ADVERTISEMENT

நக்கீரனின் செய்திகளும்; ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கையும்! சசிகலா மீது நடவடிக்கை?

03:41 PM Oct 26, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆறுமுகசாமி கமிஷன் கொடுத்த அறிக்கை ஒட்டுமொத்த அ.தி.மு.க.வையே அழித்து விடும் அபாயத்தை உருவாக்கி இருக்கிறது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

ஆறுமுகசாமி அறிக்கை வந்ததும் டி.டி.வி. தினகரன் சசிகலாவைச் சந்தித்தார். “ஆறுமுகசாமிக்கு எடப்பாடி பழனிச்சாமி பல கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுத்துள்ளார். அதனால்தான் ஜெயலலிதா மறைவுக்கு சசிகலாதான் காரணம் என ஒரு அறிக்கையை ஆறுமுகசாமி கொடுத்துள்ளார். இதற்கு நமது குடும்ப உறுப்பினர் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியாவின் சாட்சியத்தைப் பயன்படுத்தி உள்ளார்.

இது ஒரு மிகப்பெரிய சதித் திட்டம் என்றும் முதலில் ராமானுஜம் என்கிற போலீஸ் அதிகாரி மூலம் சசிகலா ஜெ.வை வீழ்த்திவிட்டு நடராஜனை முதலமைச்சராக்க முயற்சிக்கிறார் என அறிக்கை கொடுத்தார்கள். அதிலும் தெலுங்கு லாபி சசிகலாவுக்கு எதிராக வேலை செய்துள்ளது. இப்பொழுது ஜெ.வின் மரணத்துக்கு காரணம் என ஆறுமுகசாமியை பேச வைத்திருக்கிறார்கள்” எனப் பேசிய தினகரனிடம், "2012-ஆம் ஆண்டு முதல் ஜெ.க்கும் எனக்கும் சுமூக உறவு இல்லை என கிருஷ்ணப்பிரியாவை வைத்து பேச வைத்துள்ளார்கள். கிருஷ்ணப்பிரியாவுக்கும் உனக்கும் எப்பொழுதும் சண்டை வரும். வெற்றிவேல் ஜெ.வைப் பற்றி வீடியோ வெளியிட்ட பிறகு அந்த வீடியோவை எதிர்த்து கிருஷ்ணப்பிரியா பேசினார். அதை சாதகமாகப் பயன்படுத்தி கமிஷனில் கிருஷ்ணப்பிரியாவை சாட்சியம் அளிக்க வைத்தனர். இப்பொழுது அந்த சாட்சியம் நமக்கு எதிராகப் போய் விட்டது'' என சசிகலா தினகரனிடம் வருத்தப்பட்டுள்ளார்.

அவர்களிடம் கிருஷ்ணப்பிரியா, “நான் அப்படியெல்லாம் சாட்சியம் சொல்லவில்லை” என மறுத்திருக்கிறாராம்.

ஜெயலலிதாவின் மரணத்துக்குக் காரணம் சசிகலா என்பது அழிக்க முடியாத சாட்சியமாக ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பதிவு செய்துள்ளது. இதை எப்படி எதிர்கொள்வது என சசிகலா தனது வழக்கறிஞர்களிடம் ஆலோசித்ததில், “இது எடப்பாடி மற்றும் தி.மு.க. அரசின் சதி வேலை. இந்த ஆணைய அறிக்கையின் தொடர்ச்சியாக இனி வரும் காவல்துறை விசாரணைகளை அடுத்தகட்டமாக எதிர்கொள்வோம். இந்த விசாரணைக் கமிஷன் அறிக்கையில் ஆறுமுகசாமி வரம்பு மீறிவிட்டார். ‘ஜெ.வுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சைகளைப் பற்றிதான் ஆராய வேண்டும்’ என சுப்ரீம் கோர்ட் தெளிவாகத் தீர்ப்பளித்தும் அதையெல்லாம் மீறி சேற்றில் சிக்கிய யானை என ஜெ.வையும் அந்த யானையைக் கொன்ற சிறு நரி என சசிகலாவையும் மறைமுகமாக வர்ணித்ததோடு 2012ஆம் ஆண்டு முதல் ஜெ.க்கும் சசிக்கும் உறவு சரியில்லை. அப்பல்லோ மருத்துவர்கள் பாபு மனோகரன், ஒய்.எம்.சி. ரெட்டி, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் ஆகியோர் சசிகலாவின் திட்டத்திற்கு உடந்தையாக செயல்பட்டார்கள் என ஆறுமுகசாமி சொல்லியிருப்பது சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது” என சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டி சசிகலாவிடம் பேசியிருக்கிறார்.

அதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையின் தலைவர் பிரதாப் சி. ரெட்டியிடம் ஆலோசனையில் ஈடுபட்ட சசிகலா, ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கைக்கும் அதைத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழக அரசின் நடவடிக்கைகளுக்கும் தடைக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும் தேவைப்பட்டால் சுப்ரீம் கோர்ட்டிலும் வழக்குப் போடத் தீர்மானித்துள்ளார்.

மேலும் மத்திய அரசின் எய்ம்ஸ் டாக்டர்கள் கொடுத்த அறிக்கையை ஆறுமுகசாமி ஏற்காததால் அதை சசிகலாவும் அப்பல்லோவும் போடும் வழக்கில் மத்திய அரசிடம் கருத்தாகத் தெரிவிப்போம் என மத்திய அரசு வட்டாரங்களிடம் பேசி உறுதி பெற்றிருக்கிறார் சசிகலா.

அதைத் தொடர்ந்து, சசிகலா தன்னுடைய ரகசிய ஆவணங்களை வரவழைத்துப் பரிசீலனை செய்தார். அதில் ஏற்கெனவே வெற்றிவேல் மூலம் வெளியிட்ட ஜெ. ஜூஸ் குடிக்கும் வீடியோ தவிர மொத்தம் ஒன்பது வீடியோக்கள் இருந்தன. அதில் ஜெ. நர்சுகளிடம் பேசும் வீடியோ, ஜெ.வும் சசியும் ஆத்மார்த்தமாக சிகிச்சை மற்றும் அரசியல் நிலவரங்களைப் பற்றிப் பேசும் வீடியோ, காவிரி ஆணையக் கூட்டம் தொடர்பாக எடுக்கப்பட்ட வீடியோ, ஜெ.வின் மூச்சுத்திணறல் பற்றி ஜெ. பேசிய ஒரு வீடியோ ஆகியவை இருக்கின்றன. இவற்றை ஒவ்வொன்றாக வெளியிட வேண்டும் என சசிகலா திட்டமிட்டுள்ளார். அத்துடன் ஜெ.வின் மரணம் குறித்த சந்தேகங்களுக்கு விடையளிக்கும் வகையில் பத்திரிக்கையாளர்களிடம் கோவில்களுக்குச் செல்லும் வழியில் பேசத் திட்டமிட்டுள்ளார். இப்படி வழக்கு, வீடியோ, பிரஸ் மீட் என சசிகலாவை ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கை பிசியாக்கிவிட்டது.

மறுபுறம் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கரை அ.தி.மு.க.வில் இருந்து நீக்க வேண்டும் என்கிற குரல் எழுந்துள்ளது. அதற்கு தங்கமணி, வேலுமணி, வீரமணி ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 2016 தேர்தல் முடிந்தவுடன் தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஜெ. புதுக்கோட்டை மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டவர்களைத் தோற்கடிக்க ஒருவர் சதி செய்தார். அவர் இன்று அமைச்சராகி இருக்கின்றார் என மறைமுகமாக விஜயபாஸ்கரை குறிப்பிட்டுப் பேசினார். அந்த அளவுக்கு சசிகலாவுடன் நெருக்கமாக இருந்த விஜயபாஸ்கர் ஜெ.வின் மரணத்துக்கும் காரணமாக சசிகலாவுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறார், அவரை நீக்க வேண்டும் என கட்சியில் எழுந்த எதிர்ப்புக் குரல்களை தங்கமணி, வேலுமணி ஆகியோர் மட்டுப்படுத்தி உள்ளனர்.

சசிகலாவுடன் விஜயபாஸ்கர் மட்டும் நெருக்கமாக இல்லை. நாம் அனைவரும் நெருக்கமாக இருந்தோம். முன்பு ஜெ.வுடன் எந்தத் தொடர்பும் வைக்கக் கூடாது என்ற எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா எனக்கு எதிராக சதி செய்கிறார் என்று சாகும் தருவாயில் கூறினார். அன்று எம்.ஜி.ஆருக்கு நடந்தது இன்று சசிகலா மூலமாக ஜெயலலிதாவுக்கு நடந்துள்ளது.

விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுத்தால் நம் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போதைக்கு ஓ.பி.எஸ். மற்றும் சசிகலாவை தனிமைப்படுத்த ஆறுமுகசாமி கமிஷன் அறிக்கையைப் பயன்படுத்தலாம் என எடப்பாடிக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்கள் தங்கமணியும் வேலுமணியும்.

ஜெயலலிதா சிகிச்சைக்காக அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்ட நாளிலிருந்து அவரது மரணம் குறித்த அறிவிப்பு வெளியான நாள் வரை ஜெயலலிதாவுக்கு எம்மாதிரியான சிகிச்சை வழங்கப்படுகிறது என்பதை நக்கீரன்தான் வெளியுலகுக்கு சொல்லி வந்தது. நக்கீரன் வெளியிட்ட செய்திகளைத்தான் வரிக்கு வரி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கையும் குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT