
தமிழகத்தில் நீட்தேர்வில் தேர்ச்சி பெற்று 7.5% உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவக்கல்லூரிகளில் படிக்க புதுக்கோட்டை மாவட்டத்தில் மட்டும் 34 மாணவ மாணவிகள் தேர்வாகி மாநிலத்திலேயே இரண்டாமிடம் பிடித்துள்ளனர்.
மருத்துவம் படிக்க தேர்வாகி உள்ள அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் 34 பேரையும் அழைத்து மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு சீருடை மற்றும் மருத்துவ படிப்பிற்கான உபகரணங்கள் வழங்கி பாராட்டினார்.
கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியிலிருந்து 7 மாணவிகள் தேர்வாகி உள்ளனர். மாணவிகளையும் ஆசிரியர்கள், பெற்றோர்களையும் பாராட்டி பேசும் போது, “அரசு நலத்திட்டங்களால் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் சாதித்து வருகிறார்கள். இத்தனை மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்கச் செல்வது மாவட்ட நிர்வாகத்திற்கு பெருமையாக உள்ளது. இந்த பெருமையை பெற வைத்த ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்களைப் பாராட்டுகிறேன்” என்றார்.
நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் கருப்பசாமி, இலுப்பூர் கோட்டாட்சியர் தண்டாயுதபாணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாவட்ட மனநலத்திட்ட அலுவலர் கார்த்திக் தெய்வநாயகம் மற்றும் மனநலத்திட்ட அலுவலர்கள் மாணவ, மாணவிகளுக்கு நெகிழ்திறன் தன்னம்பிக்கை பயிற்சி அளிக்கப்பட்டது.