ADVERTISEMENT

அமெரிக்க மோடியும் இந்திய ட்ரம்ப்பும்!

01:15 PM Feb 24, 2020 | kirubahar@nakk…

“உள்நாட்டுப் பிரச்சனையை சமாளிக்க முடியாவிட்டால், எல்லா பிரச்சனைகளுக்கும் வெளிநாட்டினர்தான் காரணம் என்று சொல்லிவிடு. வெளிநாட்டினர் மீது உள்நாட்டு ஜனங்களுக்கு கோபம் வரும். பிரச்சனைகளில் இருந்து அவர்கள் கவனம் திரும்பிவிடும்”




சர்வாதிகாரி ஹிட்லரின் தந்திரம் இது. அவருடைய தந்திரத்தை ட்ரம்ப் கையிலெடுத்து மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்டன. அமெரிக்காவின் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கும், போதைப்பழக்கத்திற்கும் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா உள்ளிட்டவற்றிலிருந்து அமெரிக்காவுக்குள் குடியேறும் அகதிகள்தான் காரணம் என்றார் ட்ரம்ப்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இவர் அதிபரானவுடன், மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற அகதிகளை தடுத்து, அவர்களை ஒரு கேம்ப்பில் அடைத்து, சிறு குழந்தைகளை பிரித்து தனியாக அடைத்து கொடுமைப்படுத்தியது உலகம் முழுவதும் கடும் சர்ச்சையை உருவாக்கியது.

மெக்ஸிகோ அகதிகளை அடைத்து வைத்த முகாம்

அமெரிக்கா என்ற நாடே ஐரோப்பிய அகதிகளால் ஆனதுதான். பூர்வ குடிகளை கொடூரமாக கொன்று குவித்து குடியேறிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நாடுதான். இன்றுவரை அமெரிக்காவில் எந்த நாட்டினரும் எளிதில் குடியுரிமை பெறமுடியும் என்ற நிலை இருக்கிறது. ஆனால், ட்ரம்ப் ஜனாதிபதி ஆனவுடன், சிரியா உள்ளிட்ட 7 இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவு்குக வர தடை விதித்தார். மெக்சிகோ உள்ளிட்ட மத்திய அமெரிக்கர்களுக்கும் தடை விதித்தார்.



அதைக்காட்டிலும் மிகப்பெரிய கேலிக்கூத்து என்னவென்றால், மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 1900 கிலோமீட்டர் தொலைவுக்கு உயரமான சுவர் எழுப்பப் போவதாக அறிவித்தார். ஆனால், ட்ரம்ப்பின் இந்த அறிவிப்புக்கு அமெரிக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். சுமார் 45 ஆயிரம் கோடி டாலர்கள் செலவில் ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு சுவர் எழுப்பப் போவதாகவும் முதல்கட்டமாக 5 ஆயிரம் கோடி டாலர்கள் தேவை என்றும் ட்ரம்ப் விடுத்த கோரிக்கையை அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிராகரித்துவிட்டன. அமெரிக்கா எப்போதும்போல பன்முகத்தன்மையோடு இருப்பதையே விரும்புவதாக பெரும்பான்மை அமெரிக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ட்ரம்ப் தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.


ட்ரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்றதிலிருந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு அமெரிக்காவின் பொருளாதார சீர்குலைவை திசைதிருப்பி வருகிறார். அரசு ஊழியர்களும் ஒப்பந்த நிறுவனங்களும் சம்பளம் வாங்காமல் வேலை செய்யும் நிலை முதல்முறையாக ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்களின் வாக்குகளை பெறுவதற்காக இந்திய பிரதமர் மோடியை தனது துருப்புச்சீட்டாக பயன்படுத்தினார். இந்தியாவில் காஷ்மீர் பிரச்சனையிலும், பொருளாதார சீர்குலைவிலும் சிக்கித் திணறும் மோடி, அமெரிக்காவில் ட்ரம்ப் கொடுத்த வரவேற்பைக் காட்டி திசைதிருப்ப முயன்றார். அமெரிக்காவில் எந்த இந்திய பிரதமருக்கும் கிடைக்காத வரவேற்பு மோடிக்கு கிடைத்ததாக மீடியாக்களில் விளம்பரம் செய்யப்பட்டது.


ஆனால், இந்தியாவில் மோடியின் திசைதிருப்பும் நடவடிக்கைகளை மக்கள் புரிந்தே இருக்கிறார்கள். ஏழு மாதங்களுக்கு மேல் காஷ்மீரில் இயல்புவாழ்க்கை சீர்குலைந்திருக்கிறது. அங்கு அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். பொதுமக்கள் இயல்புவாழ்க்கைக்கு அனுமதிக்கப்படவில்லை. பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. மாநிலம் முழுவதும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இன்னும் நீடிக்கிறது. இணைய வசதி, தொலைத்தொடர்பு வசதி மறுக்கப்பட்டிருக்கிறது.


காஷ்மீர் பிரச்சனை பேசுபொருள் ஆன நிலையில், அதைத்திருப்ப, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது மோடி அரசு. வெளிநாட்டினரை அடையாளம் கண்டு அவர்களை தனிமைப்படுத்தப் போவதாக மோடியும் அமித்ஷாவும் பிடிவாதமாக கூறிவருகிறார்கள். அவர்களுடைய பார்வையில் இந்தியாவின் இஸ்லாமியர்களே முதல்கட்டமாக வெளிநாட்டினராக குறிவைக்கப்பட்டு இருக்கிறார்கள். முதலில் இஸ்லாமியர்களை ஒதுக்குவதும், பிறகு மற்ற மதத்தினரை குறிவைப்பதும், இறுதியாக சாதிய பிரிவினைகளை அமல்படுத்தி, இந்தியாவில் வர்ணாச்சிரம அடிப்படையிலான அரசியல் சட்டத்தை அமல்படுத்துவதுமே மோடி அரசின் லட்சியமாக இருக்கலாம் என விமர்சிக்கப்படுகிறது.



இந்தியா முழுவதும் மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராகவும், பல்வேறு மாநிலங்களில் நாடற்றவர்களை அடைப்பதற்கான முகாம்கள் கட்டப்பட்டு வருவதற்கு எதிராகவும் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தப் போராட்டங்களை ஒடுக்க மோடி அரசு கொடூரமான உத்திகளைக் கையாளுகிறது. இந்நிலையில்தான் மனித உரிமைகளின் காவலனாக தன்னை காட்டிவரும் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப்பை இந்தியாவுக்கு அழைத்து அதையே ஒரு வேடிக்கையாக இந்திய மக்களுக்கு காட்டி வருகிறார் மோடி.


அமெரிக்காவில் தனக்கு ஒரு மிகப்பெரிய நிகழ்ச்சியை நடத்த அனுமதி கொடுத்த ட்ரம்ப்புக்கு, இந்தியாவில் அதுபோல ஒரு வரவேற்பை கொடுத்து நன்றி விசுவாசத்தை வெளிக்காட்டி இருக்கிறார் மோடி.

அசாம் என்ஆர்சி முகாம்களில் அடைக்கப்பட்ட மக்கள்


இந்த வரவேற்பில் ஏதோ இந்திய மக்கள் தன்னெழுச்சியாக கலந்துகொணடதைப்போல ஒரு தோற்றம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளையே சாலை ஓரங்களில் நிறுத்தி கஷ்டப்படுத்தியிருக்கிறது மோடி அரசு. வரவேற்பு அளித்தவர்களுக்கு முகத்தைக்கூட காட்டாமல் காருக்குள் இருந்தபடியே பார்த்து சென்றார் ட்ரம்ப். அதாவது, ட்ரம்ப் சென்ற காருக்குத்தான் மாணவ மாணவிகள் கையசைத்தார்கள். அவர் சென்ற காரை மகிழ்ச்சிப்படுத்தவே கலை நிகழ்ச்சிகளை நடத்தினார்கள் எனலாம்.




இதற்குமுன் இந்தியாவுக்கு வந்த அமெரிக்க ஜனாதிபதிகள் யாரும் இப்படி காருக்குள் ஒளிந்து பயணித்ததில்லை. தன்னை வரவேற்க ஒரு கோடி இந்தியர்கள் காத்திருப்பதாக ட்விட்டரில் பெருமையாக பதிவிட்ட ட்ரம்ப், வரவேற்ற இந்தியர்களுக்கு தனது முகத்தைக்கூட காட்ட முடியாதவராகிவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT