ADVERTISEMENT

"திருவாசகம் நூலுக்கு சோழ மன்னர்கள் செய்த மரியாதை" - தமிழ் வரலாறு கூறும் நாஞ்சில் சம்பத்!

01:46 PM Nov 13, 2021 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

மேடைப்பேச்சாளரும் மூத்த அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத், 'தமிழும் சமயமும்' என்ற தலைப்பில் நக்கீரனிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துவருகிறார். அந்தவகையில், திருவாசகம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

சமயத்தை மறந்து தமிழை சிந்திக்க முடியாது; தமிழை மறந்து சமயத்தை சிந்திக்க முடியாது. தமிழால் சமயம் வளர்ந்ததா, சமயத்தால் தமிழ் வளர்ந்ததா என்று சேலத்தில் நடைபெற்ற மார்கழி பெருவிழாவில் நான் விவாதமே நடத்தியுள்ளேன். சமயச்சாரியர்கள் என்று கருதப்படுபவர்கள் தமிழுக்கு நிறைய செய்துள்ளனர். ஏனென்றால் தமிழுக்கு அகம் என்றும் புறம் என்றும் இரண்டாக பகுத்த மரபு இருக்கிறது. இறைவன் மீது கொண்ட காதலால் நாம் எழுதுகிற எழுத்தும் பாடுகிற பாடலும் அந்த மரபிற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துவிடக்கூடாது என்று சிந்தித்து சமயச்சாரியார்கள் எழுதினார்கள். தன்னைக் காதலியாகவும் இறைவனை காதலனாகவும் எண்ணிக்கொண்டு எழுதிக்குவித்த இலக்கியங்கள் ஏராளம்.

கண்ணனை காதலித்து திருப்பாவையையும் நாச்சியார் திருமொழியையும் ஆண்டாள் எழுதினார். பெரியாழ்வார் பெற்ற மகள் கோதை கண்ணனைத் தவிர இன்னொருவனை திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று பாடுகிறாள். இதுதான் தமிழின் மரபு. அக இலக்கியங்களைப் புறக்கணித்துவிட்டு தமிழ் இலக்கியங்களை எண்ணிப்பார்க்கவே முடியாது. ஜி.யு.போப், மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகத்தை எலும்பை உருக்குகிற பாடல் எனக் குறிப்பிட்டார். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் தித்திக்கும்; தேன் சொட்டும். படிக்க படிக்க உள்ளத்தை உருக்கும். தெற்குச்சீமையில் உள்ள திருக்குற்றாலத்திற்கு வருகை தந்த மாணிக்கவாசகர், ஈசனைக் கண்குளிர காண்கிறார். அவரைப் பார்த்து உனக்கு என்ன வேண்டும் என இறைவன் கேட்கிறார்.

அதற்கு மாணிக்கவாசகர், "உற்றாரை யான் வேண்டேன் ஊர் வேண்டேன் பேர் வேண்டேன் கற்றாரை யான் வேண்டேன் கற்பனவும் இனி அமையும் குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா உன் குரை கழற்கே கற்றாவின் மனம் போலக் கசிந்து உருக வேண்டுவனே" என்பார். உறவினர் யாரும் வேண்டாம்; ஊர் வேண்டாம்; எந்தப் பெயரும் வேண்டாம்; கற்றவர்களும் வேண்டாம்; கன்று போட்ட பசுவிற்கு இருக்கும் ஈரமான இதயம் எனக்கு வேண்டும் எனப் பொருள் பதிந்துள்ள இப்பாடலை படிக்கும்போது எவருக்கும் நெஞ்சம் உருகிவிடும். மாணிக்கவாசகரின் இந்தப் பாடல் நூற்றாண்டுகளின் வரப்புகளைக் கடந்தும் பேசப்படுகிறது; சிந்திக்கப்படுகிறது.

மானுடப்பற்று கேள்விக்குறியாகியுள்ள இந்தச் சமூகத்தில், அறத்தின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கின்ற இந்தக் காலகட்டத்தில், மனிதாபிமானம் புதைந்து கொண்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில், மாணிக்கவாசகரின் ஒரு பாடலைப் படித்தாலே அந்தப் பாடல் நம் மனதில் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தும். இத்தகைய சிறப்புகள் உள்ளதால்தான் திருவாசகத்திற்கு உருகாதோர் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்று சொன்னார்கள். திருவாசகத்தை படித்து அருட்பிரகாச வள்ளலார் உருகினார். நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க என்று தொடங்கும் பாடலில் இருந்து திருவாசகத்தை முடிவுவரை உள்ள பாடல்கள், கல்லாக இருக்கும் நெஞ்சத்தை கனிய வைத்துவிடும்.

மதுரைக்கு பக்கத்தில் திருவாதவூர் என்ற திருத்தலத்தில் பிறந்த மாணிக்கவாசகர், பாண்டியபதியில் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தவர். திருப்பெருந்துறை சிவன் மீது தீராத காதல் கொண்டவர். மன்னன் குதிரை வாங்குவதற்காக கொடுத்த பணத்தை வைத்து திருப்பெருந்துறையில் கோவில் கட்டி குடமுழுக்கு நடத்தியவர். மாணிக்கவாசகர் எழுதிய திருவாசகம் திருத்தில்லை என்ற சிதம்பரத்தில்தான் அரங்கேற்றப்பட்டது. சோழநாட்டு மன்னர்கள் யானையின் மீது திருவாசகத்தை வைத்து ஊர்வலமாகக் கொண்டுவந்து மரியாதை செய்தார்கள். பூட்டப்பட்டு சிதிலமாகிக் கிடந்த சமய இலக்கியங்களுக்கு புத்துயிர் தந்ததில் சோழ மன்னர்கள் செய்த திருத்தொண்டு அளவிடற்கரியது. திருவாசகம்தான் தமிழின் தகுதியையும் உயரத்தையும் உலகத்திற்கு பறைசாற்றியது. தமிழ்ப்படித்து தமிழனாகவே வாழ்கிற நமக்கு தெரியாத திருவாசகத்தின் அருமை கடல்கடந்து வாழக்கூடிய ஆங்கிலேயனுக்கு புரிந்தது. அதனால்தான் திருவாசகத்தைப் படித்துவிட்டு அதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்தார் ஜி.யு.போப். திருவாசகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கு ஜி.யு.போப் எழுதிய முன்னுரையைப் படித்தால் திருவாசகம் எவ்வளவு உன்னதமானது என்பது நமக்குத் தெரியும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT