ADVERTISEMENT

சாதி தாண்டி காதல் திருமணமா? - நொறுக்கப்பட்ட வாழ்க்கை!

12:17 PM Oct 14, 2020 | rajavel

ADVERTISEMENT

ஹலோ... நாங்க கோபி செட்டிப்பாளையம் ஆல்வுமன் போலீஸ் ஸ்டேசன்ல இருந்து பேசறோம். உங்க பொண்ணு சௌந்திர நாயகி, அசோக் என்கிற பையன கல்யாணம் பண்ணிட்டு. போலீஸ் பாதுகாப்பு கேட்டு வந்திருக்கா. நீங்க ஸ்டேசன் வரைக்கும் வந்துட்டுப் போயிடுங்க.''

ADVERTISEMENT

"இல்லைங்க... நாங்க யாரும் அந்த கேவலமானவளப் பார்க்கக்கூட மாட்டோம்'' -ஃபோனை கட் பண்ணி விட்டனர். இது நடந்தது செப்டம்பர் 16ல்!

அடுத்த சில நாட்களில்...

"ஹலோ... சௌந்திரா... நான் அம்மா பேசறேன்மா. நீ கண்ணுக்குள்ளயே இருக்கறேம்மா. அப்பா யார் கூடயும் பேசவே மாட்டேங்கறாரு. நீயும், மாப்பிள்ளையும் வீட்டுக்கு விருந்துக்கு வாங்க.''

"சரிம்மா...'' கண்ணீர் கசிய ஃபோனை கட் செய்தார் சௌந்திர நாயகி.

"நான் சொன்னேன் இல்லைங்க... எங்க வீட்ல நம்ம கல்யாணத்தை ஏத்துக்குவாங்கன்னு. இப்ப நம்பறீங்களா இல்லையா?''

"ஆமாம் சௌந்திரா... என்னால இப்பக்கூட நம்பவே முடியல. நம்பாம இருக்கவும் முடியல...'' என அசோக் சொல்லி முடித்த அடுத்த நிமிடத்தில்... நைனாம் பாளையத்தில் உள்ள சௌந்திர நாயகியின் பெற்றோர் வீட்டில் கார் நிறுத்தப் பட்டது.

தடபுடலாய் ஆட்டுக் கறி, சிக்கன் விருந்துகள் மணமக்களுக்கு கொடுக்கப்பட்டு சௌந்திர நாயகி, அசோக் தம்பதியினரை குதூகலப்படுத்தி அனுப்பி வைத்தனர் சௌந்திராவின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர்.

அக்டோபர் 2.

"ஹலோ... அம்மா சௌந்திரா... நான் அம்மா பேசறேன்மா. அப்பாக்கு ஒடம்பு சரியில்லாம போயிருச்சும்மா. ஒன்னப் பாக்கணும்னு அழுகுறாரும்மா. ஒரு எட்டு அப்பாவ மாப்பிள்ளையோடு வந்து பாத்துட்டு போயிடும்மா.''

"உடனே வர்றேன்மா...'' என அழுகையோடு ஃபோனை கட் செய்துவிட்டு... "என்னங்க...'' என கணவன் அசோக்கிடம் ஓடினார் சௌந்திரா.

அந்த கார் கிளம்பிற்று. காரினுள்... சௌந்திர நாயகி, அசோக், அசோக்கின் தம்பி பரணிதரன், அசோக்கின் நண்பன் சூர்யா... என நால்வர் இருந்தார்கள்.

கரோனோ காலம் என்பதால் அப்பாவை நினைத்து கலங்கிய சௌந்திராவுக்கு ஆறுதல் சொன்னார் அசோக்.

"அம்மா... அப்பாக்கு என்னம்மா ஆச்சு?'' என காரிலிருந்து கேட்டபடியே ஒரு சிட்டுக் குருவியைப் போல வீட்டிற்குள் பறந்தார் சௌந்திரா.

"வாங்க மாப்ளே... இந்த ரூம்ல மூணு பேரும் ஒக்காருங்க. இந்தாங்க டீ...'' என அசோக்குடன் சென்ற இரண்டு பேருக்கும் சேர்த்து டீ கொடுக்கப்பட்டது.

அவ்வளவுதான்... உள் ரூமிலிருந்து பத்து பேர் அரிவாள், கிரிக்கெட் ஸ்டெம்புகளோடு மூன்று பேரையும் நையப் புடைக்க ஆரம்பித்து விட்டனர்.

எவ்வளவோ தடுத்தும்... முடியாத அசோக்கிடம்... "ஏண்டா கீழ் சாதி நாய்களா? உங்களுக்கு எங்க பொண்ணுக கேட்குதோ?'' என அடித்து ஒரு ரூமிற்குள் மூன்று பேரையும் அடைத்து விட்டனர்.

"காரை அடிச்சு ஒடைச்சுட்டோம்டா... எங்க ஆளுக 150 பேருக்கும் மேலா இங்க திரண்டு வந்துட்டு இருக்காங்க. அவுங்க கையிலதான் உங்களுக்கு மட்டுமல்ல... உங்க கீழ் சாதி புத்திக்கே சாவடி கெடைக்கப் போகுது...''ன்னு சொல்ல... பயந்து போன மூவரும் பின் வாசல் வழியாக தப்பித்து வெளியேறி... காரினுள் ஏறி கோபி போலீஸாருக்கு தகவல் சொல்லிவிட்டு கோபி அரசு மருத்துவமனையில் அட்மிட் ஆனார்கள்.

அக்டோபர் 3.

போலீஸ் வந்தது. "சார்... என் பேரு அசோக். சாதியின் பெயரால என் மனைவி சௌந்திர நாயகியை என்னிடமிருந்து தந்திரமா பிரிச்சுட்டாங்க. என்னையும், என் தம்பி, என் நண்பனையும் கொலை பண்ண முயற்சி பண்ணாங்க. அதிலிருந்து தப்பிச்சு வந்தோம்...'' என சொல்லி விட்டு சட்டைகளைக் கழற்றிக் காட்ட... உடலெங்கும் கிரிக்கெட் ஸ்டெம்புகள் நடப்பட்டிருந்தன.

மீடியாக்களிடம் பேசிய அசோக்... "என் மனைவி சௌந்திர நாயகியை போலீஸார் மீட்டுத் தர வேண்டும். எங்கள் மீது சாதி வெறியோடு கொலை வெறித் தாக்குதல் நடத்திய அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...'' என்றார் பரிதாபக் குரலில்.

கோபி போலீஸாரிடம் நாம் பேசியபோது... "சார்... இதோ அந்த புகார் சம்பந்தமாகத்தான் விசாரித்து... இப்போது சௌந்திர நாயகியின் அண்ணன் மற்றும் அவனது உறவினர்கள் மீது ஃஎப்.ஐ.ஆர் போட்டுள்ளோம். கூடிய சீக்கிரம் அந்தப் பெண்ணை மீட்டு அசோக்குடன் சேர்த்து வைப்போம்...'' என்கிறார்கள் உறுதியான குரலில்.

காதல் திரைப்படத்தைப் போலவே நடந்திருக்கும் இந்தச் சம்பவம் கோபியை அதிர வைத்திருக்கிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT