ADVERTISEMENT

“மலக்குழியில் மடியும் உயிர்கள்… தொடரும் வேதனை..!”

05:28 PM Nov 10, 2018 | nagendran


ADVERTISEMENT

துப்புரவு சார்ந்த எந்த வேலையையும், அரசாங்கமே செய்யவேண்டும். இந்த பணியை ஒப்பந்தம் விடக்கூடாது. 2013-மனிதக் கழிவுகள் அகற்றும் பணி தடுப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்தி துப்புரவு தொழிலாளர்களின் மாண்புரிமைகள் பாதுகாக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் 2014-ல் தீர்ப்பு வழங்கியது. ஆனால், இந்த தீர்ப்பு இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இன்றும் கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி உயிரிழப்புகள் தொடர்கிறது. பாதாள சாக்கடை அடைப்புகளை இயந்திரம் கொண்டே சரி செய்ய வேண்டும், மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவும் இன்னும் காகித அளவிலே இருக்கிறது.

ADVERTISEMENT

பெரிய தொழில் நிறுவனங்கள், உணவு விடுதிகளில் கழிவுநீர் அடைப்பை சரி செய்யவும், சுத்தம் செய்யவும் அடித்தட்டு மக்களே பயன்படுத்தப்படுகின்றனர். அவர்களுக்கு முறையான மருத்துவ உபகரணங்கள், கையுறை, கால் உறை எதுவும் வழங்கப்படுவதில்லை. இதனால், மூச்சடிக்கி உள்ளே இறங்கும் தொழிலாளி சில சமயங்களில் மயங்கிச் சரிந்து மரணத்தை தழுவுவது வழக்கமாகிவிட்டது. கடந்த 3 ஆண்டில் மட்டும் தமிழகத்தில் விஷவாயு தாக்கி 278 பேர் இறந்துவிட்டதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இவ்வாறு இறக்கும் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு உடனடியாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும். ஆனால், அந்த தொகைகூட இன்னும் பல குடும்பங்களுக்கு சென்று சேரவில்லை.

மலம் அள்ளுபவர்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திக்கும் உடல் சார்ந்த பிரச்சினைகள், சமூகத்திடமிருந்து அவர்களுக்குக் கிடைக்கும் அவமதிப்பு, பள்ளிகளில் அவர்களின் குழந்தைகள் எதிர்கொள்ளும் கிண்டல் என்றெல்லாம் அவர்களின் பிரச்சினைகள் ஏராளம். அகில இந்திய அளவில் இந்தியா முழுவதும் ரயில்வே துறையில் சுமார் 3 லட்சம் பேர், கையால் மலம் அள்ளும் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக, அரசின் புள்ளி விபரமே சொல்கிறது. ஆனால், இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் என சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் எந்த ஆட்சியாளர்களுக்கும் சிந்தனை வரவில்லை என்பது தான் கொடுமையிலும் மிக கொடுமை.

எல்லோரும் மனிதர்கள் தான், விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் உரிமை வேண்டும் என்று முழங்குகிறோம், கேள்விகளை எழுப்புகிறோம். அந்தக் கேள்விக்கான விடையைத் தேடுவதில் இருக்கிறது, மனிதநேயத்துக்கான விடியல்..!


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT