ADVERTISEMENT

நக்கீரனில் வெளியான செய்தி; உடனடியாக செயல்பட்ட அரசு நிர்வாகம்! 

12:58 PM Jun 09, 2023 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

“தாய், தந்தை யாருமில்லை; மின்சாரம் இல்லை; அடையாள அட்டைகள் ஏதும் இல்லை; அதனால் உதவித் தொகையும் இல்லை. கடும் வெயிலின் தாக்கத்துக்கு இடையே மின்சாரமில்லா வீட்டில் அசைவற்றுக் கிடக்கும் மாற்றுத்திறனாளி சிறுவனை 2 மூதாட்டிகளே தூக்கிச் சுமக்கிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் சற்று மனமிறங்கினால் மின்சாரமும், உதவித் தொகையும் கிடைக்கும். அதற்கு உதவ வேண்டும்” என்று சமூக ஆர்வலரான நகரம் சிகா.லெனின் நம்மிடம் கூறினார்.

தனி ஆளாக அலைந்தால், சான்றுகள் வாங்கி நலத்திட்ட உதவிகளைப் பெற பல மாதங்களாகும். அதனால் நக்கீரன் இணையத்தில் கடந்த புதன்கிழமை இச்செய்தியை வெளியிட்டோம்.

“புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வடக்கு சரபோஜி தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - சுந்தராம்பாள் தம்பதி. இவர்களின் மகள் வயிற்றுப் பேரன் தான் மணிகண்டன். பிறந்த சில வருடங்களில் மணிகண்டனின் உடல்நிலை படிப்படியாக பின்னடைவாகி, படுத்த படுக்கையில் கிடக்கும் மாற்றுத் திறனாளியாகிவிட்டான். தற்போது மணிகண்டனின் பெற்றோர் இல்லாத நிலையில், தாத்தா செல்வராஜும் சில ஆண்டுகளுக்கு முன் காலமாக, படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது பேரனை, பர்மா காலனியிலுள்ள வீட்டில் சுந்தராம்பாளும் அவரது சகோதரியும்தான் கவனித்து வருகிறார்கள். பாட்டி சுந்தராம்பாள் கூலி வேலைக்குச் சென்றுவர, அவரது சகோதரி இந்த மாற்றுத் திறனாளி பேரனைக் கவனித்துக் கொள்கிறார்.

மின்சாரமில்லாத வீட்டிற்குள் வெக்கையில் தவிக்கும் சிறுவனுக்கு இரு மூதாட்டிகளும் மாற்றி மாற்றி விசிறிக்கொண்டே இருக்கிறார்கள். மின் இணைப்பு பெற்றுத் தருவதாக சிலர் அந்த மூதாட்டிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியிருக்கிறார்கள். அதேபோல், பேரனுக்கு ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் ஏதுமில்லாததால், மாற்றுத் திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகையும் கிடைக்க வழியில்லை.

“ஆதார் இருந்தாத்தான் மாற்றுத் திறனாளி சான்று கிடைக்குமாம். அந்த சான்று இருந்தாத்தான் உதவித் தொகை கொடுப்பாங்களாம். நாங்க யாருகிட்ட போய் இதெல்லாம் வாங்குறது? நாங்க இருக்கிற வரைக்கும் கூலி வேலையில் எனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து பேரனைப் பாதுகாப்போம். வெயில் காலத்தில் கரண்டில்லாம ரொம்ப சிரமப்படுறான். காத்தாடிக்கு வழியில்லாததால விசிறிவிட்டுக்கிட்டே தான் இருக்கோம். அதிகாரிங்க மனசு வச்சால் மணிகண்டனுக்காக கரன்ட் கொடுத்து, ஆதார் எடுத்து மாற்றுத் திறனாளி சான்று கொடுத்து, உதவித்தொகை கிடைக்கச் செய்தால் புண்ணியமா போகும். இவனை தூக்கிக்கிட்டு வெளியூருல அலைஞ்சு சான்று வாங்க எங்க உடம்புல சக்தியும் இல்ல. கார்ல போக பணமும் இல்ல” என்றார் பாட்டி சுந்தரம்பாள் கண்ணீரோடு.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், இந்த மாற்றுத் திறனாளி சிறுவனும் அவனுக்காக 2 மூதாட்டிகளும் படும் வேதனையை நினைத்து சிறப்பு நடவடிக்கை எடுத்தால் நல்லது. அதிகாரிகள் மனது வைப்பார்கள் என்று நம்புவோம் என நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

செய்தி வெளியான சில நிமிடங்களில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தகவல் அனுப்பினார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கவனத்திற்கும் செய்தி சென்றிருந்த நிலையில், சில மணி நேரத்திலேயே நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதை கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி உறுதி செய்தார். மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முதற்கட்டமாக சக்கர நாற்காலி வழங்கியது.

அடுத்த நாள் சிறுவனை ஆலங்குடி அழைத்துச் சென்று ஆதார், மாற்றுத்திறனாளி சான்றுகள் பெற கோட்டாட்சியர் முருகேசன் காத்திருக்க... வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருடன் சமூக ஆர்வலர் லெனின், சிறுவனையும் அவனது பாட்டியையும் அழைத்துச் சென்றார். சில மணி நேரத்திலேயே கோட்டாட்சியர் மேற்பார்வையில் பயிற்சி துணை ஆட்சியர் ஜெயஸ்ரீ முன்னிலையில் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் அத்தனை பணிகளும் முடிவடைந்தது.

அடுத்து, சிறுவனின் வீட்டிற்கு கோட்டாட்சியர் கிளம்பிச் சென்று வீட்டைப் பார்த்ததும், “உடனே மின்சார இணைப்பு கொடுக்க வேண்டும், இப்பவே ஆன்லைனில் பதிவு செய்து மின் இணைப்பு பெற வேண்டும்” என்று சொன்னதுடன், இணைய சேவை மையத்திற்கே சென்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார். மூதாட்டி சுந்தராம்பாளின் ஆதாருக்கான செல் நம்பர் மாறியுள்ளதால் ஓ.டி.பி. வராமல் போக, உடனே ஆதாருக்கான செல் நம்பரை மாற்றி நடவடிக்கை எடுத்தார். மின் இணைப்புகளும் கிடைத்துவிட்டது.

சுந்தராம்பாளுக்கு மட்டுமின்றி அந்த பர்மா காலனிக்கே பட்டா பெறவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த கோட்டாட்சியர் முருகேசன், சிறுவனின் குடும்பத்திற்கான தேவைகள் கிடைத்துவிட்டதா என்பது பற்றி தொடர்ந்து கண்காணித்தும் வருகிறார். ஒவ்வொரு நகர்வுக்கும் லெனின் சலிப்பின்றி செயல்பட்டு வருகிறார். நக்கீரன் இணையச் செய்தி எதிரொலியாக மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT