ADVERTISEMENT

‘எங்கே எங்கள் தலைவன்’ - தவிக்கும் புதுப்பள்ளி மக்கள்

03:21 PM Jul 18, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

வாக்கு அரசியலில் வந்த பிறகு தலைவர்களும், நிர்வாகிகளும் தோல்விகளைச் சந்திப்பது வழக்கம். ஆனால், இதில் விதிவிலக்காக சில தலைவர்களும், நிர்வாகிகளும் வாக்கு அரசியலில் என்றுமே தோற்பதில்லை. அப்படி தோற்காத ஒரு தலைவர் தான் கேரளா காங்கிரஸ் முன்னாள் முதல்வரும், காங்கிரஸின் மூத்தத் தலைவருமான உம்மன் சாண்டி.

தனது அரசியல் வரலாற்றில் தோல்வியே கண்டிறாத உம்மன் சாண்டி, தனது சொந்த தொகுதியான புதுப்பள்ளி மக்களுக்கு அண்ணனாக, மகனாக திகழ்ந்துள்ளார். இன்று தங்கள் உறவை இழந்தது போல், புதுப்பள்ளி மக்கள் கண்ணீரில் பெருக தங்களது இரங்கலை தெரிவித்துவருகின்றனர்.

கேரள மாநிலம், கோட்டயத்தில் வசித்து வந்த கே.ஓ.சாண்டி - பேபி சாண்டி தம்பதியருக்கு 1943 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பிறந்த உம்மன் சாண்டி, பள்ளியில் படிக்கும் போதே தீவிர அரசியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். அதன் விளைவாக அவரை காங்கிரஸில் இணைத்து கொண்டார். அதன் பிறகு தீவிரமாக செயல்பட்டு வந்த உம்மன் சாண்டிக்கு உழைப்பின் வெகுமதியாக காங்கிரஸின் மாணவர் அமைப்பான கே.எஸ்.யுவின் கோட்டயம் மாவட்டச் செயலாளர் பதவி தேடி வந்தது. கட்சிக்காக அவரின் உழைப்பும், அவரின் அரசியல் தீவிரமும் மெல்ல மெல்ல காங்கிரஸ் தலைமைக்குத் தெரியவர 1965 ல் மாநிலச் செயலாளராகவும், 1967 ல் மாநிலத் தலைவராகவும் மாணவர் அமைப்பின் பதவிகள் கொடுக்கப்பட்டன.

இப்படி, தனது அரசியல் வாழ்க்கையை மெல்ல மெல்ல மெருகேற்றிய உம்மன் சாண்டி, 1969 ஆம் ஆண்டு கேரளா காங்கிரஸின் இளைஞர் அணி மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1970ம் ஆண்டு கேரளா சட்டமன்றத்திற்கு தேர்தல் வர, கட்சிக்காக அதிதீவிரமாக உழைத்துக்கொண்டிருந்த 27 வயதான உம்மன் சாண்டிக்கு அந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. புதுப்பள்ளியில் காங்கிரஸ் வேட்பாளர் உம்மன் சாண்டி என காங்கிரஸால் அறிவிப்பு வெளியானது.

ஆனால் இங்குதான் உம்மன் சாண்டிக்கு மிகப்பெரிய சவால் இருந்தது. அதற்கு காரணமும் இல்லாமல் இல்லை. உம்மன் சாண்டிக்கு ஒதுக்கப்பட்ட புதுப்பள்ளி தொகுதியில் கேரளாவின் மற்றொரு வலுவான கட்சியான சி.பி.எம் வேட்பாளர் ஈ.எம்.ஜார்ஜ் நிறுத்தப்பட்டார். ஏற்கனவே அந்தத் தொகுதி எம்.எல்.ஏ.வான இ.எம். ஜார்ஜுக்கு அங்கு ஏகபோக செல்வாக்கு இருந்தது. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட அடுத்த கணமே புதுப்பள்ளி ஈ.எம்.ஜார்ஜுகுத்தான் என்பது சி.பி.எம் கட்சிகாரர்களை தாண்டி காங்கிரஸ் தலைவர்களின் எண்ணமுமாக இருந்தது.

ஒரு கட்டத்தில் காங்கிரஸ் தலைவர்கள், ‘நீ இரண்டாம் இடம் பிடித்தாலே நாம் வெற்றிபெற்று விட்டோம் என்று கருதிக் கொள்ளலாம்’ என்று உம்மன் சாண்டியிடம் கூறினர். ஆனால் அதையெல்லம் கிஞ்சித்தும் பொருட்படுத்தாத 27 வயது இளைஞனான உம்மன் சாண்டி களத்தில் இறங்கி தீவிரமாக செயல்பட்டார்.

விளைவு வெறும் 27 வயது இளைஞன் காங்கிரஸுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த ஈ.எம் ஜார்ஜை 7,288 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது சட்ட சபை பயணத்திற்கு பிள்ளையார் சுழி போட்டார். அன்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள், இது அடுத்த அரை நூற்றாண்டு காலத்திற்கான அஸ்திவாரம் என்று. ஆம் அன்று தொடங்கிய புதுப்பள்ளி தொகுதி தேர்தல் வெற்றி அடுத்த நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் உம்மன் சாண்டியை தனது பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து சட்ட சபைக்கு அனுப்பி வைத்தனர் அத்தொகுதி மக்கள்.

1977 ஆம் ஆண்டு கருணாகரன் முதல்வராக இருந்த நேரத்தில் தொழில்துறை அமைச்சராக இருந்த உம்மன்சாண்டி, 1982 ஆம் ஆண்டு உள்துறை அமைச்சராகவும், 1991 ஆம் ஆண்டு நிதி அமைச்சராகவும் இருந்தார். அதன்பிறகு 2004 ஆம் ஆண்டு கேரள முதல்வராக இருந்த ஏ.கே.ஆன்றணி தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து கேரள முதல்வரானார் உம்மன் சாண்டி. பின்பு 2006 முதல் 2011 வரை கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவராக இருந்த உம்மன் சாண்டி அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்டு மீண்டும் முதல்வரானார்.


தொகுதி மக்களிடம் அன்பானவர், எளிமையான மனிதர், பழகுவதற்கு இனிமையானவர் என்றெல்லாம் புதுப்பள்ளி மக்கள் சொல்கின்றனர். அதற்கு ஒரு உதரணமாக, திருவனந்தபுரத்தில் இருக்கும் எம்.எல்.ஏ. விடுதியின் 38வது அறையை சொல்கின்றனர். அது உம்மன் சாண்டியின் அறை. தன்னை காணவரும் தனது தொகுதி மக்கள், சந்திப்பு முடிந்து இரவு நேரங்களில் அந்த அறையில் தங்கிவிட்டு செல்வார்களாம். அதுமட்டுமில்லாமல் கூடவே உம்மன் சாண்டியும் தங்குவாராம். தொகுதி மக்கள் மீது அலாதி அன்பு கொண்ட உம்மன் சாண்டி, அந்த அறையைத் தனது தொகுதி மக்கள் எந்த நேரமும் உபயோகித்துக்கொள்ள முழு சுதந்திரத்தையும் உரிமையும் கொடுத்திருந்தார் என்கின்றனர் கேரளா காங்கிரஸார்.

தனது தொகுதி மக்கள் மனு கொடுக்க வரும்போது, தனது நண்பர்களைப் போல் ஆரக்கட்டித் தழுவி அவர்களிடம் நலம் விசாரித்து ஒரு சிறு முகச்சுளிப்பும் இன்றி மனுக்களை வாங்குபவராக அவர் இருந்தார் என்கின்றனர் அத்தொகுதி வாசிகள். அதேபோல், பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து, அந்தப் பணிகளில் எப்போதும் தனது அக்கறையை செலுத்தும் நபராக அவர் இருந்துள்ளார். கண்ணூர் சர்வதேச விமான நிலையம், மெட்ரோ ரயில், விழுஞ்சம் துறைமுகம் என கேரள மாநிலத்தின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனதில் உம்மன் சாண்டியின் பங்கு மிக முக்கியமானது. அதேபோல், தான் முதல்வராக இருந்த காலத்தில் ஸ்மாட் சிட்டி திட்டத்தில் அதிக கவனம் செலுத்தியிருக்கிறார்.

இப்படி தனது அரை நூற்றாண்டுக் கால அரசியலில் அனைவருக்கும் பிடித்தமான தலைவராக இருந்த உம்மன் சாண்டியை சர்ச்சைக்கும் பிடித்துப் போயிருந்தது. அவர் முதல்வராக இருந்த 2011-2016 காலக் கட்டங்களில் சோலார் எரிசக்தி நிறுவனம் மோசடி ஊழல் பெரும் அவருக்கு பெரும் நெருக்கடியாக இருந்தது. அந்தச் சமயத்தில் சோலார் பேனல் மோசடி வழக்கில் சிக்கிய சரிதா நாயர், அன்றைய முதல்வர் உம்மன் சாண்டி உள்ளிட்டோர் மீது பாலியல் புகார்கள் கூறி பரபரப்பைக் கிளப்பினார்.

சர்ச்சைகள், புகார்கள், வழக்குகள் என இருந்தபோதும், ஒரே தொகுதியில் தொடர்ந்து 12 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட உம்மன் சாண்டி, தனது தொகுதி மக்களுக்கு அளவு கடந்து செய்ததாலே, இப்படியான வெற்றியை மக்கள் அவருக்கு கொடுத்திருப்பார்கள் என்றும் நாம் கருதிக்கொள்ளலாம். 12 முறையாக உம்மன் சாண்டியை விட்டுக்கொடுக்காத மக்களைவிட்டு இன்று உம்மன் சாண்டி பிரிந்திருக்கும் நிலையில், அடுத்த தங்கள் தொகுதிக்கான பிரதிநிதியை புதுப்பள்ளி வாசிகள் யாரைத் தேர்ந்தெடுப்பார்கள் என அரசியல் ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி இருக்கும்போது, ‘எங்கே என் தலைவன்’ என அந்தத் தொகுதி வாசிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT