ADVERTISEMENT

என் கனவு இன்று மாறியிருக்கிறது... - கவுசல்யா சங்கர்!

04:33 PM Mar 15, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT


ஆணவக்கொலை செய்யப்பட்ட உடுமலைப்பேட்டை சங்கரின் பெயரில், அவரது மனைவி கவுசல்யா நேற்று சங்கரின் இரண்டாவது ஆண்டு இறந்தநாளில் (13 மார்ச்) "சங்கர் சமூகநீதி அறக்கட்டளை" அமைப்பின் அறிமுக விழா நடைபெற்றது. இதில் திருமுருகன் காந்தி, வளர்மதி, நல்லக்கண்ணு, ஜி.ராமகிருஷ்ணன், சமுத்திரக்கனி, எவிடென்ஸ் கதிர் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் கவுசல்யா பேசிய உரை...

ADVERTISEMENT

"அன்று சுமந்திருந்த கனவு இன்று அடியோடு மாறியிருக்கிறது. அன்று எங்கள் இருவரின் எதிர்கால கனவு மட்டும்தான் இருந்தது. ஆனால் இன்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்தின் சமத்துவமும், விடுதலையும்தான் எங்கள் கனவாக இருக்கிறது. அன்று சங்கர் மட்டும்தான் என் உலகமாக இருந்தான், இன்று என் கொள்கைகள்தான் என் உலகம். நான் என்பது என் லட்சியம்தான், சாதி ஒழிக, தமிழ் வாழ்க என்பதுதான் என் முழக்கம். இந்த மேடைக்கு பின் இருக்கும் காவல் நிலையத்தை என்னால் மறக்க முடியாது. என்னையும், சங்கரையும் நடுசாலையில் கடத்த முயன்றபொழுது இதே காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அன்று சங்கரைதான் உள்ளே இருந்த காவலர்கள் குற்றவாளிபோல் நடத்தினார்கள். எங்களை கடத்தியவர்களிடம் எந்த ஒரு கேள்வியும் கேட்கவில்லை. அவர்களை சுதந்திரமாக அனுப்பிவிட்டார்கள். நாங்கள் திருமணம் செய்துகொண்டதை குற்றமாகவும், அவர்கள் எங்களை கடத்தியதை கடமையாகவும் பார்த்தது இந்த காவல்துறை. அன்று மட்டும் அவர்கள் மீதுசட்டப்படி எங்கள் பக்கம் நின்று உருப்படியாக நடவடிக்கை எடுத்திருந்தால்,சங்கர் என்னோடு வாழ்ந்துகொண்டிருக்கலாம். இப்படி ஒரு மேடை அமைத்தும், நினைவேந்தலையும், அவன் பெயரில் அறக்கட்டளை அறிமுக விழாவும் நடந்திருக்காது. சங்கருக்கு நினைவேந்தல் விழாவிற்கு பொதுவெளியில் அனுமதிகேட்டால் அனுமதி தர மறுக்கின்றது அதே காவல்துறை. அனுமதி அளித்தால் சட்டஒழுங்கு பிரச்சனை வருமாம், பாதுகாப்பு அளிக்க முடியாதாம். பாதுகாக்கதானே நீங்கள் இருக்கிறீர்கள். எங்களை பாதுகாக்கதானே நீங்கள் இருக்கிறீர்கள் அதைவிட உங்களுக்கு என்ன வேலை என்று நாங்கள் கேட்கவில்லை. நாங்கள் போட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இப்படி கேட்டிருக்கிறது.

மற்றவர்கள் நடத்தும் நிகழ்ச்சிக்குதான் நான் இதுவரை சென்றுள்ளேன். இது நான் முன்னின்று நடத்தும் முதல் நிகழ்ச்சி. மக்கள் முன்னேற்ற முன்னணி, சங்கர் நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு சுவரொட்டி ஓட்டுவதை தடுக்கிறது காவல்துறை. இனிமேல் சுவரொட்டிகள் ஒட்டுவதை தடுத்தால் அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடப்படும். தோழர்களே, இனி நீங்கள் சங்கரின் நினைவேந்தலை பொதுவெளியில் நடத்தலாம், போஸ்டர் ஒட்டலாம், யாரும் தடுக்கமுடியாது. அதற்கான நீதிமன்ற ஆணை என்னிடம் உள்ளது வேண்டுமென்றால் கேட்டுபெற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் நிகழ்விற்கு அனுமதி மறுத்தவுடன் விலகி நிற்பதற்கு "நான் கோழை அல்ல பெரியாரின் பேத்தி". இங்கு கூடியிருக்கும் நமக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம், இலக்கு வேறுபாடு இருக்காது என்று நம்புகிறேன். சங்கர் சமூகநீதி அறக்கட்டளையை ஆரம்பித்ததற்கு காரணத்தை இங்கு வெளியிட்டுள்ள சிறு புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளேன். அதன் அடிப்படையில் ஒரு சில கருத்துக்களை, ஆதங்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன் இது குறித்து இழுத்துரைக்க இங்குள்ள அனைவருக்கும் உரிமை உண்டு.

சாதி ஒழிப்பிற்கும், சமூக நீதிக்கும் உழைத்தவர்கள் புழுங்குவது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இப்படிச்சொல்வதனால் அவருக்கு இதில் அக்கறை இல்லை, இவருக்கு அதில் அக்கறை இல்லை என்று பொருளாகாது. நாம் பல நேரங்களில் பிளந்து நிற்கின்றோம் என்பது மறுக்க முடியாத உண்மை. சாதி ஒழிப்புக்கு தமிழ், தமிழர் உரிமைக்கான போராட்டங்களே அடிப்படை. தமிழ் சமூக விடுதலைக்கு சாதி ஒழிப்பே அடிப்படை. ஆனால் இதையெல்லாம் செய்துகொண்டுதானே வருகிறோம் என்று சொல்லலாம். ஒரு களத்தில் கூர்மையாக போராடிக்கொண்டிருப்பவர்கள், மற்றோரு களத்தின் வெற்றியை லட்சியமாக கொண்டிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். சாதி ஒழிக, தமிழ் வெல்க என்பதே அறக்கட்டளையின் முழக்கமாகும். சாதி ஒழிப்பு, தமிழ் விடுதலை, தமிழ் சமூக விடுதலை அவை நேர்கோட்டில் நிற்கிற உயிர் கொள்கைகளாக மாறவேண்டும் என்று விரும்புகிறேன். அப்படியிருந்தால்தான் அது சாதி ஒழிப்புக்கு பயன்தரும் என்றும் நம்புகிறேன்.

இனிவரும் இளைய தலைமுறைக்கு இதனை கற்பிக்க விரும்புகிறேன். இளைய தலைமுறை என்று என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன். சாதி ஒழிக, தமிழ் வெல்க என்று கூறி கொள்கைகளுக்காக ஒப்புக்கொடுத்து உழைப்பேன் என்று சங்கர் மீது ஆணை செய்கிறேன். ஒன்று மட்டும் நண்பர்களே பதவிக்கும், சமரசத்திற்கும், அதிகார இணக்கத்திற்கும் இங்கு இடமில்லை. சட்டத்திற்கு உட்பட்டும், ஜனநாயகத்திற்கு உட்பட்டும், அறவழியில் மக்களுக்கு தொண்டுள்ளத்துடனும், பாட்டாளி உணர்வோடும் உழைக்க வேண்டும். இறுதியிலும் இறுதியாக பசியற்ற, சுரண்டலற்ற பாட்டாளி மக்களின் தமிழ் சமூகத்தை தமிழ் மண்ணில் உருவாக்க வேண்டும். அதற்குகூட சாதி ஒழிக,தமிழ் வெல்க என்ற முழக்கமே தொடக்கப்புள்ளி. அப்படி ஒரு பொன்னுலகை உருவாக்க இதற்கு காரணமான சங்கரையும் அழைத்துக்கொண்டு பயணிப்பேன். சங்கர் நினைவேந்தலில் எல்லாவற்றையும் விட நாம் ஒன்று செய்ய கடமைப்பட்டிருக்கிறோம், ஆணவக்கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம். அதற்கு இன்று மட்டுமில்லை, அனைத்து நாட்களிலும் நாம் உழைத்தாக வேண்டும். ஆணவக்கொலைக்கான தனிச்சட்டம்தான் சங்கருக்கான நீதி."

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT