/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/G out_0.jpg)
சமீபத்தில் கிருஷ்ணகிரியில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாமனாரே தன்னுடைய மருமகனை ஆணவக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து தன்னுடைய கருத்துகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஆணவக் கொலையால் பாதிக்கப்பட்ட உடுமலை கௌசல்யா...
கிருஷ்ணகிரி சம்பவத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட இருவரும் ஒரே சாதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இங்கு வர்க்க பேதத்தால் கொலை நிகழ்த்தப்படுகிறது. சொந்த சாதியாகவே இருந்தாலும் நாங்கள் சொல்லும் மாப்பிள்ளையை விட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்துகொண்டால் கொலை செய்வோம் என்கிற ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு தான் இந்தக் கொலை. சாதி இன்னும் ஒழிக்கப்படவில்லை என்பது நிதர்சனம். அதனால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவள் நான். இன்றும் போராடிக் கொண்டிருக்கிறேன்.
பெரியாருடைய பணிகள் சாதியம் எவ்வளவு கொடூரமானது என்பதை நமக்கு உணர்த்தியது. அவருடைய பணிகளை நாம் அனைவரும் தொடர வேண்டும். ஒருவேளை சங்கருக்கு பதிலாக அன்று நான் கொல்லப்பட்டிருந்தால் அது சாதாரண கொலை வழக்காகத் தான் பதிவு செய்யப்பட்டிருக்கும். அதனால்தான் ஆணவக் கொலைகளுக்கு எதிராக தனிச்சட்டம் வேண்டும் என்று கேட்கிறோம். நிறைய பெண்களுக்கு தங்களுடைய துணையைத் தேடுவதற்கான வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அதுவும் ஆணவக் குற்றம்தான்.
சாதி வெறி பலருக்கு ஊறிப்போய் இருக்கிறது. சாதி வெறி இல்லாமல் இருக்கும் பலரும் முற்போக்கு இயக்கங்களுடன் கைகோர்ப்பதில்லை. சாதி ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்குக் கூட இங்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்படுகின்றன. சாதி மறுப்புத் திருமணங்களை அரசு தொடர்ந்து ஊக்குவிக்க வேண்டும். அப்படிதிருமணம் செய்துகொள்பவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். அவர்களுடைய குழந்தைகளுக்குகல்வியில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
அரசியல்வாதிகளும் வாக்கு வங்கிக்காக இதில் பல சமரசங்களைச் செய்துகொள்கின்றனர். இந்த விஷயத்தில் உடனடித் தேவை என்பது ஆணவக் கொலைகளுக்கு எதிரான, சாதி மறுப்புத் திருமணங்களுக்கு ஆதரவான சட்டங்கள் தான்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)