ADVERTISEMENT

'கண்ணாடி கூண்டில் இருந்துகொண்டு காங்கிரஸ் கல்லெறிகிறது' மல்லை சத்யா தடாலடி!

05:46 PM Aug 10, 2019 | suthakar@nakkh…

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக கடந்த 5ம் தேதி வைகோ நாடாளுமன்றத்தில் பேசிய போது காங்கிரஸ் கட்சியை விமர்சித்து சில கருத்துகளை தெரிவித்தார். இதுதொடர்பாக பதில் அளித்துள்ள தமிழக காங்கிரஸ் கட்சி அவரை கடுமையாக சாடி அறிக்கை வெளியிட்டு இருந்தது. பதிலுக்கு மதிமுகவும் கடுமையான சொற்களை பயன்படுத்தி பதில் தாக்குதல் நடத்தியது. இதுதொடர்பாக மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம் கேள்விகளுக்கு அவரின் அதிரடி பதில்கள் வருமாறு,

ADVERTISEMENT




ADVERTISEMENT

தள்ளி வைக்கப்பட்டிருந்த வேலூர் நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. திமுக மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார். முதலில் மதிமுக சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக கூறுகிறீர்கள். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. நாடாளுமன்ற தேர்தலோடு இந்த தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றிருந்தால் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றிருப்பார். ஆனால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டதால் தற்போது அவர் சற்று குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வெற்றுள்ளார். ஆளும் கட்சியின் அதிகார பலத்தை எதிர்த்து வெற்றிபெரும் போது இத்தகைய இடைஞ்சல்கள் ஏற்படுவது இயற்கையான ஒன்றுதான். எப்படி இருந்தாலும் வெற்றி என்பது ஒன்றுதான். அதில் மாற்றமில்லை.

இந்த வெற்றியில் கூட்டணி கட்சியினருடைய பங்கும் இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

நிச்சயமாக பங்கு இருக்கிறது. அதுதான் உண்மையும் கூட. ஏனென்றால் அப்போது போட்டியிட்ட அனைத்துக் கட்சிகளும் தற்போது இணைந்தே இருக்கிறது. அனைத்து கட்சிகளும் இணைந்தே தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டன. எனவே அனைவரும வெற்றிக்கு உழைத்தார்கள் என்பதே உண்மை.

ஆனால், தற்போது அதில் பிரச்சனை வந்துள்ளதாக தெரிகிறதே, காங்கிரஸ் கட்சியை நீங்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளீர்களே?

நாங்கள் விமர்சனம் செய்யவில்லை. எங்களை விமர்சனம் செய்ததால் பதில் விமர்சனம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கொள்கை ரீதியாக இரண்டு கட்சிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. 10 சதவீத இடஒதுக்கீடு சமூகநீதிக்கு எதிராக இருக்கிறது என்பது எங்களின் கருத்து. முதல்வர் கூட்டிய அனைத்துக்கட்சி கூட்டத்தில் கூட அதை தெளிவாக பதிவு செய்தோம். ஆனால், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அதனை ஆதரித்தன. ஆனால், நாங்கள் கடுமையாக எதிர்த்தோம். இன்றும் எதிர்க்கிறோம். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பாஜக கொண்டுவந்த மசோதாவை மதிமுக கடுமையாக எதிர்த்தது. ஆனால், மாநிலங்களவை காங்கிரஸ் கொறடா அதனை எதிர்த்தார். காங்கிரஸ் உறுப்பினர்கள் 12 பேர் அந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தார்கள். எனவே, காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருவேறு கருத்துக்கள் இருக்கின்ற போது மதிமுகவும், காங்கிரஸ் கட்சியும் கொள்கை ரீதியாகவே மாறுபட்ட கருத்துக்களை கொண்டவை. எனவே கருத்து மாறுபாடுகள் வருவது இயற்கையான ஒன்றுதான். அதை பிரச்சனை என்று சொல்வதிற்கில்லை.

தேர்தலுக்கு முன்பாக ஒன்று பேசுகிறார், தேர்தல் முடிந்த பிறகு ஒன்று பேசுகிறார் என்று உங்கள் தலைவர் வைகோ மீது குற்றச்சாட்டு சொல்லப்படுகிறதே?

அது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு. 2014ம் ஆண்டு பாஜகவோடு கூட்டணி வைத்தபோது பல்வேறு விஷயங்களை முன்னரே பேசினோம். முந்தைய வாஜ்பாய் அரசு மேற்கொண்ட கொள்கையில் இருந்து பாஜக மாறக்கூடாது என்ற உறுதிமொழியின் அடிப்படையிலேயே நாங்கள் ஒன்று சேர்ந்தோம். எங்கள் கொள்கைகளுக்கு இடைஞ்சல் தரும் வகையில் நாங்கள் எப்போதும் கூட்டணி அமைப்பதில்லை. அதைபோன்றே 2016ம் ஆண்டு மக்கள் நலக் கூட்டணியை அமைத்தோம். விஜயகாந்தை முதல்வராக ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையில் தலைவர் வைகோ முன்மொழிந்தார். தேர்தல் முடிவில் மக்கள் எங்கள் கூட்டணியை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அறிந்தோம். தேர்தல் முடிவுக்கு பிறகு அந்த கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியது. ஒவ்வொருவரும் அவர் அவர்களுக்கான நிலைபாடுகளை தனித்தனியாக எடுத்தார்கள். அதன் பிறகு திமுக கூட்டணியில் பயணிக்கின்ற போது, யார் பிரதமராக வரவேண்டும் என்று கேள்வி எழுந்த போது, ராகுல் வர வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார். அதனை மதிமுக ஏற்று தேர்தல் பிரச்சாரங்களை முன் எடுத்தது.

கூட்டணி வைக்கும்போது தெரியவில்லையா இனத்தை அழித்த பாவி காங்கிரஸ் என்று?

காங்கிரஸ் கட்சியின் போக்கில் நிறைய மாற்றங்கள் தெரிந்தது. குறிப்பாக பேரறிவாளன் விவகாரத்தில் அவர்களை சட்ட ரீதியாக விடுதலை செய்வதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார். எனவே அவர்கள் மாறியிருப்பார்கள் என்ற நோக்கில் ஒன்றாக பயணித்தோம்.

இன்றைக்கு காங்கிரஸ் கட்சியை எதிர்த்து பேச வேண்டிய நிர்பந்தம் என்ன?

நாங்கள் எதுவும் பேசவில்லை. காங்கிரஸ் கட்சிதான் கண்ணாடி கூண்டில் இருந்து கொண்டு கல்லெறிகிறார்கள். காஷ்மீர் விவகாரம் தொடர்பாக பேசும்போதும் நாடாளுமன்றத்தில் அனைத்து தகவல்களையும் வைகோ சொல்கிறார். 5ம் தேதி பேசி அந்த சம்பவத்திற்கு 8ம் தேதி கண்டனம் தெரிவிக்கிறார்கள். ஏவுகணைகளை வீசுவோம் என்று தெரிவிக்கிறார்கள். பாஜகவை நாங்கள் ஆதரிப்பதாக சொல்வதெல்லாம் கட்டுக்கதை. காஷ்மீர் விவகாரத்தில் அந்த மசோதா கொண்டுவந்த போது அது ஜனநாயகத்தின் கருப்பு தினம் என்று நாடாளுமன்றத்தில் வைகோ கூறியதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT