ADVERTISEMENT

ஞாபகம் வருதே!!! ஞாபகம் வருதே!!! பழைய சோறு... பச்சை மிளகாய்... ஞாபகம் வருதே!!!

08:05 AM Apr 25, 2020 | rajavel


ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும். வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும் என்பது பழமொழி. என்னதான் ஃபாஸ்ட் புட் கலாச்சாரத்துக்கு மனிதன் மாறிவிட்டாலும் கரோனா போன்ற பேரழிவுநோய் உலகத்தையே ஆட்டிப்படைக்கும் போது, ஒவ்வொருவருக்கும் தம் பழைய கலாச்சாரமும் அதன் நன்மைகளும் நினைவுக்கு வந்துவிடுகின்றன. மஞ்சள், வேப்பிலை வரிசையில் தற்போது பழைய சோறுக்கும் மவுசு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

பச்சை மிளகாயினை நடுப்பக்கத்தில் சரியாக வகுந்து... அதாவது கத்தியால் கீறி கல் உப்பை வைத்து விளக்கெண்ணெயில வறுத்து பழைய சோறுக்குத் தொட்டுக்கிட்டா…அந்த சுவைக்கு நிகருண்டா... அதுவல்லவோ அமிர்தம். சொல் லும்போதே… நாவில் எச்சில் ஊறுகிறதல்லவா!

ADVERTISEMENT


கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் அரிசிச் சோறு கிடைப்பதே அரிது. கம்பு, சோளம் போன்ற சிறுதானியங்கள் தான் உணவு. கூழும் கஞ்சியும்தான் ஆகாரம். இன்றைய தலைமுறை "பாஸ்ட் புட்'ங்கிற பெயர்ல கண்டத எல்லாம் வாங்கித் தின்று பல நோய்களை வரவைத்துக் கொண்டிருக்கிறது. இன்றைக்கு அரிசிக்கு மாற்றாய் எதற்கெடுத்தாலும் கோதுமையைப் பயன்படுத்துகிறார்கள். முந்தின தலைமுறை கம்பு, கேழ்வரகு, குதிரைவாலி, சாமை, தினைனு விதவிதமாகச் சாப்பிட்டாங்க. இதெல்லாம் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்கள்.

பழச மறக்காதனு முன்னோர்கள் சொன்னது பழைய சோத்துக்கும் சேர்த்துதான்யா.... பழையசோறு சாப்பிட்டால் என்ன நன்மைனு இப்ப உள்ள புள்ளைங்க நினைக்கலாம். மூலாதாரத்தில் சூடு அதிகமாக இருந்தால் அதனைத் தணிக்கும் மாமருந்து பழைய சோறு. பழைய சோறில் வைட்டமின் பி உள்ளது. சுடுசோறில் உள்ளதைவிடவும் பழைய சோறில் இரும்புச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. வயிற்றுப் புண் சீராக்கும். ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்… இப்படிப் பழைய சோறின் நன்மைகளைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம்.

இத்தனை நன்மைகள் செய்யும் உணவை அமிர்தம் என்றே சொல்லலாம். இந்த அமிர்தத்தின் பயன்பாட்டை இந்தக் கரோனா விடுப்பில் பெற்றோர்களும் குழந்தைகளும் திரும்பக் கண்டடைந்திருக்கிறார்கள்.

உணவே மருந்துன்னு நம் முன்னோர்கள் சொன்னது இப்போதாவது ஞாபகத்துக்கு வந்திருப்பது நல்ல விஷயமல்லவா! ஆற்று நீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். ஊற்று நீர் கபம் போக்கும். இது நம்ம முன்னோர் வாக்கு. இவை யனைத்தையும் ஒருசேரப் (வாதம் பித்தம் கபம்) போக்கும் மகிமையுடையது பழைய சோறு.

பழைய சோறு எப்படிப் பண்றதுனு யூடியூப் போய்த் தேடவேண்டாம். ரொம்ப ஈஸி. வடித்த சாதம் மிஞ்சியவுடன் இரவு மண்பானையில் தண்ணீர் விட்டு ஊறவிடவேண்டும். அதிகாலையில் பழைய சோறு தயார். அதில் கொஞ்சம் மோர் அல்லது தயிருடன் உப்புக் கலந்து தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், வறுத்த மிளகாய், கொத்தவரங்காய் ஆகியவை பயன்படுத்தலாம். இதனைத் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் பளபளக்கும். நீண்டநாள் பாஃஸ்ட்புட் துரிதஉணவு சாப்பிட்டு உடல்கூறு பழுதடைந்த நிலையை மாற்றும்.

“பழைய காலங்களில் கிராமங்களில் காலையில் எழுந்ததும் பச்சை மிளகாய் கடித்துக்கொண்டு பழைய சோறு சாப்பிடுவார்கள். சாப்பிட்ட பிறகு அதிலுள்ள நீராகாரத்தைக் குடிக்கும்போது நமது வயிறு ஜில்லென்று குளிர்ந்து போகும்’’ அந்தச் சுகமே சுகம் என பழைய சோறுக்கு பரணி பாடுகிறார் எம்.குச்சிபாளையம் ஜெயலட்சுமி. அவரது ஊர் மக்கள் இப்போது அதை விரும்பிச் சாப்பிட ஆரம்பித்துள்ளனர்.



அதேபோல், "கிராமங்களில் கிடைக்கும் முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, மணத்தக்காளி கீரை, பிரண்டை, வேப்பம்பூ, வாதநாராயண தழை ஆகியவற்றை பழைய காலங்களில் வாழ்ந்த நமது பாட்டன் பூட்டன் காலத்து பாட்டிமார்கள் சமைத்துக் கொடுத்தார்கள். அதனால் அப்போதைய ஆண்கள் எல்லோரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் திடகாத்திரமாகவும் இருந்தார்கள். இப்போதான் எல்லாம் போச்சு'' என்கிறார் ஓய்வுபெற்ற ஆசிரியர் பெண்ணாடம் தங்கவீரப்பன்.

தமிழகத்தில் சில பெரிய ஹோட்டல் களி மண்பானையில் மோர் கலந்த பழைய சோறு விற்பனை சக்கைப் போடு போடுகிறது. அமெரிக்காவிலும்கூட சில பிரத்யேக ஹோட்டல்களில் பழைய சோறு விற்கப்படுகிறது. என்ன பில் மட்டும் டாலர்களில் வரும்.


நம்ம பழைய சோறு பெருமையை அமெரிக்கர்கள் சொல்லித்தான் புரிய வேண்டுமா? அடிக்கும் வெயிலுக்கு யாரும் சொல்லாமலே காலை உணவில் பழைய சோறுக்கு முதலிடம் கொடுத்தால் ஆரோக்கியத்துக்கு ஆரோக்கியமும் ஆச்சு. உச்சந்தலை சூடும் உடனே இறங்கிப் போகும்.

"அந்த கஞ்சிக் கலயத்தை வஞ்சி சுமக்கையிலே...'னு’ பொண்டாட்டி முன்னால ரெண்டொரு முறை பாடுங்க... புரிஞ்சுகிட்டு மறுநாள் காலையில கஞ்சிக் கலயத்தை கொண்டுவந்து வைக்கிறாங்களா… இல்லையானு மட்டும் பாருங்க!

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT