NTK Leader Seeman condemn TamilNadu Governor in NEET Matter

தமிழக அரசு நிறைவேற்றிய நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கடந்த 7 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்தஆளுநர் ரவி, நேற்றுஅந்த சட்ட மசோதாவை தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்தச் செயலுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நீட் விலக்கு மசோதாவைத் திருப்பி அனுப்பிய விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Advertisment

அந்த அறிக்கையில் அவர், “நீட் தேர்விலிருந்து விலக்கு தரக்கோரி தமிழக அரசு நிறைவேற்றிய சட்டவரைவுக்கு ஒப்புதல் தரமறுத்து திருப்பியனுப்பிய தமிழக ஆளுநரின் செயல்பாடு பேரதிர்ச்சியளிக்கிறது. எட்டுக்கோடி தமிழர்களின் ஒற்றைக்கோரிக்கையாக தமிழகச் சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட நீட் தேர்வுக்கு விலக்குகோரும் சட்டவரைவை அங்கீகரிக்க மறுத்த ஆளுநரின் முடிவு பெரும் ஜனநாயகப் படுகொலையாகும். மக்களால் தேர்வு செய்யப்பட்ட அமைச்சரவையின் முடிவுக்கு மதிப்பளிக்க மறுப்பது கடும் கண்டனத்திற்குரியது.

Advertisment

மாநிலத் தன்னாட்சிக்கும், நாட்டின் பன்முகத் தன்மைக்கும், இந்தியாவின் அரசியலமைப்புச் சாசனத்திற்கும் எதிரான நீட் எனும் ஒற்றைத் தகுதித் தேர்விலிருந்து விலக்குகோரி, ஒட்டுமொத்த தமிழகமும் ஒற்றைப் பெருங்குரலெடுத்து போராடி வரும் நிலையில், ஆளுநரின் அறிவிப்பு தமிழர்களின் தன்மானத்தையும், இனமானத்தையும் உரசிப்பார்ப்பதாக உள்ளது. ஆரிய மேலாதிக்கமும், அதிகாரத்திமிரும் கொண்டு தமிழர்கள் மீது கொடும் வன்மம் பாராட்டும் பாசிச பாஜகவின் இக்கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு இனமானத் தமிழர்கள் தேர்தல் களங்களில் உறுதியாக பாடம் புகட்டுவார்கள் என்றுரைத்து, மொழிப்போருக்கும், ஏறு தழுவுதலெனும் பண்பாட்டு உரிமைக்குமாக வீதிக்கு வந்து போராடி சாதித்துக் காட்டிய தமிழ்ப்பேரினம், நீட் தேர்வைத் தவிர்க்கக் கோரும் கல்வியுரிமைக்காகவும் அணிதிரள வேண்டுமென தமிழ் இளையோர் கூட்டத்திற்கு அறைகூவல் விடுக்கிறேன். மேலும், எழுவர் விடுதலை தொடர்பான கோப்புகளைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி, தமிழக அமைச்சரவையின் முடிவைக் கேலிக்கூத்தாக்கிய ஆளுநரின் நடவடிக்கைக்கு எவ்விதக் காத்திரமான எதிர்வினையையும் ஆற்றாது ஒத்திசைந்து சென்றதன் விளைவே, இதுபோன்ற அரசியல் சட்டத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஆளுநர் ஈடுபடக்காரணமாக அமைகிறது என்பதை மாநில அரசு இத்தருணத்தில் உணர வேண்டியது அவசியமாகிறது.

சட்டமன்றத்தில் இயற்றப்படும் சட்டவரைவுக்கு ஆளுநர் ஒப்புதல்தர மறுத்துத் திருப்பியனுப்பும் பட்சத்தில், இரண்டாவது முறையாக சட்டவரைவை இயற்றும்போது அதனை நிராகரித்து திருப்பியனுப்ப முடியாது எனும் சட்டவிதியைச் சாதகமாக்க, மீண்டும் விலக்குகோரி தமிழகச் சட்டமன்றத்தில் சட்டவரைவை இயற்ற வேண்டுமெனவும், நீட் தேர்வு என்பதை மாணவர்களின் கல்வி தொடர்பான சிக்கல் எனச் சுருங்கப்பாராது, மாநிலத்தின் இறையாண்மைக்கு விடப்பட்ட சவாலெனக் கருதி, நாடு தழுவிய அளவில் பெரும் அணிச் சேர்க்கையை செய்து, ஒன்றிய அரசுக்கு அரசியல் நெருக்கடியையும், அழுத்தத்தையும் தந்து, நீட் தேர்வு விலக்கைச் சாத்தியப்படுத்த வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.