ADVERTISEMENT

''முடிஞ்சா என்னை மிரட்டி பாருங்கள்... எங்க பிள்ளைகளுக்கு மருத்துவக் கனவே இருக்கக் கூடாதா?''-சீமான் பேட்டி! 

07:19 PM Sep 16, 2020 | kalaimohan

ADVERTISEMENT


நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் சென்னையில் அவரது இல்லத்தின் முன்பாக போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சீமான் பேசுகையில்,

ADVERTISEMENT


எங்களுக்கு அனுப்பும் கோப்புகள், கடிதங்களைக் கூட இந்தி, ஆங்கிலத்தில் அனுப்புகிறீர்கள். .தமிழில் அனுப்புங்கள் எனக் கேட்டால் நேரம் இல்லை என்கிறீர்கள். எங்களிடம் வரி வாங்குவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறது. பத்து வரி கடிதத்தை எழுதுவதற்கு நேரம் இல்லையா? பஞ்சாபில் இந்தி எழுத்துகளை அழிக்கிறார்கள், கர்நாடகாவில் தொடர்வண்டி நிலையத்தில் இந்தி எழுத்துகளை உடைக்கிறார்கள். இதையே நாங்கள் உடைத்தால் பாசிசம், அவர்கள் உடைத்தால் நேஷனலிசம் என்பீர்கள்.


மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக நேரடியாக முக்கிய நபர்கள் பிரதமரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார்கள். இதில் தமிழக அரசின் செயல்பாடு எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு?


மத்திய அரசின் செயல்பாடு தமிழக அரசுக்கு ஆதரவாக இருக்காது. காங்கிரசும், பாரதிய ஜனதாவும் தமிழக அரசிற்கு ஆதரவாகப் பேசமாட்டார்கள். பா.ஜ.கவின் தயவில்தான் இந்த ஆட்சியை இவர்கள் நீட்டித்திருகிறார்கள். கர்நாடகாவில் காங்கிரஸ் அல்லது பா.ஜ.க என இந்த இரண்டு கட்சிகளும்தான் ஆளும் கட்சியாகவும், எதிர்க் கட்சியாகவும் இருக்கிறது. தற்போது பா.ஜ.க ஆளும் கட்சியாக இருக்கிறது. எதிர்க் கட்சியாக காங்கிரஸ் இருக்கிறது. எனவே ஆளும் உயரத்தில் இருக்கின்ற தகுதியை நாம் இழந்துவிடக் கூடாது என்று கர்நாடக மக்களுக்கு ஆதரவாக எது இருக்கிறதோ அதைத்தான் மத்திய அரசு செய்யும்.


இங்கு இருக்கின்ற பா.ஜ.க, காங்கிரஸ் போன்ற கட்சிகள் காவிரி உரிமைக்கு எங்களுடன் போராடச் சொல்லுங்களேன். அதேபோல் கேரளா முல்லைப் பெரியாறு அணை பிரச்சனைக்கு என்னுடன் சேர்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளைப் போராடச் சொல்லுங்கள். போராட மாட்டார்கள். ஏனெனில் காங்கிரஸ்க்கு ஆதரவாக நின்றால், கம்யூனிஸ்ட் வென்றுவிடும். கம்யூனிஸ்ட் நின்றால் காங்கிரஸ் வென்றுவிடும். அந்தந்த மாநில மக்களின் உணர்வுக்கு ஏற்ப அவர்கள் அரசியல் செய்வார்கள். ஆனால் எங்களை இந்திய உணர்வோடு இருக்கச் சொல்வார்கள் இங்குதான் இருக்கிறது ஆபத்து.

16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள் என்றால், நீட் தேர்வை எழுதாமல் நிராகரிப்போம் என்று மாணவர்கள் வெளியே வரமுடியாது. வழியே இல்லாமல்தான் நம்முடைய பிள்ளைகள் அந்தத் தேர்வை எழுதுகிறார்கள். அந்த நிலை கொடும் சூழல்தான். 24 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்ட, மருத்துவக் கட்டமைப்புகளைக் கொண்ட இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் தமிழகம் தான். இந்த மக்களின் நிதியில், இந்த மக்களின் தேவைக்காக கட்டமைக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமாக இடங்களை எடுத்துக் கொண்டால், கல்லூரியிலும் தமிழ் மாணவர்கள் 100 பேர் தான் இருப்பார்கள். அதிகபட்சம் வட இந்திய மாணவர்கள் தான் இருப்பார்கள். அவர்கள் இங்கே மருத்துவம் படித்துவிட்டு இந்த மாநில மக்களுக்கு தான் மருத்துவம் பார்ப்பார்களா? அதற்காகத்தான் இதைக் கேட்கிறோம்.


மாணவர்கள் நீட் தேர்வு எழுதுவதைப் பற்றி பேசுகையில், பிரியாணி தான் சாப்பிட ஆசை இருக்கு, ஆனால் கூழுதான் இருக்கிறது என்றால் கூழ் குடித்துத் தான் உயிர் வாழ நினைப்பீர்கள். கரோனாவோடு வாழப் பழகிக்கொள்ள வேண்டும் என மத்திய அரசு சொல்லிவிட்டது. ஆனாலும் வழியில்லாமல் நாம் முகமூடி அணிகிறோம், சனிடைசர், சோப் போட்டுக் கொண்டு வெளியே வருகிறோம். மீறி மக்கள் வெளியே வருகிறார்கள் என்றால் வேறு வழியில்லை. அந்த நிலைக்குத் தான் மாணவர்களும் தள்ளப்பட்டிருக்கிறார்கள். அப்படித்தான் இதைப் பார்க்க வேண்டும். எல்லா மாநிலத்திலும் நீட் தேர்வை ஆதரிக்கிறார்கள் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தியாவிலேயே இந்தியை எதிர்த்த முதல் மாநிலம் தமிழ்நாடு தான். எல்லா அநீதியையும் முதலிலேயே எதிர்த்த இந்திய நிலங்களிலேயே முதல் இடம் தமிழகம்தான்.


சூர்யாவிற்கு தமிழ்நாடு மட்டுமல்ல, எல்லாருமே ஆதரவாக நிற்க வேண்டும். அவருடைய கருத்து ஏற்புடையது. அவர் அவருடைய மனதில் இருந்து பேசுகிறார். எல்லோருடைய உணர்வையும் பேசுகிறார். அவர் புகழ்பெற்ற திரைக் கலைஞர் என்பதால் அவரை மிரட்டுகிறார்கள். இதையேதான் நானும் சொல்கிறேன். என்னை ஒரு தடவை மிரட்டி பாருங்களேன். அவருக்கு முன்னாடியிலிருந்தே நான் பேசி வருகிறேன். முடிஞ்சா என்னை மிரட்டி பாருங்கள்.

'அகரம்' அறக்கட்டளையில் இந்த நீட் வந்ததிலிருந்து ஒரு பிள்ளைகள், கூட நீட் தேர்வில் வெற்றிபெற வைக்க முடியவில்லை எனக் கூறுகிறார். அவரிடம் படிக்கும் பிள்ளைகள் யார்? படிக்க வசதியற்ற, ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிள்ளைகள். எங்கள் பிள்ளைகளுக்கு மருத்துவக் கனவே இருக்கக் கூடாதா? எங்களுக்கெல்லாம் அதுபோன்ற கனவே வரக்கூடாதா? அதேபோல் தமிழர்கள் முதல்வர்களாக வேண்டுமென்று ஆசைப்பட்டால் அவர்களை நக்கலடித்து, கேவலப்படுத்தி பார்ப்பது. அதேபோல் எங்கள் பிள்ளைகள் மருத்துவர்களாக வேண்டும் என்ற ஆசையே இருக்கக் கூடாதா? எனவே சூர்யாவின் கருத்து நியாயமானது. அவரை ஆதரித்த நீதிபதிகளுக்கு நன்றி. எதிர்த்த நீதிபதிகள் கருத்தை மாற்றிக் கொள்ளுங்கள்.


இந்த நாட்டை ஆளுகிறவர்கள், இந்தச் சட்டங்களை வகுக்கிறவர்கள் எந்தக் கல்லூரியில் படித்தார்கள் என்பது யாருக்குமே தெரியாது. எந்தத் தேர்வு எழுதினார்கள் எனவும், யாருக்கும் தெரியாது. நாம் வேண்டுமானால் ஒன்று செய்யலாம் இனி சட்டமன்ற உறுப்பினர், பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் என எல்லோருக்கும் ஒரு நுழைவுத்தேர்வு அல்லது நீட் மாதிரி ஒரு தேர்வு எழுதவிட்டால் நாட்டில் மிகத் தகுதியான அமைச்சர்கள் உருவாவார்கள் என நான் நினைக்கிறேன். அதில் முதல் தேர்வு அய்யா மோடி எழுதவேண்டும் அதன்பிறகு கல்வி அமைச்சர் எழுத வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT