள்: ராம்குமார்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT