ADVERTISEMENT

மோடி நண்பர் vs ராகுல் நண்பர்... - இது CBI மோதல்!

11:06 AM Oct 03, 2018 | elaiyaselvan

ன்னாட்சி அமைப்பு எனப்படும் சி.பி.ஐ.யின் இயக்குநராக இருக்கும் அலோக்வர்மா, பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பர். அதேபோல, அத்துறையின் சிறப்பு இயக்குநராக இருக்கும் ராகேஸ்அஸ்தானா, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு நெருக்கமானவர். இந்த இரண்டு உயரதிகாரிகளின் ஊழல் குற்றச்சாட்டுகளால் பரபரத்துக் கிடக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.

தொழிலதிபர் மல்லையாவின் வங்கி மோசடி வழக்கு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு, பீகாரின் முன்னாள் முதல்வர் லல்லு பிரசாத்தின் ஐ.ஆர்.சி.டி.சி. ஊழல் வழக்கு என முக்கிய வழக்குகளை விசாரித்து வந்தார் ராகேஸ்அஸ்தானா. மத்திய ஊழல் தடுப்பு ஆணையமான சி.வி.சி., இந்த ஊழல் வழக்குகளின் புலனாய்வு குறித்து பிரதமர் அலுவலகத்தில் சில கேள்விகளை எழுப்பியிருந்தது. உடனே, அவ்வழக்குகளின் தற்போதைய நிலை பற்றிய அறிக்கையை கேட்டு ராகேஸ் அஸ்தானாவிற்கு கடிதம் எழுதியது பிரதமர் அலுவலகம். அதன்படி, பிரதமர் அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்பிய ராகேஸ்அஸ்தானா, அதே பாணியில் சி.வி.சி.க்கும் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தார். அதில், இவ்வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து நடத்தமுடியாத அளவுக்கு பல்வேறு தடைகளை அலோக்வர்மா ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்திருக்கிறார்.

அஸ்தானா கேட்கும் தகவல்களை தரவேண்டும் என்றும், அவர் விசாரித்துவரும் 6 வழக்குகளின் விவரங்களை தங்களுக்கு அனுப்பி வைக்கவேண்டும் என்றும் அலோக்வர்மாவுக்கு உத்தரவிடும் பாணியில் கடிதம் எழுதினர் சி.வி.சி. அதிகாரிகள். பிரதமர் அலுவலகம் அதிர்ச்சியடைந்தது.

இந்த நிலையில், சி.வி.சி. அதிகாரிகள் கேட்டிருந்த தகவல்களை அனுப்பி வைத்ததுடன், ’’""அஸ்தானா விசாரிக்கும் வழக்குகள் எதிலும் நான் தலையிடுவதில்லை. விசாரணைக்கு தடை ஏற்படுத்தவும் இல்லை. அஸ்தானா மீது நிறைய குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. அவைகளை மறைக்கவே என்மீது பொய்யான தகவல்களையும் தவறான புகார்களையும் அஸ்தானா தெரிவித்திருக்கிறார். அவர் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுகளை மறுக்கிறேன்''‘என சி.வி.சி.க்கு பதில் அளித்திருக்கிறார் சி.பி.ஐ. இயக்குநரான அலோக்வர்மா.

ADVERTISEMENT

இதுகுறித்து மத்திய உளவுத்துறை வட்டாரங்களில் விசாரித்தபோது, ‘’ சி.பி.ஐ.யின் கூடுதல் இயக்குநராக இருந்த ராகேஸ் அஸ்தானாவை சிறப்பு இயக்குநராக நியமிக்க வேண்டிய சூழல் கடந்தவருடம் அக்டோபரில் மோடி அரசுக்கு ஏற்பட்டது. சிறப்பு இயக்குநராக அஸ்தானா நியமிக்கப்படுவதை விரும்பாத அலோக்வர்மா, எதிர்ப்பு தெரிவித்தார். இது ஏற்கப்படாததால் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டார் அஸ்தானா. அதேசமயம், அஸ்தானாவின் நியமனத்தை எதிர்த்து காமன் காஸ் என்கிற ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் வழக்குப் போட்டது. இதன் பின்னணியில் அலோக்வர்மா இருப்பதாக சந்தேகப்பட்டார் அஸ்தானா.

"அவர் மீது ஆறு ஊழல் புகார்கள் இருக்கிறது. அதுகுறித்து விசாரணையும் நடத்தப்பட்டிருக்கிறது. அவர் கண்காணிக்கப்பட்டு வருவதால் சி.பி.ஐ.க்கு பணியாளர்களை நியமிப்பதில் அவரோடு கலந்தாலோசிக்கக் கூடாது' என ஊழல் தடுப்பு ஆணையத்துக்கு கடிதம் எழுதினார் அலோக்வர்மா. குறிப்பாக, ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் 5 ஆயிரம் கோடி வங்கிக்கடன் மோசடி விவகாரத்தில், நிறுவனத்தின் உரிமையாளர்களான சந்தேஸாரா சகோதரர்களின் டைரியில் அஸ்தானா பெயர் இருக்கிறது என்பதையும், சந்தேஸாரா சகோதரர்களுக்கு எதிரான வருமானவரி விசாரணையில் அஸ்தானா குறுக்கீடு செய்ததாகவும், அதுதொடர்பான விசாரணை நடத்தப்பட்டிருக்கிறது என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார் அலோக்வர்மா. இதனால் அவர்மீது மேலும் கோபமடைந்தார் அஸ்தானா.

இதனை மறுத்து சி.வி.சி.க்கு கடிதம் எழுதிய அஸ்தானா, "மத்திய ரயில்வே அமைச்சராக லாலுபிரசாத் இருந்தபோது நடந்த ஊழலுக்காக லாலுவின் மனைவி ரஃப்ரி மற்றும் மகன் தேஜஸ்வி பெயர்களில் நிலம் பதிவு செய்யப்பட்டிருப்பதை நாங்கள் கண்டுபிடித்திருக்கிறோம். இதுதொடர்பாக ரெய்டு நடத்தப்பட்டபோது அதில் தலையிட்டு தடுக்க நினைத்தார் அலோக்வர்மா. அதனை நான் எதிர்த்ததால் தற்போது என்னை ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவன விவகாரத்தில் நுழைக்கிறார். அவ்வழக்கின் எஃப்.ஐ.ஆரில் என் பெயர் இல்லை' என தன் மீதான குற்றச்சாட்டுகளை கடிதத்தில் மறுத்துள்ளார் அஸ்தானா. இந்தக் கடித யுத்தங்கள் பிரதமர் அலுவலகத்துக்கு அப்போதே பெரும்தலைவலியைக் கொடுத்தது''‘என பின்னணிகளைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

"சி.பி.ஐ.யில் நடக்கும் அதிகார மோதல்களுக்குள் திடீரென நுழைந்துள்ள சுப்பிரமணியன்சாமி, "அரசியல்வாதிகள் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ. விசாரிக்க நிதி அமைச்சகம் தடுக்கிறது. விரைவில் இதுகுறித்த ஆவணங்களை வெளியிடுவேன்'’என பகீர் கிளப்பியிருக்கிறார். மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லிக்கும் சுப்பிரமணியன்சாமிக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம். ஜெட்லியை எதிர்க்கவேண்டியே இந்த விவகாரத்தில் அவரை இழுத்துவிட்டிருக்கிறார் சாமி'' என்கின்றனர்.

சி.பி.ஐ. மீதான நம்பகத்தன்மையையே கேள்விக்குறியாக்கியிருக்கிறது இரண்டு உயரதிகாரிகளிடையிலான மோதல்.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT