ADVERTISEMENT

சுயேச்சைகளின் காட்டில் பணமழை...!

08:54 AM Jan 05, 2020 | santhoshb@nakk…

ஒன்றியத்தலைவர் பதவியைக் கைப்பற்ற போதிய இடம் கிடைக்காத இடங்களில், ஆளும் அதிமுக மற்றும் திமுகவினர் சுயேச்சைகளை பணம், பதவி ஆசை காட்டி குதிரை பேரத்தை தொடங்கியுள்ளனர். இதனால் சுயேச்சைகளின் காட்டில் பணமழை கொட்டத் தொடங்கியிருக்கிறது.

ADVERTISEMENT


தமிழகத்தில் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளது. இரண்டு கட்டங்களாக நடந்த தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் முடிவுகள் ஜன. 2, 3- ஆம் தேதிகளில் வெளியிடப்பட்டன. இந்த தேர்தலில் ஆளும்கட்சியான அதிமுகவுக்கு பெரிய வீழ்ச்சியும் இல்லாமல், எதிர்க்கட்சியான திமுகவுக்கு கொண்டாடப்பட வேண்டிய வெற்றியாகவும் இல்லாமல் இருதரப்புக்கும் மோசமில்லாத வகையில் முடிவுகள் அமைந்து இருந்தன.

ADVERTISEMENT


தேர்தல் அரசியல் என்றாலே, மெஜாரிட்டி கிடைக்காத போது, குதிரை பேரத்திற்கு பஞ்சமிருக்காது. அதுவும், இப்போதுள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை கூவத்தூர் விடுதியில் அடைத்து வைத்து, பேரங்கள் பேசி ஆட்சிக்கு வந்தவர்தான். அதையும் உலகம் நன்றாகவே அறிந்திருக்கிறது.


இந்நிலையில், நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் ஆளுங்கட்சி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிகளில் ஏனோ அவ்வளவாக கவனம் செலுத்தவில்லை. அதேநேரம், அதிகாரம் பொருந்திய அமைப்புகளான ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சிகளைக் குறி வைத்து செயல்பட்டிருப்பது தேர்தல் முடிவுகள் மூலம் தெரிய வந்திருக்கின்றன.


முதல்வரின் சொந்த மாவட்டமான சேலத்தில், அதிமுக கூட்டணியால் மொத்தமுள்ள 20 ஒன்றியங்களில் 13 ஒன்றியங்களில் மட்டுமே முழு பலத்துடன் வெற்றி பெற முடிந்திருக்கிறது. அதாவது பனமரத்துப்பட்டி, வீரபாண்டி, வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல், நங்கவள்ளி, தாரமங்கலம், மேச்சேரி, ஓமலூர், சங்ககிரி, இடைப்பாடி, கொங்கணாபுரம், மகுடஞ்சாவடி ஆகிய 13 இடங்களில் அதிமுக கூட்டணி தலைவர், துணைத்தலைவர் பதவிகளைக் கைப்பற்றுவதில் எந்த ஒரு சிக்கலும் இல்லை.


ஆனால், முக்கிய ஒன்றியமாக கருதப்படும் அயோத்தியாப்பட்டணத்தில் அதிமுக கூட்டணிக்கு 6, திமுக கூட்டணிக்கு 7 இடங்களும் கிடைத்துள்ளன. மேலும், செந்தில், பாரதி ஜெயக்குமார், மோனிஷா, சரிதா, சாந்தி, சிந்தாமணி ஆகிய 6 சுயேச்சை வேட்பாளர்களும் வெற்றி பெற்று, ட்விஸ்ட் ஏற்படுத்தி உள்ளனர். இந்த ஒன்றியத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 19. தலைவர் பதவியைக் கைப்பற்ற குறைந்தபட்சம் 10 பேரின் ஆதரவு தேவை என்பதால், இங்கே சுயேச்சைகளின் ஆதரவின்றி யாரும் தலைவர் பதவிக்கு வந்து விட முடியாது. அதனால் அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் சுயேச்சைகளின் மதிப்பு கூடியுள்ளது.


திமுகவில் சீட் கிடைக்காத விரக்தியில் சுயேச்சையாக வைரம் சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர் செந்திலின் ஆதரவு, திமுக கூட்டணிக்கே கிடைக்கும் என்று தெரிகிறது. அப்படி கிடைத்தால் திமுகவின் பலம் 8 ஆக அதிகரிக்கும். செந்திலின் ஆதரவு கிடைக்கும்பட்சத்தில், திமுகவுக்கு தலைவர் பதவியைக் கைப்பற்ற இன்னும் இரண்டு இடங்கள் கிடைத்தால் போதுமானது. அதேநேரம், அதிமுக தலைவர் பதவிக்கு வர வேண்டுமெனில் குறைந்தபட்சம் 4 சுயேச்சைகளின் ஆதரவு தேவை என்பதால், இரண்டு கட்சிகளுமே சுயேச்சைகளிடம் தீவிரமாக பேரம் பேசி வருகின்றன.


ஆளுங்கட்சித் தரப்பில் மெடிக்கல் ராஜா, அனுப்பூர் மணி ஆகிய இருவருமே தங்கள் மனைவிகளை அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக்குழுத் தலைவர் ஆக்கிவிட வேண்டும் என துடிப்பதும், திமுகவுக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.


அயோத்தியாப்பட்டணம் ஒன்றியத்தில் ஏற்கனவே தொடர்ச்சியாக 3 முறை திமுகதான் தலைவர் பதவியில் இருந்திருக்கிறது. அதனால் இந்தமுறையும் தலைவர் பதவியைக் கைப்பற்றி, நான்காவது முறையாக நாற்காலியில் அமர கடுமையாக முயற்சித்து வருகிறது. திமுகவுக்கு போதிய மெஜாரிட்டி கிடைக்கும்பட்சத்தில், அக்கட்சி சார்பில் வெற்றி பெற்றுள்ள ஹேமலதா விஜயகுமார் தலைவராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆத்தூர் ஒன்றியத்தில் மொத்தம் 14 உறுப்பினர்கள் உள்ளன. இதில் 8 பேரின் ஆதரவு யாருக்கு இருக்கிறதோ அக்கட்சி தலைவர் பதவி ஏற்கும். இந்நிலையில், ஆத்தூர் ஒன்றியத்தில் அதிமுக கூட்டணிக்கு 7, திமுகவுக்கு 6, சுயேச்சைக்கு ஒரு இடமும் கிடைத்திருப்பதால், இங்கேயும் சுயேச்சையை வைத்து ஆடுபுலி ஆட்டம் சூடு பிடித்திருக்கிறது.


கெங்கவல்லி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 11 இடங்களில் திமுக, அதிமுக தலா 5 இடங்களிலும், சுயேச்சை வேட்பாளர் ஒருவரும் வென்றுள்ளார். இந்த ஒன்றியத்திலும் சுயேச்சையை வளைத்துப்போடும் வேலைகளில் இரு கட்சிகளுமே ஈடுபட்டுள்ளன. கொளத்தூரிலும் ஆளுங்கட்சி கூட்டணி தலைவர் பதவியைக் கைப்பற்ற வெற்றி பெற்றுள்ள இரண்டு சுயேச்சைகளில் குறைந்தபட்சம் ஒருவரின் ஆதரவைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


அதேபோல், காடையாம்பட்டி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 உறுப்பினர்களில் அதிமுக கூட்டணிக்கு 8 இடங்களும், திமுக கூட்டணிக்கு 4 இடங்களும் கிடைத்திருக்கின்றன. இங்கே 7 சுயேச்சைகள் வெற்றி பெற்றுள்ள நிலையில், இவர்களில் குறைந்தபட்சம் 2 பேரின் ஆதரவைப் பெற்றால் அதிமுக கூட்டணி எளிதில் தலைவர் பதவிக்கு வந்துவிடும். அதேநேரம், திமுகவுக்கும் தலைவர் பதவிக்கான வாய்ப்பு இல்லை என்று சொல்லிட முடியாது. ஆனால் திமுக கூட்டணி தலைவர் பதவிக்கு வர அக்கூட்டணிக்கு இன்னும் 6 சுயேச்சைகளின் ஆதரவு தேவைப்படுகிறது.


சுயேச்சைகளின் ஆதரவைப் பெற திமுக, அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளுமே துணைத்தலைவர் பதவி, தேர்தலுக்கு செய்த செலவுத்தொகை, அரசு ஒப்பந்தப்பணிகள் என எக்கச்சக்கமாக ஆசை காட்டி வலையில் வீழ்த்தப் பார்க்கின்றன. ஆதரவு தெரிவிக்கும் சுயேச்சைக்கு குறைந்தபட்சம் 15 லட்சம் முதல் அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரை பேரம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆளுங்கட்சி சற்று ஒரு படி மேலே சென்று, சுயேச்சைகள் சிலரை மிரட்டும் தொனியிலும் பேசி வருவதாகவும் கூறுகின்றனர்.


ஆதரவுக் கடிதம் அளிக்கும் சுயேச்சைகளை மறைமுகத் தேர்தல் நடக்கும் வரை, கூவத்தூரில் எம்எல்ஏக்களுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுத்ததுபோல், அவர்களை உற்சாகப்படுத்தவும் இரு கட்சிகளும் திட்டமிட்டுள்ளன.


இது ஒருபுறம் இருக்க, சேலம் மாவட்டத்தில் சேலம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 10 உறுப்பினர் பதவியிடங்களில் திமுக, அதிமுக ஆகிய இரு கூட்டணிகளுமே தலா 5 இடங்களைக் கைப்பற்றியிருக்கின்றன. அதேபோல் ஏற்காடு ஒன்றியத்திலும் மொத்தமுள்ள 6 உறுப்பினர் பதவியிடங்களில் இரு திராவிட கட்சிகளும் தலா 3 இடங்களில் வென்றுள்ளன. இவ்விரு ஒன்றியங்களிலும் ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு ஆள் இழுப்பு வேலைகளும் நடந்து வருகின்றன.


ஒருவேளை, கட்சி மாறி வாக்களித்தாலோ, வெற்றி பெற்ற பிறகு வேறு கட்சிக்கு சென்றாலோ பதவி பறிபோய் விடுமா? என்று நீங்கள் கேட்டால், அப்படி எல்லாம் ஒன்றும் நடக்காது என்பதுதான் பதிலாக அமையும். கட்சித்தாவல் தடை சட்டம் என்பது மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர், மேலவை உறுப்பினர்களுக்கு மட்டுமே பொருந்துமே அன்றி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளை அச்சட்டம் கட்டுப்படுத்தாது.


மேலும், இரு கட்சிகளின் பலமும் சம அளவில் இருந்து, இரு தரப்பில் இருந்தும் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்யும்பட்சத்தில், அங்கு வேறு வழியின்றி பழங்கால முறையான குலுக்கல் முறையில்தான் தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எக்காரணம் கொண்டும் மறுதேர்தலுக்கு வாய்ப்பு இல்லை. அதேநேரம், வெற்றி பெற்ற ஒருவர், இறந்து விட்டால், அந்த பகுதிக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தப்படும்.


ஒன்றியக்குழுத் தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு வரும் 11- ஆம் தேதி (சனிக்கிழமை) மறைமுகத் தேர்தல் நடக்கிறது. தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் ஜன. 13- ஆம் தேதி பதவியேற்க உள்ளது குறிப்பிடத்தக்கது.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT