ADVERTISEMENT

ஒத்த பைசா செலவழிக்கல! 5000 கவுன்சிலராக வெற்றி பெற்ற ரேஷன் ஊழியரின் மனைவி!!

04:05 AM Jan 04, 2020 | santhoshb@nakk…

சேலம் அருகே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுக்காமலேயே 5000 கவுன்சிலர் எனப்படும் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினராக ரேஷன் ஊழியரின் மனைவி சுயேச்சையாக போட்டியிட்டு, வெற்றி பெற்று சாதனை படைத்திருக்கிறார்.

ADVERTISEMENT


யானை காதில் புகுந்த எறும்பு போல என்பார்களே... அந்தப் பழமொழி யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, சேலத்தை அடுத்த, ஏ.என்.மங்கலத்தைச் சேர்ந்த பாரதிக்கு (27) ரொம்பவே பொருந்தும். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியம், 8- வது வார்டுக்கு உட்பட்ட ஏ.என்.மங்கலத்தில் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிட்டார்.

ADVERTISEMENT


பாரதியின் கணவர் ஜெயக்குமார், கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றுகிறார். கீழ் நடுத்தர வர்க்க குடும்பம்தான். பணபலமோ, அரசியல் பின்புலமோ இல்லாத இவர்களுக்கு இதுதான் முதல் தேர்தல் அனுபவம். உள்ளூரின் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தவிர வேறு எந்த செல்வாக்கும் கிடையாது.


ஆனால், இந்த தேர்தலில், யாரும் எதிர்பாராத வகையில் திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளையும் ஓட ஓட விரட்டி அடித்து தெறிக்க விட்டிருக்கிறார் பாரதி ஜெயக்குமார். 8வது வார்டில் மொத்தம் 5350 வாக்குகள் உள்ளன. பதிவானவை, 4250 வாக்குகள். இதில், பாரதி 1177 வாக்குகள் பெற்று, வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டாம் இடம் பிடித்த வள்ளி அகரம் ராஜேந்திரனைக் காட்டிலும் 129 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.


திமுகவைச் சேர்ந்தவரான அகரம் ராஜேந்திரன், அக்கட்சியில் தனக்கு சீட் கிடைக்காததால், தனது மனைவி வள்ளியை அந்த வார்டில் சுயேச்சையாக போட்டியிட வைத்தார். அவருடைய குடும்பம், உள்ளூரில் செல்வாக்கு பெற்ற குடும்பம்தான். இதே வார்டில் திமுக மூன்றாம் இடம் பிடித்தது. அதிமுகவை நான்காம் இடத்திற்கு தள்ளியதோடு, கட்டுத்தொகையையும் இழக்கச் செய்திருக்கிறார் பாரதி.


''எப்படி இந்த வெற்றி சாத்தியமானது? தேர்தலுக்காக எவ்வளவு செலவு செய்தீர்கள்?'' என்று பாரதியிடம் கேட்டோம்.


''எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இதுவரை எந்தவித அரசியல் அனுபவமும் கிடையாது. எனக்கும் தேர்தல் நடைமுறை பற்றியெல்லாம் தெரியாது. இரண்டு குழந்தைகளும், எங்க வீடும்தான் என்னுடைய உலகம். சாதாரண குடும்பத் தலைவி. என் கணவர், ரேஷன் கடையில் வேலை செய்வதால், உள்ளூர் மக்களிடம் நல்ல அறிமுகம் இருந்தது. எல்லோரிடமும் நட்பாக பழகுவார். அவருக்கு உள்ளூர் மக்களிடம் இருக்கும் அறிமுகத்தால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடலாம் என்று யோசனை கொடுத்தார். நானும், உடனடியாக சரினு சொல்லிட்டேன்.


நாங்க தேர்தலுக்காக கட்சிக்காரர்கள்போல ஓட்டுக்காக யாருக்கும் ஒத்த பைசாக கூட கொடுக்கல. அப்படி கொடுக்க எங்ககிட்ட பணமும் இல்ல. பரப்புரைக்குக் கூட வந்தவங்களுக்கு சாப்பாடு, டீ மாதிரியான செலவுகள் செய்ததோடு சரி. என் கணவரின் நண்பர்கள் 50 பேராலதான் இந்த வெற்றி சாத்தியமாச்சுனு சொல்லலாம். அவர்கள்தான் என்னுடைய வெற்றிக்காக ரொம்பவே கடுமையாக வீதி வீதியாக பரப்புரை செய்தாங்க.


எதிர்த்துப் போட்டியிட்ட வள்ளி என்பவருக்கு உள்ளூரில் நல்ல செல்வாக்கு இருக்கு. ஏ.என்.மங்கலத்தில் உள்ள பெரும்பான்மை சமூகத்தினரின் வாக்குகளும் அவருக்குதான் விழுந்திருக்கு. ஆனால், ஏரி புதூர் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர் மக்களில் பெரும்பாலானோர் எனக்கு வாக்களித்ததால் என்னால் வெற்றி பெற முடிந்ததுனு நினைக்கிறேன்.


என் கணவர் அடிக்கடி என்கிட்ட ஒண்ணு சொல்லிட்டே இருப்பாரு. 'அரசியலுக்குனு வந்துட்டா யாரு எந்த மாதிரி விமர்சனம் பண்ணினாலும் பொறுத்துப் போ. நமக்கு முன்னாடி நம்மள பத்தி நல்ல விதமாக பேசறவங்ககூட, முதுக்குப் பின்னாடி வேறு மாதிரி அசிங்கமாக பேசுவாங்க. அதையெல்லாம் காதுல போட்டுக்காதே'னு சொல்லிட்டே இருப்பாரு. எனக்கும் விமர்சனங்களை தாங்கிக்கிற சகிப்புத்தன்மை வந்துடுச்சு. அந்த சகிப்புத்தன்மைக்கு கிடைச்ச பரிசுதான் இந்த வெற்றி. நிச்சயமாக, என்னால் ஆன எல்லா அடிப்படை வசதிகளையும் எங்கள் ஊருக்கு செய்து கொடுப்பேன்,'' என்கிறார் பாரதி.


சுயேச்சையாக போட்டியிட்டு, பெரிய கட்சிகளையும், செல்வாக்குமிக்க நபரையும் வீழ்த்திய தனது மனைவிக்கு அன்பு பரிசாக, வாக்கு எண்ணிக்கை மைய வளாகத்திலேயே கட்டியணைத்து, நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்துகளை தெரிவித்தார், ஜெயக்குமார்.


உளி தாங்கும் கற்கள்தானே சிலையாகின்றன. எனில், சகிப்புத்தன்மையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு இந்த மீசையில்லா பாரதியும் ஓர் உதாரண மனுஷிதான்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT